கடவுள்களை வழிபடச் செய்யவைப்பது எமது வேலையல்ல...

 மெய் அழகன் படத்தில், இப்படி ஒரு காட்சி வருகிறது. கார்த்திக்கின் வீட்டில் பெரியாரின் படமும் இருக்கிறது. அதை அரவிந்த் சாமி பார்க்கிறார். 'அவங்கள் எல்லாம் இங்கதான் இருப்பாங்க எங்கும் போக மாட்டாங்க' என்கிறார் கார்த்திக். பெரியாருக்குப் பக்கத்தில் இருக்கும் கடவுள் முருகன். அப்படியே கார்த்திக்கின் துணைவி (மன்னிக்கனும் மனைவி) பக்கம் கமரா திரும்புகிறது... குங்குமமும் தாலியும் சேலையுமாக ஒரு குடும்ப குத்துவிளக்கு 'டிபன் ஏதாவது செய்யட்டுமா அண்ணா' என்று கேட்கிறா....


பெரியார் என்னைப் பார்த்து பரிதாபமாக சிரித்தார். நான்- 'உனக்கு வந்த சோதனை' என்று பெரியாரைப் பார்த்து சொல்லிவிட்டு முழுப்படத்தையும் பார்த்து முடித்தேன்.

இந்து மதமும் அதன் பெருங்கதையாடல்களும் நம்முடைய மூதாதேயர்களின் சிறு தெய்வ வழிபாடுகளை அபகரித்துக் கொண்டது உண்மைதான்.
அதைப் பேசுவது என்பது, வரலாறறைப் பேசுவது. அது தேவையான ஒன்றுதான். அதற்காக முருகனை பெரியாரின் பக்கத்தில் காட்சிப்படுத்துவதின் நோக்கு என்ன? கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பெரியாரின் படத்தை வீட்டில் வைத்திருக்க கூடாதா என்று லாஜிக்கா கேள்வி கேட்பதற்கு முன். பெரியார் என்பவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சியுங்கள். படத்தையும் பாருங்கள்.

'முருகன் தமிழ் கடவுள். அவனை வணங்கள்' என்று பெரியார் சொல்லி இருந்தாலும் பிழைதான்.! ஏன் என்றால் பின் அவரை பகத்தறிவளர் என்று நாம் எப்படி சொல்லியிருக்க முடியும்.

இங்கு முருகன் மட்டும் கடவுளாக்கப்பட வில்லை பெரியாரும் கடவுளாக்கப் பட்டிருக்கின்ற கொடுமையே நிகழ்ந்திருக்கிறது. பெரியார் ஒரு சமூகப் போராளி அவருக்கு மாலைப் பொட்டு பொட்டு வைத்து, இந்து மத அடையாளங்களாக மாறிப்போயிருக்கின்றவற்றை அவருக்கும் சாத்தி முருகனோடு மங்களகரமாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.



அப்படியே அவர் சொன்ன பெண் விடுதலை, சுய மரியாதை திருமணம், பகுத்தறிவு சிந்தனை குடும்பம், உறவு எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு. ரொமண்டைஸ் பண்ணப்பட்ட பெண்ணுடுக்குமுறை குடும்பத்தையும் காட்சியையும் வைத்து விட்டு பெரியாரின் படத்திற்குப் பொட்டும் பூவும் வைத்துக் காட்சிப்படுத்துவது பெரியாரின் நோக்கையும் சிந்தனையையும் புதைத்து விட்டு அதன் மேல் தயாரிப்பார் காசு பார்க்க நினைத்தது மட்டுல்லலாமல் இந்துவா சிந்தனைக்குப் பால் வார்க்கவும் செய்யும் போக்கு.

இன்று தமிழ் நாட்டின் தேர்தல் களம் எல்லாவற்றையும் தீர்மானிப்பதாக இருக்கிறது. பெரியாரினதும் மற்றைய விடுதலைப் போராளிகளினதும் சமூக விடுதலைப் போராட்ட வரலாறு 'தேர்தலில் வெற்றி' என்பதற்குள் புதைக்கப்படுகிற அயோக்கிய அரசியலே நடக்கிறது. இலகுவில் அவற்றை அழித்துவிடுவது முடியாது என்ற நம்பிக்கை இருந்தாலும் அதிகார நலன்களுக்கான பிச்சுப் பிடுங்கலில் இவை அடிபட்டுப் போகக் கூடிய ஆபத்தும் இருக்கின்றது.

வரலாற்றையும் சமூகத்தையும் அதன் இயங்கு போக்கில் புரிந்து கொள்ள முடியாத சமூகம்தான் நம்முடையது. சமூக அறிவு மட்டம் சமூக விடுதலை நோக்கி அதிகம் வளர வேண்டியும் உள்ளது. அதே நேரம், பெரியாரையோ வேறு தத்துவக் கோட்பாடுகளை வாசித்துப் புரிந்தோ இல்லாத இளைஞர்கள்தான் அரசியல் தாகத்தோடும் உணர்வுகளோடும் பொதுத்தளங்களில் உலாவுகிறார்கள். அவர்களைச் சீமான் போன்றவர்கள் இலகுவாகக் கவர்ந்து கொள்கிறார்கள். பெரியாரையும் ஏன் வரலாற்றையும் கூட தமிழ் நாட்டின் எதிரியாக்க முடிகிறது அவர்களால். இவற்றை எல்லாம் நாம் யோசித்துத்தான் ஆக வேண்டியுள்ளது. அதற்கான எமது பலகீனத்தையும் நாம் சுய விமர்சனம் செய்ய வேண்டியுள்ளது.

பெரியாரிஸ்ட்டுள் என்று சொல்லுகிற இளைஞர்களும் ஒரு குட்டி முதலாளித்துவ சிந்தனையிலிருந்து விடுபட முடியாதவர்களாகவும் அவர்களுக்குப் பெரியாரைத் தாண்டி எதுவும் வேண்டாம் எல்லாம் அவருக்குள் மட்டும் இருக்கிறது- என்ற விசுவாச மன நிலை இருப்பதையும் பார்க்கக் கூடியதாக இருக்கத்தான் செய்கிறது. இந்த விசுவாச மன நலை திராவிட கட்சிகளினால் தமது தேர்தல் நலன்களுக்காக வளர்க்கப்படுகிறது.

வரலாற்றை மீட்பது என்ற பெயரில் முருகனைக் கடவுளாக்குவதும் முனியாண்டியைத் தெய்வமாக்குவதும் எமது வேலையல்ல. வரலாற்றை மீள் வாசிப்பதும், அதைக் கல்வியாக்குவதும் முக்கியமானது. ஆனால் அந்த வரலாற்றைப் பின்பற்றச் சொல்வது எத்தனை ஆபத்தானது. இப்படி எல்லா வரலாறுகளையும் மீட்டு பின் பற்றத் தொடங்கினால் போராடி வென்றெடுத்த சமூக நீதியும் உரிமைகளும் என்னாவது.

எமக்கு வேலை, கிருஸ்னரை எடுத்து விட்டு அந்த இடத்தில் முருகனை வை, வகாபிசத்தை எடுத்து விட்டு அந்த இடத்தில் சுபீசத்தை வை , வெள்ளைக்காரனை விரட்டி விட்டுப்போட்டுப் பார்ப்பனை வை, சிங்களைவனை விரட்டி வெள்ளியத்தை வை என்று சொல்வதா?. மக்களை ஒடுக்கு முறையிலிருந்து விடுவிப்பதா?! தமிழ்த் தேசிய விடுதலையும் அதனடிப்படையிலானதாகத்தான் இருக்க முடியும்.

வரலாற்றுச் சமூக விஞ்ஞான அறிவை கற்பிப்பது, போராடும் குடிமக்களாக மாற்றுவது, கேள்வி கேட்க வைப்பது, அதுதானே எல்லாவற்றுக்குமான தீர்வாக அமையும். வரலாற்றை மீட்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவம் மோசமானதாக இருக்கிறது அதற்கு முன்னிருந்த நில உடைமை சிந்தனையைக் கொண்டு வருவோம் என்றால் எத்தனை அபத்தம்? இது என்ன அறிவார்ந்த முறை?. ஒரு மார்க்ஸிச சோசலிஸ்ட் சிந்திப்பதற்கும் மற்றவர்கள் சிந்திப்பதற்கும் உள்ள சிக்கல் இதுதான். ஒரு மாக்ஸ்சிஸ்ட் கிருஷ்ணரை எடுத்து விட்டு முருகனை வை என்று சொலவே மாட்டார். முருகன் பற்றிய வரலாற்றைப் புகட்டுவார் புகுத்த மாட்டார்.

**திரும்பவும் சொல்கிறேன், சிறு தெய்வ வழிபாடுகளை மீட்பது என்பது வரலாற்றைச் சொல்லிக்கொடுப்பது அல்லது கற்பிப்பது. அவற்றை பின் பற்றச் சொல்லி பிரச்சாரம் செய்வதல்ல. **

நம் தாத்தன் பாட்டி, மரம்- செடி- கொடிகளையும், நெருப்பு- நீர்- பாம்பு போன்றவற்றையும் தெய்வ வழிபாட்டில் வழிபாடு செய்துதான் இருக்கின்றனர். ஆனால் இங்கு முருகனை மட்டும் மீட்க்க நினைப்பது ஏன்?. தமிழர்களான எம் தாய் தந்தையருக்கு ஒரு ஆன்மிகம் தேவைப்படுகிறது என்பவர்கள் மேற் சொன்ன பொருட்களை எடுத்து விட்டு முருகனை மாத்திரம் சொல்வது ஏன்?. இவர்களுக்குள் ஒழிந்திருப்பது இவர்களையும் அறியாமல் அல்லது அறிந்து ஒரு வகை சங்கித்தனத்தின் ஒரு கூறாகள்தான். இது 'தாய் மதம் திரும்பு' என்பதின் இன்னொரு வடிவம்.

வரலாற்றைக் கற்பிக்கும் பொழுது அதில் சிலர் அல்லது பலர் முருகனையும் முதற்கடவுளாக ஏற்பர். ஆன்மீகம் தேவைப்பட்டவர்கள் அதில் ஈடுபடுகிறவர்கள் முருகனை முதற்கடவுளாய் ஏற்பதில் சிக்கல் இல்லை எமக்கு. ஆனால் பொதுவில் முருகனைத் தமிழர்களின் கடவுளாக்கும் போது அது மிகப் பெரிய காமடி கூத்தாகிவிடும். தமிழ் மொழியையும் அதன் பண்பாட்டையும் பொதுவானதாயும் அறம் பொதிந்ததாகவுமே நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அதுதான் தமிழுக்கும் இனிவருகிற தமிழ்ச்சமூகத்திற்கும் அதன் பண்பாட்டிற்கும் அறமும் அறிவும் செய்யும்.

.**மனிதர்களுக்கு, மதமும் கடவுள்களும் ஏன் தேவைப்படுகிறார்கள் என்ற கேள்வியிலிருந்தே நாம் கடவுள் நம்பிக்கையைப் பார்க்க வேண்டும். அதற்காகக் கோயில்களை இடித்து கடவுள்ளை உடைத்து விடுவது என்பதல்ல. முதலாளித்துவ சிந்தனை தன்னை தக்க வைக்க அறிவில் சிந்தனையை மக்களிடம் மடக்கி கடவுள்களையும் மதத்தையும் விநியோகிக்கும். **

இன்று முருகன் தமிழ் கடவுள் என்பார்கள்- நாளை மூலதனம் சிலருக்காக முருகன் கொடுத்த அருள் என்பார்கள். அறிவும் சமூக அறிவியல் வளர்ச்சியையுமே மக்களுக்கு வேண்டும். ஒழிய நிலவுடைமை சிந்தனையை அல்ல.
 

-பாரதி சிவரராஜா-

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!

கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்