சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள்

சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள்.

. TU சேனன் அவர்கள் எழுதி, ஏப்ரல் 2020 வெளிவந்த இந்த நாவல். பெயருக்கு ஏற்றால் போல் வினோத சர்ச்சைகளிலும் சிக்கியது. இது இவருடைய இரண்டாவது நாவல். 

 நாவல், இலக்கியம் என்று அதிக ஈடுபாடு காட்டாத இடதுசாரி அரசியல் தொடர்பான வாசிப்பு, செயற்பாடுகளிலும் ஈடுபாடுடைய என் போன்றவர்களுக்கு அவருடைய லண்டன்காரன் இஞ்சி தேனீருக்கு அளவாக சேர்த்த சீனிபோல் பருக இதமாக அன்று இருந்தது.


 

அரசியல் சமூக விஞ்ஞான மொழி என்பவை நேரடியானவை. அவை பிரச்சனையை விபரிக்கும் போதும் தீர்வை சொல்லும் போதும் அது கொண்டிருக்கின்ற தன்மை வெளிப்படையாகவும், நேரடியாகவும் இருப்பவை.
இலக்கிய மொழி இதிலிருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்று பழக்கப்பட்டவர்கள் நாம். அதாவது சப்பிச் சப்பித் துப்புவதை அழகியல் என்று கொண்டாட சொல்வதாக இருக்கிறது. 


என் போன்றவர்களுக்கு அரசியல் நாவலில் குறைந்தது இரண்டும் ஒரளவு சமவளவாக இருந்தால்தான் படிக்க முடியும் என்று நினைக்கிறேன். என் வாசிப்பு இரசனைக்கும் பொறுமைக்கும் பொறுத்தளவில் சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள் இந்த சமளவை கொண்டிருப்பபதாகவே தோன்றுகிறது.


இப்புத்தகத்தைப் பற்றி எழுதத்தொடங்கும் போதே ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு பிரதி என்பது வெறுமனவே பிரதி என்ற பதத்தில் இருந்து மட்டும்தான் படிக்கப்பட, விமர்சிக்கப்பட வேண்டும் என்ற தர்க்கத்தில் எனக்கு உடன் பாடில்லை. பிரதி எழுதும் ஒருவர் கொண்டிருக்கின்ற சமூக, அரசியல் நிலை என்பது எப்படி முக்கியமோ அதே போன்று பிரதியை வாசிப்பவருக்கும் சமூக, அரசியல் நிலைப்பாடு இருக்கும் என்பதை முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும்-என்ற புரிதலில் இருந்தே தொடங்குகிறேன்.

 'சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள்' என்னளவில் ஒரு முக்கியமான நாவல் ஏன் என்றால் நான் இது வரை படித்த இறுதி போர்-பிந்தைய காலம் தொடர்பான நாவல்கள் எதிலும் பெண் பாத்திரங்களை கருவாக அதாவது நாயகிகளாக கொண்டு வந்த புத்தகம் இல்லை. (அப்படி இது வரை வந்திருக்கிறதா என்றும் தெரியவில்லை.) அல்லி என்ற பாத்திரம் சிலர் சொல்வது போல் ஒரு இயக்கத்தில் இருந்த பெண் போராளியாக எனக்கு உணர்த்தவில்லை மாறாக அது அந்த இயக்கத்தினுடைய தலைவராகவே பல நேரங்களில் உணர்த்தியது. அதுதான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றியும் என்று நான் பார்க்கிறேன். வாசகர் இப்படி கற்பனை செய்வார்களா என்று கதையாசிரியர் மனதில் கொண்டெழுதியிருப்பாரா என்று எனக்கு சந்தேகம்தான்.
ஆனாலும், வாசிப்பு அனுபவம் என்பது நாவலாசிரியர் எதிர்பார்க்காத தளத்தில், கருவில் பேசுவதுதானே அவருக்கான அங்கீகாரமாக இருக்க முடியும். வாசிப்பும் அது தரும் உந்துதலும் அவரவர் மனநிலை, அரசியல் அடையாளம் சார்ந்து செல்வாக்கு செலுத்தும்.

 -தூக்க முடியாத ஆயுதம்-கொல்ல முடியாத உயிர் என்ற எந்த தயக்கமும் இனி இல்லை. யுத்தத்திற்கு பதப்படுத்தப்பட்ட ஆத்மா அன்று அமைதிக்கு வரத் தயாராகவில்லை' இது வலிய சீவன்-

 நாவலின் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே இப்படிதான் அல்லியை அறிமுகப்படுத்துகிறார் நாவலாசிரியர். ஒரு பெண் தலைமை பாத்திரம் எனக்குள் எழுப்பிச் சென்ற கேள்விகள் அதிகம். இதில் முக்கியமானது பெண்களால் இந்த போராட்ம் வழி நடாத்தப்பட்டிருந்தால் இந்த அழிவுகள் நிகழ்ந்திருக்குமா? எமது ஆயுதப் போராட்டம் எத்திசைகளில் பயணித்து, எவ்வழிகளை மறுத்து சென்றிருக்க வாய்ப்புகள் பெற்றிருக்கும். எத்தகைய வடிவில் மாற்றங்கள் கொண்டியிங்கியிருக்கும் என்பதாக என் கற்பனை-அறிவையும் சுண்டி விட்டது பொய்யல்ல. படைக்கும் சக்தியாக இருக்கும் பெண்களிடம் இயல்பாகவே இருக்கின்ற தலைமை பொறுப்புகளை தட்டிக் கழிக்கும்-பறிக்கும் ஆண்மைய அரசியல் எத்தகையது, யாருக்கானது என்ற கேள்வியும்தான். (இங்கு அல்லி பெண் பெயர் கொண்ட ஆண்படைத்த பாத்திரமாகவே வருகிறாள் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்) 



 ஒரு பெண்ணை பூவாக, தென்றலாக, மென்மையாக, பூமியாக கொண்டாட விரும்பும் அதே ஆண்சமூகம் தங்களுக்கான நலன்கள் என்று வரும் போது பெண்ணை அவர்கள் கற்பித்த இவற்றுக்கு எதிர்-முரண் நிலையில் நிறுத்தி தங்களது நலன்களை நிறைவேற்றிக் கொள்கிறது. ஆக, பெண் என்பவள் போருக்கான புலியாக இருந்தாலென்ன, பூவாக இருந்தாலென்ன தந்தைமையசமூகம் விரும்பும் ஒன்றுக்காக வளைய, நெளிய, நிமிரவே வளர்க்கப்படுகிறாள். 

 நிற்க, 
அல்லி முதல் காட்சியில் யதார்த்த பாத்திரமாக வர அடுத்த நிலையில் ஒரு சாதாரண பெண்ணின் மனதில் சிங்கள இராணுவத்தினரின் அட்டூழியத்தை எதிர் கொள்ள வீரம் கொண்ட (சுப்பர் வுமனாக) வருகிறாள். 

 -ஒரு உதையில் அவனின் மண்டை சிதற வைக்கும் வீரியம் இந்த பாரிய அண்ட அகிலத்தில் அல்லி ராணிக்கு மட்டுமே உண்டு- மீண்டும் இந்த வரிகள் புத்தகம் பேசுகின்ற யுத்தத்தோடும் போராட்ட வரலாற்றில் விட்டுச் சென்ற பிம்பத்தின் தொடர்ச்சியான பொது சிந்தனையையும் மனக்கண்ணில் கொண்டு வருகிறது. -அல்லியின் பிறப்பை நிறுத்தும் வக்கு யாருக்குண்டு- 

என்ற வரி அதை வலிமைப்படுத்துகிறது. அடுத்து வருகிற வரிகள் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரை மீண்டும் என் மனதில் கொண்டு வந்தது

 -அல்லி என்ற பெயர் உச்சரிக்கப் பட்டப்பொழுது யாழ்ப்பாண ஆஸ்பத்திரியே ஒரு ஆடு ஆடியது- 

 நான் மீண்டும் இதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். சரி பிழை அரசியலுக்கு அப்பால் உலகமே திரும்பி பார்க்க வைத்த ஒரு தலைவரை பெண்ணாக கற்பனை செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்த கற்பனை அலாதியானதுதான். 

ஆனால் அல்லி என்ற பெயர் புலக்கத்தில் இல்லை, பிறருக்கு வைப்பதில்லை என்ற வரிகள் நான் செய்து கொண்ட கற்பனைக்கு கொஞ்சம் முரண்தான். ஆக அடிபட்டு கிடந்த அல்லி சாகாமலே மீண்டும் பிறக்கிறாள்-வளர்கிறாள், இன்னுமொரு தலைப்பின் பக்கத்தில்.. 


இந்த சொற்ப சந்தோசம் புதை குழிக்கு போவது போல் அல்லி அர்ச்சுனன் கதை பின், அவள் பாம்பை புணர்வது என்று மேற்கூறிக் கொண்டு வந்த பாத்திர புனைவு ரிதத்தில் இருந்து விலகி முதல் குஸ்த்தி அடிக்கிறது நாவல்.. 

ஒரு அழகிய பாத்திரத்தை கெடுப்பதாக சொல்லி வைத்த புராண தகவல்களை விதைத்துவிடும் அவசரம் தெரிகிறது. தகவல்களை முன் சொன்ன, சொல்லப் போகும் பாத்திரங்களின் சுருதியில் இணைக்க  அத்தனை கஸ்டம் ஏன் ஆசிரியருக்கு வந்தது என்று எனக்குப் புரியவில்லை. 

 மொழி: 
மொழி-புதுக் கவிதையை போல் படிக்க மிக இலகுவாக இருக்கிறது. அதற்குள் சொல்ல கூடிய பாத்திரங்களுக்கு ஏற்றால் போல் அந்த மொழி தெரிவு செய்யப்பட்டதா அல்லது மொழிக்காக பாத்திரங்களைத் தெரிவு செய்து கொண்டாரா ஆசிரியர் என்று பாராட்டத் தோன்றியது.

 இடக்காலில் ஓரு துள்ளல்... அதற்கு ஒரு உதாரணம். 

அடுத்து, யுத்தத்தின் தீவிர தாக்கங்களை விவரித்து வர்ணனை செய்யும் விபரண மொழியைக் கொண்டு எம்மைத் தாக்குவதை தவிர்த்தமை. இது ஒரு நல்ல உத்தியாக எனக்குப் பட்டது. அதாவது வர்ணனைகளால் யுத்த கொடூரங்களை, இழப்புகளை சொல்லாமல் வார்த்தைகளை தெரிவு செய்ததின் நூடாக அதை உணர செய்து விடுவது இயல்பாக நாவலில் வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

 -தசைகளில் இரும்பு தைப்பது மரத்த மண்டைக்கு செல்ல முடியாத அளவு நரம்புகள் இறுக்கிக் கிடந்தன. குருதி வழிய வழியவும் எலும்பும் தசையும் இழுத்துச் செல்லும் வைராக்கியம் மரத்த மண்டைக்குண்டு- (இரண்டு தடவை வராமல் இருந்திருக்கலாம்.) 

 அதே போன்று, தடித்த யாழ்ப்பாண தந்தையின் (ஆணின்) குணத்தை அப்படியே கொண்டு வருகிறார். உண்மையில் நான் அழுத பக்கம் என்றால் அதுதான். தற்கொலை போராளியான தனது மகன். அதை அறியாத தந்தை -அவன் போக முதல் அவரைக் கட்டிப்பிடிச்சு கொஞ்ச வந்த போது தள்ளி விடுகிறார். ''மாடு மாதிரி வளர்ந்திருக்கிற உனக்கென்ன கொஞ்சல் கேட்குது' அன்பை வெளிக்காட்ட தெரியாது, பின் அதன் கனம் தாங்காது 'ஐயோ!' எனக் கத்தி அதை கரைக்க முயலும் காட்சி அது. 



 சாதனாவின் பிறப்பை, அவள் வளர்வை சொல்லும் போக்கு வழமை போல் நாவலில் வித்தியாசமாவே இருந்தது.

 'இளையான்களை அடிப்பது எப்படி' நான் இரசித்து படித்த அத்தியாயம். அது நமது உளவியல். நாம் வெறுத்துப் போயிருக்கும் யதார்த்த அரசியல் பக்ககங்களை நகைப்பதும் சீண்டுவதும் எமக்கொருவகையில் மகிழ்ச்சியை கொடுக்கும் விடயம்தானே. வாசகர்களின் அவ்வுளவியலைப் புரிந்து இந்த அத்தியாயத்தை வடித்திருக்கலாம் என்று நம்புகிறேன். ஆனால் பெயர்களை தெரிவு செய்ததில் விரும்பியே தன்னை சர்ச்சையில் சிக்குப்பட வைக்கும் முயற்சியாகவும் பட்டது. இன்று அரசியல் அதிகாரத்தில் இருக்கின்ற பெயர்கள் அவை. ஆனால் மகிந்த, கோத்தா பெயர்களை பாத்திரங்கள் கொண்டமையால்தான் சிறப்பாக சுவரஸ்யமாக அமைந்திருந்தது. 


 ஒட்டு மொத்தத்தில் நான் படித்து புரிந்து கொண்ட அல்லது எனது நாவல் வாசிப்பு மட்டத்திருந்து எனது இரசனைக்கு அமைய இந்நாவலில் சொல்ல மிக அருமையான புதுமையான விடயங்கள் இருக்கின்றன. குறியீடாக வரும் பாத்திரங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. குறியீடாக பல விடயங்கள் இரண்டு, மூன்று அர்த்தப் புரிதல்களில் படிக்கக் கூடியதாக சொல்லப்படுகிறது என்று நான் உணர்கிறேன். 

 மீண்டும் மீண்டும் நான் சிலாகித்து பார்க்கும் விடயம் இன அழிப்பிற்குப் பின்னால் வந்த(நான் படித்த) நாவல்கள் கொண்டிராத அதிகமான பெண்பாத்திரங்களையும் அப்பாத்திரங்கள் கொண்டிருக்கின்ற முக்கியத்துவத்துவமும் முக்கியம் என்பதைத்தான். 
அல்லி 
சாதானா
 விமலா
 கிளியக்கா
 குமுதா

 இனியொரு சாவல் செய்வோம்... 

பாரதி ஒரு கல்யாண வீட்டுக்கு போகிறாள் அல்லது அழைக்கப்படுகிறாள். அவளது தோழர் ஒருவரது அது. பொதுவாக அவள் கல்யாண வீடுகளுக்கு போவதே மிக மிக குறைவு. வாழ்நாளில் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அதுவும் பாதியில் வெளிக்கிட்டவைதான். தனது சொந்த சகோதரனின் கல்யாண வீட்டிலேயே சகிக்க முடியாமல் அடுத்த நாள் கொழும்புக்கு அப்போதே பஸ் எடுத்த பிள்ளை அவள். 


 எல்லோரும் அவளை அன்பாக வரவேற்று, உணவு, இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டன. 'செம பிரியாணி'. மாப்பிள்ளை முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.. 

சாப்பிடும் போது உண்மை விளம்பி இடதுசாரி வெறுப்பாளர் பாரதிக்கு பக்கத்தில் அமர்ந்தது மாப்பிள்ளையின் கஸ்ட் காலம். வலதுசாரி ஆசாமிக்கே உறுத்தும் படியாக மாப்பிள்ளைக்கு 50 இலட்சம் சீதனம், கார், 'இலண்டன் மாப்பிள்ளையாச்சே'... 

காதருகில் போட்டு விடுகிறார். தாலி, ஐயர் என்று ஏற்கனவே கடுப்பாகியிருந்த பாரதிக்கு முட்டிக் கொண்டு இருக்கிறது மூத்திரம் மட்டுமல்ல. கட்டப்பட் தாலியும் கேட்டு வாங்கிய 50 இலட்சமும்.   


அடுத்த நாள் நண்பர் ஒருவர் பாரதியிடம் அந்த கல்யாணத்தைப்பற்றி கேட்கிறார். பாரதி எதைப்பற்றி பேசுவாள்.. !! 

''பிரியாணி வாசத்தையும் கட்லட்டின் டிசைனையுமா?? ''

 ஒரு சமூகத்தை விமர்சனப்பார்வையுடன் பார்க்கின்ற எந்த ஒரு அரசியல் பார்வை பெற்றவருக்கும் இருக்கின்ற மிகச் சாதாரண விமர்சனப்பார்வையே அது. நாம் அப்படிதான் நம் பாதைகளை கடந்து வந்திருக்கிறோம். இது இலக்கியமாக இருந்தாலென்ன இதிகாசமாக இருந்தாலென்ன. அதுதான் நாம்.


நான் இலக்கிய இரசனை இல்லாதவள் அல்லது தெரியாதவள் என்பதில் வெட்கப்பட எனக்கு எதுவுமில்லை. இது என்னைப் பெருமைப்படுத்தும் விடயமாக பார்க்கக் கூடிய அரசியலை பெற்றிருக்கிறேன். ஒரு ஒடுக்குமுறை சம்பவத்துக்கு துணை நிற்பவள் அவள் என்றால் தான் நான் கூனி வெட்கப்பட வேண்டும். மற்றதெல்லாம் என் அரசியலுக்கு அப்பாற் பட்டவை.

சித்தார்த்தனின் வினோத சம்பவங்கள்... ஆரம்பத்தில் பொசிட்டிவாக சொன்ன விடையங்களில் இருந்தே எனது எதிர்மறையான விமர்சனத்தையும் தொடங்குகிறேன். 

இந்த பெயரே எனக்கு கொஞ்சம் இடிக்கிறது. முழுமையாக நாவலை ஆக்கிரமித்து இருப்பது அல்லியும் சாதனாவும் என்ற பெண் பாத்திரங்கள். சித்தார்த்தன் என்ற பாத்திரத்துக்கு பெரிதாக அழுத்தங்கள் எதுவுமே இல்லை. கண்ட மேனிக்கு அங்கங்கு உதிக்கிறார்- சொதப்புகிறார். ஆக இந்த நாவலுக்கு அல்லி என்ற பெயரை தெரிவு செய்திருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். திரள் குழுவினர் நடாத்திய நிகழ்வில் ஆசிரியர் சொன்னதன் படி அப்பெயர் நாவலில் உள்ள குறியீட்டுப் பாத்திரங்களை புரியவைக்கவே என்று மேலோட்டமாக உணரலாம். 


என் கவலை எல்லாம் நாவலாசிரியர் இந்த பெண்பாத்திரங்களை பிரஞ்ஞை பூர்வமாக அதாவது உள்ளுணர்வில்தான் படைத்தாரா என்பதே. 

யுத்தம் என்பதில் முதல் விக்டிம் பெண்களும் குழந்தைகளுமே. இருந்த போதும் பெண்களை ஆளுமை நிறைந்த குறியீடுகளாக காட்ட வேண்டும் என்ற அரசியல் புரிதல் இருந்ததாக தெரியவில்லை. இந்த நாவலில் எனக்கு பிடித்தது மொழி நடைதான். ஆனால் அந்த மொழிக்குள் இருக்கின்ற அரசியல் பற்றிய புரிதலற்று பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் நாவலாசிரியர் பெண்ணிய அரசியலை பிரஞ்ஞை பூர்வமாக அறிந்தோ தெளிந்தோ இருக்கவில்லை என்பதையே. 

 ஒரு பெண்ணாக அதை சகித்துக் கொண்டால்தான் நீங்கள் இலக்கிய ஞானப்பால் குடித்தாக நாம் நம்புவோம் என்றால் அந்த பாலை நீங்களே குடித்து பின் வாந்தி எடுங்கள். ஆனால் எங்கள் கால்களில் மிதிபட்டால் கழுவாமல் போகச் சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை. 

நாவல், பாத்திர அமைப்புகள் சிக்குப்பட்டு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாமல் இருந்தாலும் வாசகர் இரசிப்பதற்கும் கற்பனை செய்வதற்கு குறிப்பிட்டளவு உதவுகிறது. ஆனாலும் நாவலாசிரியர் யார், அவரது அரசியல் செயற்பாடு என்ன என்ற புரிதலோடு ஒரு பெண் வாசகியாக படிக்கும் போது மொழி கொண்டிருக்கின்ற அரசியல் பிரஞ்ஞை என்பது புத்தகம் முழுதும் மிக போதாமையாக எனக்கு ஆச்சரியமளித்தது.

 நான் நாவலைப் படிக்கும் போது நாவலில் என்னை கவர்ந்த விடயங்களைக் குறித்து வைக்கவில்லை. காரணம் நாவலாசிரியர் என் சக தோழர் என்பதும் அதை நான் உரையாடல்கள் ஊடாக சொல்லியும் இருக்கிறேன் என்பதுமாகும். ஆக எனக்கு விமர்சன அரசியலை நோட்டமிடுவது இயல்பாக அமைந்து விடுவது உண்டு. 

அரங்குகளில், பொது வெளிகளில் பேசிப் பழக்கமில்லாத எனக்கு திடிர் என பேச வெளிக்கிடும் போது அவைதான் வெளிப்படும். அதற்காக ஒரு நூலோ நிகழ்வோ கொண்டிருக்கிற நல்ல விடயங்களை பேசக் கூடாது என்றோ, இருட்டிப்புச் செய்யவேண்டும் என்ற கயமைத்தனம் எல்லாம் நானே நினைத்தாலும் என்னிடம் வராது. 


 எனக்கு நாவல்கள் படிப்பதில் பெரிதாக ஆர்வமிருப்பதில்லை காரணம் ஒரு நாவல் சமூகத்தை Description செய்யுமே ஒழிய பிரச்சனைக்குரிய Prescription தராது. அரசியலில் ஆர்வமுள்ள எனக்கு அது ஒரு எல்லைக்கு மேல் சலிப்பைத் தந்து விடும்.

அதனடிப்படையில், உண்மையாக எனக்கு ஆர்வமாக அல்லது சவாலாக இருந்தது ஆரம்ப பக்கங்கள்தான் அதை ஏன் இத்தனை குழப்பமாக செய்தார் நாவலாசிரியர் என்பதே என் வருத்தம். என்ன குழறுபடியை செய்தாலும் குஸ்த்திக்கரணம் அடித்தாலும் படிக்கும் வாசகர்கள் இந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு சிறு புள்ளியிலாவது உள்ளார்ந்த இசைவை தேடுவர். அதை முழுதாக கவனம் கொள்ளாமல் நான் சொல்வதைத்தான் சொல்லுவேன், நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதாக எழுதியது போல் இருந்தது.


 ஒரு வாசகர் படித்து விட்டு கேட்கும் கேள்விக்கு 'ஒழுங்கா படியுங்கள். உங்களுக்கு வாசிக்கத் தெரியாது, தமிழ் வாசகர்களோடு மல்லுகட்ட முடியாது, மொக்கு கூட்டம் அரசியல் தெரியாது' என்ற முன் கூட்டிய தயாரிப்பு பதில்களோடு எழுதப்பட நாவல் எப்படி ஒரு சொதப்பு சொதப்பும் என்பதற்கு ஒரு உதாரணமாகவே இதை நான் பார்க்கிறேன். 

மிக அருமையான முயற்சி, கொஞ்சம் கவனம் செலுத்தி கூர்ந்து கொஞ்சமாக அழுத்தம் கொடுத்து முயன்றிருந்தாலே நல்ல படைப்பாகியிருக்க வாய்ப்புகள் அதிகம். அதை ஆசிரியர் ஏன் செய்ய மெனக்கடவில்லை என்பதே என் ஆச்சரியம். 


சாதனாவின் திருமணம், வெளிநாட்டு வாழ்க்கை, பின் கணவனால் வன்முறை- என்பன பெரிய ஈர்ப்பை தரவில்லை. நாவலாசிரியர் திடீர் என்று தன்னை பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான கீரோவாக முன்னிலைப்படுத்தி தன் வரலாறாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

 ஆரம்ப பக்கங்களில் இருந்த கற்பனை அல்லது புனைவின் அழகில் அற்றுப்போகும் பக்கங்களாக அவை இருக்கின்றன. இவை உண்மை சம்பவங்களோடு நேரடி தொடர்புடையாதான சலிப்பை உணர்த்துகின்றன சிரிப்பையும்தான்...

மொழியில் அரசியல் பிரஞ்ஞை இல்லை என்று சொன்னேன் அல்லவா ஒன்றோ இரண்டோ சம்பவங்கள் என்றால் இலகுவாக கடந்திருக்கலாம். புத்தகம் முழுதுமாக அவை ஆங்காங்கு விரைவி கிடக்கின்றன. சேனன் போன்ற இடது மாக்ஸிய அரசியல் செயற்பாடுகளில் ஆண்டுகள் பல கண்ட இவருக்கே நிலை இதுதான் என்றால் மற்றவர்களின் இலக்கியம் எம்மாத்திரம் என்று படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும். 

* 'சின்னானின் அசல் பாவத்தில் பிறந்த ஆத்மா' ஒரு மனிதப்பிறப்பை ஒரு பிறப்பாக பார்க்காமல் அதற்கு ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் சனாதன வாடை இது. இத்தகைய சொல்லாடல்களை ஒரு கதாபாத்திரம் பேசுவதாக இருந்தால் கூட பரவாயில்லை. அது பாத்திரப் புரிதலுக்காக ஆசிரியர் கையாழும் உத்தி என்று எடுக்கலாம். இது நாவலாசிரியரே தனது மொழியாக பேசுகிறார். 

 * 'வக்கற்ற சித்தார்த்தன் அல்லியின் சீலை நுனியில் தொங்கிச் சுழன்றான்'.. பெண்ணின் ஆடைகளை ஒடுக்குமுறை அடையாளமாக காலம் காலமாக எமது சமூகம் பயன்படுத்தி வருகிறது. அதையும் தாண்டி ஒரு பெண்ணின் ஆளுமையை மறுத்து அவளது வெற்றியை, அவள் செய்து கொண்ட (பாலியல்) தொடர்பான சமரசங்களாக சொல்லும் வார்த்தைகள் அவை. ஆண்மைய வன்மத்தில் இருந்து வருவது.

 * 'புனித கருவறை' `பாவங்களில் விடுதலைப் பெற்ற விந்து' கருவறைக்கும் கற்புக்கும் சமூகம் கொண்டிருக்கிற பிற்போக்கு சித்தாந்தம். மீண்டும் ஒரு குழந்தை பிறப்பை தரம் பிரிக்கும் 'விந்து'. 

 * ஒரு பக்கத்தில் அல்லி கூட்டுக்கலவி செய்பவராகவும், ஓரினச் செயற்கையாளராகவும் சித்தரிக்கப்படுகிறார் என்பதாக படுகிறது. இத்தகைய பால் ஈர்ப்புக் கொண்டவர்கள் நினைத்த இடத்தில் நினைத்தவர்களை புணர்வதாகவும் உணர வாய்ப்புகள் உண்டு. 

 அரச்சுனனின் அம்பு விடும் போக்கை சித்தரிக்கும் போது 'சுதந்திர பறவை' என்ற சொல்லைக் குறியிடாக குறிப்பிடுகிறார் நாவலாசிரியர். இதை வாசகர்கள் ஒரு பெண்ணாக கற்பனை செய்யலாம். ஏன் என்றால் நேரடியாகவும் மறைமுகமாகவும் அல்லியை குறிப்புணர்த்துகிறது மேற்ச் சொன்ன குறியீடு. ஆக சுதந்திரப் பெண்ணை வீழ்த்துவது(பாலியல் தேவைக்ககாக) என்றால் கூட அந்த 'சுதந்திர பறவை'யை தேர்ந்தெடுத்துத்தான் வீழ்த்துவாராம். 

 'ஆண்குறியால் இராச்சியத்தை கட்டி எழுப்பினான்' மீண்டும் ஆண்குறி அதிகாரம் ஆட்சி கொண்டதாக குறிப்புணர்த்துகிறது. ஆனால் அல்லியின் பால் உறவு நிலை வெறும் இச்சையாக காட்டப்படுகறது. 

'உடலரசியலால் எழுந்த சாம்ராஜ்யம்' பெண் உடலைக் கொண்டே பெண் ஒடுக்கப்படும் சமூக நிலையில், அதையே ஆயுதமாக எடுத்து அந்த அதிகாரத்தை உடைப்பதே அத்தொடர் பின் இருக்கும் அரசியல். அதை ஆசிரியர் எந்த புரிதலும் அற்று சும்மா போட்டுவிட்டுப் போகிறார். 


ஆயுதம் தாங்கிய குமுதாவை இப்படி வர்ணிக்கிறார் ஆசிரியர் ' மார்புகளின் நடுவில் ஓடி அவள் முலைகளைத் தள்ளி நின்ற துப்பாக்கிப் பட்டை' இது அழகியல் என்று யாராவது வந்து விடாதிர்கள் மூஞ்சி கிஞ்சையெல்லாம் பேத்து போடுவேன் (சும்மா ஜாக்கு)

 * பக்கத்தில் அழகான பந்தி ஒன்று வருகிறது. ஆனால் அதில் 'பாம்பு புத்துக்கும் மோதிர கைக்கும்' என்ன தொடர்பு என்றுதான் புரியவில்லை. 

 * இறப்பின் நிட்சம் இறக்கும் வேதனையை மறைத்து விடுகிறது. சுப்பர் ஆனால் அடுத்த வரி 'மதிப்புறச் சாதல் மட்டும் கோழி சட்டிக்குள் போவதிலிருந்து தப்பிவிட முடியுமா' இது கோழிக்கு மட்டுமான ஒன்றல்ல. ஒட்டுமொத்த உயிர்களுக்குமானது. சித்திரவதை செய்வதோடு தொடர்பான விடயம். புலிவீரர்கள் ஏன் சைனட் குப்பியை தொங்க விட்டார்கள் என்பதோடு சேர்த்துப்பார்த்தால் அந்த வரி பிழைக்கும். 

 * 'சிங்களத்தியுடன் இவ்வளவு நெருக்கமாக இருந்து பேசியதில்லை ஆகையால் 'கிறு கிறுப்பு' என்கிறார். இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கமும் இப்படி கூறுகிறார் 'தடை செய்யப்பட்ட கனியின் மீதான ஆர்வம் என்பது மனித இயல்பு' ஆம். ரோகிணி ஒரு சிங்களப் பெண் ஆளுமையாக வருகிறார். ஆணால் நம் கீரோ கிறு கிறுப்பது, எட்டா கனியக்காக. எட்டாப்பழத்தில், ஒரு பெண்ணை பழமாகவும், கனியாகவும் திண்டு முடிக்கிறதிலேயேதான் இந்த அணில் கூட்டம் அலையுது. ஒரு பெண்ணை பார்த்து விட்டால் போதும் எந்த வயது கிழவருக்கும் படுக்கையறை மட்டும் கொண்டு செல்லத்தான் மனம் முதலில் சொல்லுகிறது ஆக ஆசிரியரின் ஆசையில் எனக்கு ஆச்சரியமில்லை.


 * 'சாந்தனுக்கு மாவீரர் நாளுக்குச் செல்வது மட்டுமே ஒரே ஒரு அரசியல் நடவடிக்கை வேறு எதற்கும் அவன் மனைவி அனுமதிப்பதில்லை' 'அவன் வீட்டிலும் அல்லி இராச்சியம்தான்' -இது என்ன வகையான பொதுப் புத்தி பார்வை. நான் ஆரம்பத்தில் சொன்னது போல் பெண்களை ஆண்கள் தங்கள் விருப்பத்திற்காக வீரங்கனைகளாகவும் விரும்பாத போது அதே வீரத்தை கொண்டு நகைப்பதற்கும் மட்டம் தட்டவும் உபயோகிக்கும் போக்கிரித்தனம் இல்லாமல் இது வேறு என்ன?.

 * 'மூதாதையர் பெற்ற ஒடுக்குமுறை'. ஏதோ அன்றுதான் சாதி பார்த்தாங்க இன்று இல்லை என்பது போன்றும், பள்ளத்தில் வசிப்பவர்கள், மேட்டில் வசிப்பவர் பற்றிய சொற் பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. 

 * 'அல்லி கர்ப்பமாகவிருந்தாள்' என்று வருவது தவறுதலாகவா என்று புரியவில்லை. வாசகர் அதைப் பற்றி அலட்டிக் கொள்ளவும் மாட்டர் ஏன் என்றால் எல்லாமே குழப்பமாக இருக்க இதுவும் ஏதும் மெஜிக் என்று கடக்க வாய்ப்புண்டு. இப்படியாக பல அரசியல் மொழி புரிதல் சிக்கல்களைக் கொண்டாதாக இருக்கிறது சித்தார்த்தனின் வினோத பக்கங்கள் .


 நாவலாசிரியரிடம் ஒன்று மட்டும் இறுதியாக கேட்டுக் கொள்கிறேன். ஆக பெண்ணாக இருந்து படிக்கும் போது பட்டத்ததை பேசியதற்கே உங்களுக்கு பற்றிக் கொண்டு வருகிறதே, படிக்காமலே ஒரு கோட்பாட்டு தளத்தில் ஈழ அரசியல் வரலாறை பேசிய புத்தத்தை என்ன சொல்லி முகநூலில் நீங்களள் குறிப்பு போட்டீர்கள்? 

 நான் நிகழ்வில் பொறுப்பு கூறல் பற்றி கேட்டது வெறும் உங்கள் நாவல் சர்ச்சை தொடர்பானது மட்டுமல்ல. அதை குறிப்புணர்த்துவதே என் நோக்கம். பெறுப்பு கூறல் எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பொதுவானதுதான். அது அடிப்படை அரசியல் அறம். எதையும் எப்பவும் பேசி நடந்து விட்டு பொறுப்பற்று கடந்து விடுவதான பொறுப்பற்ற செயற்பாட்டை கேள்விக்குட்படுத்துவது அது.

 இறுதியாக சுபம்: 'உன் காதல் என்னை உருக்குகிறது. நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. இரசித்து இரசித்து காதல் செய்யவும் அவாவுகிறாய். சுருக் பருக்கென நடந்து திரிந்து-உடுத்து திரிந்து உருகி உருகி காதல் செய்து சுத்த நிர்வாண சுகத்தில் வாழ விரும்புகிறாய். சாதானாவின் வெள்ளை மனது போன்றது உனது' பயபுள்ள நம்மையும் கொஞ்சம் கவனித்துதான் இருக்காப்போல.. என்ற பேரின்பத்திற்காக நாவல் கக்கிய சில கசப்பை பேசாது கடப்பது நமதரசியல் பண்பல்லதோனே செல்லமே… :)

 எழுதுக வளர்க.. வாழ்த்துகளும் பாராட்டுகளும் :)

கருத்துகள்

  1. We welcome you to discover our web site to find out about our historical past, traditions, government, business ventures and extra. Even arriving is a very new experience as Inspire will be the first vacation spot resort on the earth with its own private air terminal. However, because of the of} company's ongoing bankruptcy potential, Lippo pulled out of the deal and it is unclear if Caesars will try to pursue one other partner for its Incheon casino. By Q3 all the casinos appeared to have recovered from a disastrous decline in 2015 and early 2016 visits because of of} fears of a illness referred to as Middle East Respiratory Syndrome, or MERS. In July, Paradise Company Limited was displaying a 99.2% improve year-on-year in total gross sales for June. If you're be} withdrawing your money via an e-wallet, https://casino.edu.kg/%EC%95%84%EC%9D%B8-%EC%B9%B4%EC%A7%80%EB%85%B8.html your money will generally arrive within seventy two hours.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.