ஒரு புரட்சிகர கட்சி சமூகத்தின் தலையாக இருக்கப்போகிறதா வாலாக அசையப்போகிறதா..!

 



ஒரு புரட்சிகர கட்சி சமூகத்தின் தலையாக இருக்கப்போகிறதா வாலாக அசையப்போகிறதா..! பெண் பற்றியும் அவள் உடல் பற்றியும் சமூகம் கொண்டிருக்கின்ற பார்வை என்பது அவள் மீதான வன்முறை சுரண்டல் பாலியல் பலாத்காரம் என்பவற்றை ஏதோ ஒரு வகையில் மூடி மறைக்க நீதியைப் பெற்றுத்தருவதில் பின் நிற்க ஏதுவாக இருக்கிறது. இந்த சமூகம் கொண்டிருக்கின்ற இத்தகைய இரட்டை நிலையைத்தான் பெண்கள் மீதான எல்லாவகையான சுரண்டல் மற்றும் வன்முறைகளைச் செய்பவர்கள் பயன் படுத்திக் கொள்கின்றனர். உண்மையாக சமூக விடுதலை- வர்க்க விடுதலையை மனதில் நிறுத்திப் போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் 'பெண்களின் சமூக நிலை' என்ன என்பது பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும். இருக்கவும் வேண்டும்! இதனடிப்டையிலேயேதான் இத்தகைய இப்பிரச்சனைகளை சோசலிஸ்டுகளும் பெண்ணியவாதிகளும் கையாள்வர். கையாள்வதாக்க நீதியை விரும்புகிறவர்களும் நம்புவர். ஏன் என்றால் ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்பதாக தெரியும் ஒரு சிறு ஒளி இடதுசாரிகள்தான். நிறுவனங்கள் கல்லூரிகள் வேலைத்தளங்கள் பொதுத் தளங்கள் என்று தாராள வாத சிந்தனைகளுக்கு உடபட்டு இயங்குகின்ற நிறுவனங்களில் பெண்ணுக்கு எதிராக நடக்கின்ற பல விடயங்களை நம்ப மறுக்கின்ற அல்லது பாதிக்கப்பட்டவரையே பலி சொல்கின்ற போக்கு நிலவுவது வழமை. அதற்குப் பெண்கள் பற்றிய பொதுப் புத்தி கரணமாக இருக்கிறது. அந்தப் பொதுப் புத்தியைக் கொண்டு பாதிக்கப்பட்டவர் மீதே பழியைத் திருப்பி விடுகின்ற(விக்டிம் பிளேம்) இலகுவாக நடந்தேறுகிறது. அதே போல் அந்த நீதியைத் தட்டிக் கேட்டவரைத் தட்டிக் கழிப்பதற்கான, இடத்தை விட்டு துரத்துவதற்கான எல்லா முயற்சிகளும் நடக்கும். அதற்கு முதலாளித்துவம் கொடுத்திருக்கும் எல்லா வகை கருவியும் பயன் படுத்தப்படும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஆனால் சமூகத்தை நன்கு புரிந்து கொண்டவர்கள் என்றும், எல்லா ஒடுக்கு முறைகளுக்கும் எதிரானவர்கள் என்றும், எல்லா சுரண்டல்களை எதிர்பவர்கள் என்றும், சமூகத்தை தாம்தான் விடுவிப்பவர்கள் என்றும் சொல்லிக் கொள்கிற இடது கமுனிச முற்போக்கு கட்சிகளிலும் இத்தகைய நிலை நிலவுமாக இருந்தால் என்ன வகையான பிழைத்தலுக்காகக் 'கழுவல்களைக்' கொண்டிருக்கிறோம் என்ற கேள்வி எழுவது இயல்பு. ஒரு முற்போக்கு அமைப்புக்குள்-கட்சிக்குள் நடக்கின்ற இத்தகைய சுரண்டல்கள் ஒட்டு மொத்த அங்கத்தவர்களினாலும் நிகழ்த்தப்படுவதில்லை. அது தனி நபர்களினால் மேற்கொள்ளப்படுகிறது-என்ற போதும் ஒடுக்குமுறையை மூடி மறைப்பதற்கு ஒரு 'கூட்டு களவாணித்தனம்' கட்டாயம் தேவைப்படும். அதைக் கட்டிக் காப்பதில் கை தேர்ந்தவர்களாக இத்தகைய தனி நபர்கள் இருப்பர். பெண்கள் தங்களது உரிமைகள் மற்றும் ஒடுக்குமுறை சுரண்டல்கள் சார்ந்து ஒன்று சேர்ந்து விழித்து விடக் கூடாது என்பதற்கான எல்லா வகை அரசியலையும் கட்சிக்குள் வீசுவர் அதுதான் சரியான அரசியல் என்று எல்லா தத்துவங்களையும் அரைகுறையாக துணைக்கழைப்பர். ஆக!, பெண்களின் உரிமைக்கான 'குரல்' அடையாள அரசியல் என்பர், குட்டி பூஸ்வா பெண்ணியம் என்பர், வர்க்க விடுதலையைக் குழைக்கும் செயல் என்பர், ஏன் அமெரிக்க உளவுத் துறை புரட்சியைக் கலைக்க முயல்கிறது என்று கூடச் சொல்வர். சில ஆட்டுத்தலைகள் தாங்கள் 'ஆட்டுவது' மட்டுமல்லாமல் நமக்கு அரசியல் வகுப்பெடுக்க வெளிக்கிட்டு விடுவர். 'இந்த சிண்டு முடிதலுக்குத்தான் ஆசைப்பட்டான் 'அந்த' பால குமாரன்' என்பது கூட புரியாத ம.... -என்று கவலைப் படத்தான் நம்மால் முடியும். ஆக, இவர்களுக்குப் பிரச்சனையாகப் பெண்ணியம் 'ஏன்' இருக்கிறது என்று இப்போது புரியும்!. இத்தகைய பேர் வழிகள் முற்போக்கு முகத்திரைகளைப் போட்டுக் கொண்டு தங்களுக்கான லீலைகளைச் செய்யக் கட்சிகளையும் அமைப்புகளையும் கொள்கைகளையும் பயன் படுத்திக் கொள்வர். ''ஆனால், அமைப்பு துறை - கோட்பாடுகளை ஓரளவுக்காவது கட்சி கொண்டிருக்குமானால் பல நாள் திருடர்கள் ஒரு நாள் அகப் பட்டே தீருவர். '' புரட்சிகர கட்சியின் அடிப்படை சனநாயக பண்புகளைக் கட்சி தோழர்கள் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும். அமைப்புத் துறை சார்ந்த புரிதல்களுடன் தோழர்கள் இணையும் போது இருக்க மாட்டார்கள். சமூகத்தில் பொது புத்தி மட்டத்திலுள்ள அடிப்படையிலேயே அவர்களும் இருப்பர். அதை புரட்சிகரமாகன கோட்பாட்டு தளங்களில் மாற்றுவது தலமை உறுப்பினர்களின் கடமை. ஏன் என்றால் அது கட்சியை இயக்குவதற்கான சமூக விஞ்ஞான கோட்பாட்டுச் சாதனம் அதுதான்.


ஆனால் அதை வளர்க்கும் இடங்களில் இருப்பவர்கள் யார்? அவர்கள் கட்சிகளில் எதற்கா எந்த முக மூடிகளைப் போட்டுக் கொண்டு குந்திக் கொண்டிருக்கிறார்கள்? என்பவற்றைப் பொறுத்தே அதற்கான அனுமதியும் வாய்ப்புகளும் இருக்கும். ஒரு தனி நபர் கட்சி-அமைப்பிற்குள் விடுகின்ற பிரச்சனைகளை மூடி மறைப்பதாலும், தட்டிக் கழிப்பதாலும், முகஸ்துதி பார்த்துப் பாராமல் இருப்பதாலும் கட்சிக்கு பலமல்ல. அதுதான் கட்சியின் மிக்ப் பொரிய பலகீனம். இன்று இல்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அது கட்சியை வேரறுக்கும். 

சரி இனி, கட்சிகளில் உட்கட்சி பிரச்சனையாக முக்கியம் பெறுகின்ற பெண்கள் தொடர்பான பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம், வன்முறை தொடர்பாகப் பார்ப்போம்: 

சாதாரண பொதுப் புத்தியில் இருக்கின்ற எந்த ஒரு பெண்ணும் இத்தகைய மூஞ்சிகளைத்(முற்போக்கு முக மூடிபோட்ட) திரும்பியும் பார்கார். அந்தப் பெண் ஒரு சமூகம் எதிர்பார்க்கின்ற பொதுவான எதிர் பார்ப்புகளோடு ஒரு ஆணை தேடுவாள். அழகான(வயது, நிறம் உயரம், திடகாத்திரம், தலை நிறைய மைர்(🙂 ) மட்டை என்ற பொதுப் புத்தி அழகுகள்) ,மற்றும் நிறைய சம்பாதிக்கின்ற, படித்த, நிரந்தர தொழில், வீடு சொத்து குறிப்பாகக் குழந்தை குடும்பம் என்று வாழத் தன்னை பாதுகாக்கின்ற ஒரு ஆணையே தேர்ந்தெடுப்பாள். 

 ஆனால் இந்த முற்போக்கு முக மூடிப் போட்டுக் கொண்டு பாலியல் சுரண்டல் செய்கின்ற இந்த ஆண்களை நாடும் பெண்கள் இத்தகைய எந்த எதிர் பார்ப்புகளும் அற்ற முழுக்க அந்த ஆண்களின் போராட்ட சமூக விடுதலை அரசியலில் ஈர்ப்பு கொண்டே இவர்களை நாடுவர். அந்தப் பெண்கள் அந்த ஆண்களிடம் எதிர்பார்ப்பது குறைந்த பட்ச விசுவாசம், விருப்பம், நேர்மையாக உறவை மட்டுமே. 

ஆனால் இவர்கள் எந்த ஒரு குற்ற உணர்வும் சொறிவும் இல்லாத பொறுக்கிகளாக அந்தப் பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டுவர். கை மாற்றுவர்.(அப்படியானால் பெண்களுக்குப் புத்தியில்லையா என்று மொக்கு கேள்விகளைக் கேட்டுக் கொண்டு முதலிலிருந்து தொடங்காதீர்கள் விளக்கம் மேலே சொல்லி இருக்கிறேன்.) இங்கு இத்தகைய பாலியல் சுரண்டல்களுக்கு உள்ளாகிற பெண்கள் யார் என்று பார்த்தால் அந்த ஆண் அளவு அரசியல் - செயற்பாட்டு ஆளுமை கொண்ட பெண்கள் அல்ல. அவர்களை விட அதிகார(அமைப்போ கட்சியோ) அளவில் குறைந்தவர்களாக, வயது அல்லது ஆமை குறைந்தவர்களாக இருக்கும் பெண்கள். அவர்கள் பல வழிகளில் அந்த சுரண்டலை செய்பவர்களில் இருந்து மிக அதிகாரம் குறைந்தவர்களாக இருப்பர். 

தன்னைத்தானே பெரிய பீத்தலாக நினைக்கும் ஆணின் மனதில் இவள் இல்லா விட்டால் இன்னொருத்தி அந்த பீத்தல்களை நம்பி வருவாள் என்று சர்வ சாதாரணமாக நம்புவான். அந்த ஆண் முன்னர் உள்ள உறவை உடைக்கும் போது தன்னில் எந்த வித பிழைகளும் இல்லாது போலவும் அந்த பெண்னில்தான் எல்லா பிரச்சனைகளும் இருப்பதாகத் தன்னுடன் உள்ளவர்களை(பெண்கள் உட்பட) நம்ப வைப்பான். பின்னர் புரட்சி, இலக்கியம், ஏன் பெண்ணுரிமை, பெரியாரையும் என்று கையிலெடுப்பான்.

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த அநீதியைப் பேசும் பொது வெளியும், ஏன் கட்சி கூட இருக்காத நிலையில் தனது வாயை மூடிக்கொண்டு தனது வாழ்வைக் காப்பாற்ற நினைத்து அமைதியாவாள்(இந்த போக்குதான் இவர்களுக்கு மிக அற்புதமான வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கிறது. லிஸ்ட் நீண்டு கொண்டு பேக வாய்ப்பாக அமைகிறது.) கட்சிகளை, அமைப்புகளை ஆர்வம் கொண்டு நாடி வருகிற பெண்கள் ஏதோ ஒரு புள்ளியில் அத்தகைய அரசியலில் உணர்வு ரீதியில் இணைந்தவர்களாக கவரப்பட்டவர்களாக இருப்பர். அல்லது அவர்களுக்கு இத்தகைய அமைப்பு கட்சிகளுக்கூடாக கிடைக்கின்ற வெளிச்சத்தில் ஆர்வம் நாட்டம் கொண்டவர்களாக இருப்பர்.

 தமக்குக் கிடைக்காத சமூக அங்கிகாரத்தைக் கொடுக்கும் வெளியாக அதை உணர்வர். 'அது ஒரு நியாயமான எதிர்பார்ப்பும் கூட. பெண்ணுக்குக் கிடைக்கின்ற அத்தகைய சிறிய இடம்-வெளியே பெண்களுக்கு மிகப் பொரிய அரசியல் தளம்தான்.' ஒரு முற்போக்கு கட்சியின்-அமைப்பின் முக்கிய உறுப்பினர் தன்னுடைய பெண்களுடனான உறவை பொது வெளியில் மறைப்பது என்பது ஏற்க முடியாது. குறிப்பாகக் கட்சி அமைப்புகள் தொடர்பில் இருக்கும் பெண்களோடான உறவை மறைப்பது என்பது பாலியல் சுரண்டல் துஸ்பிரோயத்துக்கு வழி வகுக்கும். 

ஒன்று-இரண்டு, ஒன்றுக்கு மேல் ஒன்று என்று அடுக்கி கொண்டு போக வாய்ப்பாக இமையும். அது கிஞ்சித்தும் தனிப்பட்ட வாழ்க்கை-பிரச்சனைக்குள் அடங்கா!. (இவை தனிப்பட்ட பிரச்சனை என்று எந்த முற்போக்கு வாதியும் வந்தால் உரையாட்டு தளத்தில் வாதிக்க நான் தயாராக இருக்கிறேன்) கட்சி உறுப்பினர்கள் ஒரே பெண்ணுடன் அல்லது பல பெண்களுடன் மாறி மாறி பாலியல் உறவில் இருப்பதும் அதை மறைப்பதும் என்ன வகை உறவு நிலை என்று புரியவில்லை. குறைந்த பட்சம் அந்த உறவில் ஒரு வெளிப்பாட்டுத் தன்மை வேண்டும். அது இல்லாத காரணத்தால் அந்த பாலியல் சுரண்டல் அமைப்புக்குள் கட்சிக்குள் சுற்றிக் கொண்டு தெரிய வாய்ப்புகள் உண்டு. 

சுரண்டலுக்கு உட்பட்ட பெண் அந்த சுரண்டலைச் சொல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வைத்திருக்கும் சமூக நிலை பற்றி இந்த சில முற்போக்கு பேர் வழிகளுக்குக் கவலை இல்லையா? ''இவர்களா சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளையும் ஒடுக்கு முறைகளையும் அறிந்தவர்கள்-மாற்றப்போகிறவர்கள்?'

 மாவோ combat liberalism(1937) என்ற கட்டுரையில் கட்சியில் இருக்கின்ற ஒவ்வொருவரும் புரட்சிகர சித்தாந்தத்தில் ஈடுபட்டு கெண்டு இணைந்தவராக இருக்க வெண்டும் என்கின்றார். ஆனால் அதற்கு மாறாகத் தாராள வாதம் என்பது இவற்றை நிராகரித்து 'கொள்கையற்ற' (நலன்கள் சார்ந்து) ஐக்கியதிற்காக நிற்கும் என்கிறார். 

 இத்தகைய தாராள வாத போக்கு நிலவும் போது கட்சிக்குள் அரசியல் ரீதியில் சிதைவை உருவாக்கும் என்கிறார். (நாம் தாரள வாதிகளா சோசலிஸ்ட்டுகளா?) தாராள வாத போக்கு கட்சிக்குள்_ அமைப்புக்குள் வளரும் போது என்னவெல்லாம் நிகழும் என்பதற்கு மாவோ மிக அழகாக விளக்குகிறார். தவறான தனிமனித நடத்தைகள் கொள்ளைகள் கட்சிக்குள் இருக்கிறது என்று கவனித்தும் அவற்றை விமர்சிக்காமல் இருப்பது ஆபத்து என்கிறார் மாவோ. 

அது ஏன் நிகழ்கிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். தவறிழைத்தவர் எமக்குத் தெரிந்தவராக இருப்பார், நமது ஊர்க் காரராக இருப்பார், நம்முடைய பழைய பாடசாலை நண்பராக இருப்பார் அன்புக்குரியவராக, நம்முடன் வேலை செய்தவராக இருப்பார். இத்தகைய காரணங்களுக்காக அரசியல் ரீதியில் அவரை விமர்சிக்காமல் இருப்பது என்பதே அதற்கு ஒரு காரணம் என்கிறார். 

 ஒரு கமுனிஸ்ட் பரந்த மனதைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் அதே நேரம் புரட்சிகர விடயங்களில் விடாப்பிடியாக இயங்கி போராட கூடியவராகவும் இருக்க வேண்டும் என்கிறார். புரட்சிகர நலன்களை தன்னுயிருக்கு சமனாக பார்க்கும் அதே நேரம் தன் நலன்களை புரட்சிகர நலன்களில் உட்படுத்திச் சிந்திக்க வேண்டும் என்கிறார் மாவோ. 

 இத்தகை சிந்தனையில் நின்று கடசி வரை போராடி பெண்களுக்கு சமூகத்தில் இருக்கின்ற பிரச்சனைகளை புரிந்து கொண்டு முன் நின்று போராடி நல்ல முடிவைப் பெற்றுத் தந்திருக்கிது ஒரு கமுனிஸ்ட் கட்சி. அதன் தலமை மூத்த தலமை தோழர்கள்  மற்றும் உண்மையாக செயற்பட்ட சக தோழர்களுக்கும் ஒரு சக பெண்னாக நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன். பாராட்டுகள். 

 ஒரு புரட்சிகர கட்சி சமூகப் பிரச்சனையில் தலையாக நின்று வழி நடத்தப்போகிறதா அல்லது வாலா நின்று ஆடிக்கொண்டிருக்கப் போகிறதா என்பதை மாவோ சொன்னது போல் கட்சியில் எந்தளவு புரட்சிகரமான சிந்தனை செய்யும் தோழர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வரலாறு அமையும்.. 

https://alphahistory.com/chineserevolution/mao-zedong-dangers-of-liberalism-1937/

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!