கர்ணன்

 

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை என்று சொல்வதை விட மிகப் பொரிய அரசியல் வன்முறை வேறு எது ஒன்றாக இருக்க முடியும்?


குட்டக் குட்ட வாங்கிக் கொண்டு கும்பிடும் போது ஒரு குறைத்தானும் காணாத இவர்களது மனங்கள், குட்டிய கைகளின் வன்மத்தையும்-வன்முறையையும் காணாத கண்கள். நிமிர்ந்தவரின் முதுகெலும்பில் வில்லும், கண்களில் அம்பும் தெரிவதைக் கண்டு ஐயகோ வன்முறை! வன்முறை! என்று குதிக்கிறது. காரணமென்ன? இவர்கள் உண்மையில் வன்முறைக்கு எதிரானவர்கள்தானா?

ஆம், மாரி செல்வராஜின் “கர்ணன்” சில நாட்களுக்கு முன் பார்த்தேன். அப்படம் வன்முறையைப் பேசுவதாகச் சிலர் கொந்தளித்ததை ஏலவே வாசித்தும் கேட்டுமிருந்தேன்.

இந்த வசை சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக எதிர் வினையாற்றும் போது சொல்லப்படும் ஒன்றுமட்டுமல்ல. ஒரு பெண்ணாய் சமூகத்தால், தனிமனிதரால் ஒடுக்கப்படும் போது - உள உடல் வன்முறைக்குள்ளாகும் போது அதற்கு எதிராக எதிர்வினையாற்றுவதை வன்முறையாகப் புரட்டி விக்டிம் பிளேம் செய்வது போன்ற ஒன்றுதான். அதனால் என்வோ இப்படம் வன்முறையைப் பேசுகிறது என்றதும் சுள் என்று தைத்தது.

எனவே இப்படம் பற்றி குறிப்பாக இதை மட்டுமே பேசலாம் என்று தோன்றியது. படம் முழுதும் குறியீடுகளால் நிரம்பி இருக்கிறது. ஏன் படமே குறியீடாகத்தான் தோன்றுகிறது எனக்கு. இது பார்வையாளரின் விருப்பின் படி அளவு அதீதத்துக்கு இட்டுச் செல்லலாம். அதற்கப்பால் படம் எமக்குள் கட்டுடைப்புச் செய்யும் தமிழ் சினிமாவின் கூறுகள் அற்புதம். அது தனித்துவமாகவும் மாற்றத்துக்காகவும் கொண்டாடப்பட வேண்டியவை.

ஒருவருக்கு அவர் வாழுகிற சமூகத்தில் சக மனிதனாகக் கிடைக்க வேண்டிய மரியாதை, இடம், மதிப்பு, அங்கிகாரம் என்பன மறுக்கப்படும் சமூக வன்முறையைக் கட்டிக் காத்து விட்டு, அந்த விலங்கை உடைக்க துணிந்தவரை வன்முறையாளர்கள் என்று சொல்ல யாரால் முடிகிறது என்று பார்த்தால் அவர்கள் யார் என்பதை எம்மால் உணரமுடியும்.





வலிப்பால் தாக்கப்பட்டு நடு வீதியில் ஒரு குழந்தை துடித்துக் கொண்டிருக்க இந்த குழந்தையின் கால்கள் தார் வீதியில் உரசி துடிக்கும் ஓசையில் காகங்கள் பறக்கின்றன. இரண்டு பக்கமும் வாகனங்கள் போய்க் கொண்டிருக்கக் குழந்தை இறந்து குறியீடாக மாறும் காட்சியுடன் படம் ஆரம்பிக்கிறது. அவள் நாயகனின் தங்கை.

சன நாயக நாடு என்று கூறப்படுகின்ற நாடு ஒன்றில் ஒரு மனிதனுக்குக் கிடைக்கின்ற அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் மற்றும் தனியார் போக்கு வரத்து அவர்கள் அருகில் இருக்கும் இன்னொருவருக்கு மறுக்கப் படுகின்ற கொடுமை. இங்குச் சாதிய சமூகமே அரசாங்கமாகவும் அதன் நிறுவனங்களான சட்டம், பாதுகாப்பு, நீதி, நிதி என்று அதை ஆளும் வர்க்கமும் அதே சாதிய ஆணவத்தோடு அதில் பங்கு பற்றுகிறது.

பொருளாராதரத்தில் பின் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு கிராம சமூக மக்களுக்கு பொதுப் போக்கு வரத்தின் அவசியம் அவர்களின் வாழ்வாதாரத்தோடு மட்டுமல்லாமல் தன்மானத்தோடும் தொடர்பானதாக இருக்கிறது. அதைக் கொடுக்க மறுக்கும் 'சாதியத்தின் வன்முறையோடு' 'போராடுவதே' படத்தின் மிகுதி கதை.

தன் மக்களின் சமூக நிலையை பின் இழுத்து வைத்திருக்கும் சாதிய உள் நோக்கத்தின் விசமேறிய தலையில் ஓங்கி ஒன்று போட்டு பல்லைப் பிடுங்க விளையும் இளைஞன். அவன் இயல்பிலேயே கலக மனமும் போர் குணமும் பெற்ற கர்ணன். இயல்பிலேயே அநீதிக்கு அடங்க மறுக்கும் நிமிர்வு கொண்டவனாகச் சித்தரிக்கப் படுகிறான். 'நிதம் குஞ்ச பிடித்து திண்ணுது அதப் போய் கெஞ்சிக்கிட்டு ச்சேக்' என்று சலிப்படையும் வசனம் அடக்கி ஆள நினைப்பனை மிக்கும் குணம் அவனது என்பதை படம் ஆரம்பிக்கும் போதே சொல்லி விடுகிறது.

ஒடுக்கப்பட்ட சாதி இன மக்கள், சிறுபான்மையினர், பெண்கள், மற்றும் மாற்றுப்பாலினத்தவர் தங்களது பாதுகாப்புக்காக எடுக்கின்ற ஆயுதம்-கோம் கூட உங்களுக்கு வன்முறை என்றால் அந்த வன்முறை தேவையான ஒன்றுதானே. சாதிய சமூகத்தில் 'மனு' என்ற பெயரால் 'நீதியே' வன்முறையாகத்தானே இருக்கிறது.

ஒருவரின் சமூக நிலை (privilege) அச்சமூகத்தின் (பால், சாதி,வர்க்கம், நிறம், இனம் பிரதேசம் இப்படிப் பல) பிறர் மீதான வன்முறையாக அமைந்து விடும் நிலை உள்ளது. அவை இயல்பாய் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று போலும் ஏன் அது உயர்வுக்குரியதாகவும் பார்க்கப்படுகிறது. அதை அனுபவிப்பவர்கள் அவற்றை அறிவதுமில்லை உணர்வதுமில்லை. ஏன் என்றால் அவர்களின் சமூக வாழ் நிலையே அப்படியான வாழ்க்கை முறையாகத்தான் இருக்கிறது.

ஒரு ஆணால் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு தண்ணீர் எடு, செய்தித்தாள் எடு என்று மிக இயல்பாய் வீட்டிலும், ஏன் பொது இடங்களில் கூட ஒரு பெண்ணைப் பார்த்துச் சொல்ல முடிகிறது. இதை ஒரு பெண்ணால் ஆணைப்பார்த்து செல்லி விடுவது இலகுவானதல்ல. அந்த எண்ணமே பெண்ணுக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்துவதாகத்தான் சமூக உளவியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப் பெண்ணை கொடுமைக்காரியாக பொல்லாதவளாக ஏன் ஒழுக்கம் இல்லாதவளாகக் கூட சுட்ட சமூகம் தயங்குவதில்லை. ஆனால் ஆண் செலுத்துகின்ற அநாகரிகமான அதிகாரம் நாகரிகமாக, ஆணுக்குரிய பண்பாக ஏன் கெட்டித்தனமாகக் கூட பார்க்கப்படுகிறது.
இது உழைப்பைச் சுரண்டி குடித்துப் பெருத்து விட்டுச் சாமர்த்தியமாக வேலை வாங்கி விட்டதாக எண்ணிப் பெருமைப் படுகின்ற பூஸ்வா மன நிலையை ஒட்டியது.

The Great Indian Kitchen திரைப்படத்தில் கழிவுத் தண்ணீரை அவளது கணவன் மீது ஊற்றும் இறுதி காட்சி ஒன்று வரும். அந்த எதிர் வினை காட்சியே கொஞ்சம் அதீதம், அவள் பொறுமையாகவே வீட்டை விட்டு வெளியே போய் இருக்கலாம் என்று பேசுகின்ற பெண்கள் சிலரையும் பார்த்தேன். அந்தளவு எதிர்வினையாற்றச் சுரணையற்று நாம்(பெண்கள்) வாழப் பழகியிருக்கிறோம்.

எல்லாப் பெண்களாலும் அந்த பட நாயகி செய்தது போல் கணவன் மேல் கழிவுத் தண்ணீரை ஊற்ற முடியுமா? இல்லையா என்பதல்ல விடம். ஆனால் திரைக்கு வெளியே படத்தைப்பார்க்கும் சுடு சுரணை கொண்ட பெண் மனதுகள் குறிப்பான அந்தக் காட்சியில் துள்ளிக் கொண்டாடியிருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடச் சீ இவ்வளவுதானா? இது போதுமா? என்று துடித்திருக்கும். உண்மையில் அதுதான் வன்முறைக்கு எதிரான மாற்றத்தை விரும்புகிற மனதாக இருக்க முடியும்!

மற்றவை எல்லாம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணைப்பார்த்து ஆம்பளைக்கு சமைத்துக் கொடுப்பதில்லையா? சேவகம் செய்வதில்லையா- என்று வன்முறையை ஆதரிக்கச் செய்யும் சமூகத்தின் சாபக்கேடுகள் என்பதில் சந்தேகம் ஏன்.

ஆம் கர்ணன் பார்க்கும் போதும் எனக்குள் ஓடியதும் அதுதான். வெட்டு! குத்து!! ஓங்கி ஒன்று வை!! செருப்பைக் கழட்டி அடி!! என்று படக் காட்சியை முந்திக் கொண்டு போனது என் அறக் கோபத்தின் முணுமுணுப்பு. ஒடுக்கு முறையை சுரணையோடு அணுகும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் இயல்பு.

தலையில் கட்டியிருக்கும் துண்டை கழட்டி கக்கத்தில் வைக்கும் படக் காட்சிகள் தமிழ்த் திரைப்படத்தில் விரவிக் கிடக்கின்றன.(சாதிய ஒடுக்கப்பட மக்களின் செயலாக). சமூகத்தில் பெரிய மனிதர், நல்லவர், மாற்றத்தை விரும்புவர், விட்டால் புரட்சியாளர் ரீதியில் சித்தரிக்கப்படும் நாயகன் பாத்திரம் கூட அதைத் தடுப்பதோ அதற்கு எதிராக வசனம் பேசுவதோ இல்லை.

காலில் விழும் காட்சிகள் கூட மிக இயல்பாய் எடுக்கப்படுகின்றன. சாக்கடை நிறைந்த வன்முறைத் தனத்தை 'மரியாதை' என்பதாக இயல்பாக்கிச் சித்தரிக்கின்றன. வன்முறைக்கு எதிரான குஞ்சுகளுக்கு இவை மனித நாகரிகத்தின் மீது செய்யப்படும் வன்முறையாகத் தெரிவதில்லை. அது இயல்பு போலவும், சமூக வளச்சி-மாற்றத்துக்குத் தேவை என்பது போலவும் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சொறி நாய் கூட விரும்பாத இந்த அரிப்பை(காலில் விழுவது) சக மனிதர் செய்வதை எப்படி விரும்புகிது? ஏற்றுக் கொள்கிறது? சாதிய அரிப்பு சொறி நாயின் அரிப்பை விட அலாதியானது சொறியச் சொறியச் சுகமானது என்பதனினாலோ என்னவோ?.

சாதிய ஏற்றத்தாழ்வுகளை வன்முறையாக பார்க்காமல் இயல்பாய் பார்ப்பது சாதியத்தைக் கொண்டாடும் மனப் போக்கின் விளைவு. சாதியே வன்முறைதான் அதில் என்ன சந்தேகம் இருக்க முடியும். ஆனால் ஒடுக்கப்படுபவர்களின் சம்மதத்தோடு விதியாக, அறமாக, கடனாக, கடமையாக, நீதியாகக் காலம் காலமாக போதிக்கப்படுகிறது.




இவற்றை எம்மை நம்ப வைக்கச் சாதியத்திற்குக் கத்தி, சம்மட்டி, கொரி ஒன்றும் தேவைப்பட்டிருக்க வில்லைதான். ஆனால் அதிகார அடிவருடித்தணமும் உழைக்கும் மக்களின் அப்பாவித்தனமும் தேவைப்பட்டது. உழைத்தே வாழ நினைக்கும் மக்களுக்கு ஊண் குடிக்கும் நரிக் குணம் அறிய நியமில்லை. உழைப்பதே அவர்களின் உயிர் நோக்காக இருந்ததால்.

சாதியத்தின் வரைமுறைகளை உடைத்தவனை உதைப்பது வன்முறை இல்லை. உடைத்தவன் வன்முறையாளனா? இது சாதியத்துக்கு மட்டுமே ஒன்றானது இல்லை. அதே சித்தாந்ததுக்குள்ளால் வளர்த்தெடுக்கப்பட்ட எல்லா வகை அதிகாரங்களுக்கும் பொருந்தும். அதே போன்று அதிகாரத்தின் வழி சமூக வன்முறையைச் செலுத்த விரும்பும் சாதியமும் அவற்றை நிமிர்ந்து பார்க்கும் துணிச்சலை வன்முறை என்று சொல்கிறது.

பெண்கள், கறுப்பினத்தவர்கள், இனவிடுதலை, தேசிய விடுதலை, வர்க்க விடுதலை என்று எந்த விடுதலையைப் பேசினாலும் அதிகார சக்தி அதை வன்முறை என்றுதான் சொல்லுகிறது. அதன் வன்முறை கருவிகளின் நுண் கைகள் எமது எல்லாச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி ஆளுகிறது. எம்மீது அவர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கின்ற பன்முக கலாச்சார தாக்குதல்கள் மற்றும் ஆயுதப் படை பலம் அன்றாடம் எம்மை நெரித்துக் கொண்டேயிருக்கிறது. ஆனாலும் அதிகார வர்க்கத்துக்கு மக்களாகிய நாம்தான் வன்முறையாளர்கள்.

ஒரு மனிதன் தன்னை விடப் பிறப்பால் தாழ்ந்தவன், தனக்குக் கீழானவன் என்ற கீழ்த்தரமான மனதை ஒருவன் பெறுவதே வன்முறைதானே! அதைக் கொண்டாடும் மனதை சமூகத்தைக் கட்டிக் காப்பது எத்தனை பெரிய சமூக நீதிக்கு எதிரான வன்முறை. உயர் சாதி என்று என்னும் ஒவ்வொருவரும் அதை நினைத்து தம் முகத்திலே தாமே காறி உமிழ்ந்து கொண்டாலொழிய ஒழியாது சாதிய நாற்றமும் அதன் வன்கொடுமைகளும் என்றுதான் எண்ணத் தோனுகிறது.

ஒடுக்கும் சாதிக்காரனைப் பார்த்து, ஒதுங்காதே ஓங்கி அடி, எதிர்த்து நின்று வெற்றி பெரு என்று சொல்கிறது கர்ணன் படம். இது வன்முறையாம். ஆனால் படம் முழுவதும் எந்த வித யதார்த்தமும் இல்லாமல் வெட்டி, குத்தி சாகசம் புரிந்தவர்களை கீரோக்கள், சுப்பஸ்டார், தளபதி என்றும் கொண்டும் முரண் புரிகிறதா?. ஒடுக்கப்பட்ட மக்கள் கீரோக்கலாக மாறக்கூடாது குறிப்பாகச் சாதியத்திற்கு எதிராக அவ்வளவுதான். ஒடுக்கப் படுகிற மக்கள் சாதிக்காரர்களைத் திப்பி அடிக்கக் கூடாது. இங்கு அடிப்பது வன்முறை இல்லை திருப்பி அடிப்பதுதான் வன்முறை. ஏன் என்றால் திருப்பி அடிப்பது மாற்றத்துக்கானது சமூக நீதிக்கானது. அதைத்தான் செய்யக் கூடாது.

கருத்துகள்

  1. Rb88 | Best Online Casinos for United States
    Rb88.com is one of the top online casino starvegad software rb88 companies in the world. A good site allows you to play online casino games on the go, if you vua nhà cái

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!

கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்