அடையாள அரசியல்( Identity Politics)..

 அடையாள அரசியல்

----------------------------
சம காலத்திலும் இடது சாரிகளுக்குள் பேசு பொருளாக இருப்பது அடையாள அரசியல் குறித்தானா வாதங்களாகும். இருந்தபோதிலும் அடையாள அரசியல் என்றால் என்ன என்று சரியான வரையறைகளைச் செய்ய முடியாமல் உள்ள அதே நேரம் அரசியல் தளத்திலும் அது தொடர்பான புரிதலில் போட்டி நிலையே உள்ளது.

அறுபதுகளில் பேசப்பட்டு வந்த அடையாள அரசியல் பொருளிலிருந்து, அரசியலும் அதன் புரிதலும் அதனுடைய பண்பாடுகளும் இன்றைய கால கட்டத்தில் மாற்றம் பெற்றுள்ளது. அதே நேரம் மறு பக்கத்தில் அடையாள அரசியல் என்பது சாராம்ச வாதம் பேசுகிறது என்றும் குறிப்பாக விடயங்களையும் குறிப்பிட்ட கலாச்சார நிர்ணய வாதத்தையும் பேசுகிறது என்றும் சொல்லப்பட்டது.


அதாவது ஒவ்வொரு அடையாளங்களுக்கும் அடிப்படைப் பண்புகள் உள்ளன என்கிறது. இந்த அடையாளப்படுத்தலானது வேறுபாடுகளைப் பற்றி அதிகம் உள்நோக்கி யோசிப்பதால் சமூகத்தில் இருக்கின்ற அதிகார கட்டமைப்பை அமைப்புள்ளுள் கொண்டுவந்து அங்கத்தவர்களைப் பிரிப்பதாகச் சொல்லப்படுகிறது.


ஆனால் ஒருவருடைய அனுபவத்தை மறுப்பது என்பதை ஒரு புரட்சிகர கட்சி எப்படி எடுத்துக் கொள்கிறது என்பது, இந்த இடத்தில் முக்கியமானது என்பதையும் குறிப்பிட்டுச் செல்ல வேண்டியுள்ளது. 'நான் ஒரு பெண்ணாக, தலித்தாக, கறுப்பினத்தவராக, இப்படியாகப் பல அடுக்குகளில் எனக்கிருக்கிற அனுபவங்களை-அது கொண்டிருக்கின்ற ஒடுக்குமுறைகளைப் புறந்தள்ளி விட முடியுமா? என் ஒடுக்கு முறைக்கான எதிர்ப்பை பொதுத் தளத்தில் ஒற்றைப் பார்வையில் எனக்குப் புரிய வைத்து விட முடியுமா அல்லது அது அவ்வளவு இலகுவானதும் நியாயமாதும்தான என்ற கேள்வி எழுகிறது.


ஒவ்வொரு சமூக அடையாளங்களும் ஒன்றை ஒன்று கட்டமைக்கின்றன. அதாவது ஒரு பெண் வெறும் பெண்ணாக மட்டமிருப்பதில்லை. ஒரு கருப்பினத்வர் வெறும் கறுப்பினத்தவராக இருப்பதில்லை. ஒரு தொழிலாளி தொழிலாளியாக மீட்டுமிருப்பதில்லை. வர்க்கம் பால் நிறம் என்று பல வகை உள்ளீடுகளைக் கொண்டுள்ளது. அத்தகைய உள் இடையீடுகளைத் தவிர்த்து விட்டுத் தனி வர்க்கமாகத் தேட முடியாது.

அடையாளம் என்பது ஒரு கட்டத்தில் அதிகாரத்தைப் பெறுவதும் பின் அது தனக்கு சொல்லிருக்கும் அதிகாரத்துடன் இணைந்து அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டு இன்னுமொரு ஒடுக்கு முறைக்குத் துணை போவதும் இதன் ஒரு பண்பாகக் கொள்ளப்படுகிறது. இந்தப் பண்பு அடையாள அரசியல் மீது மிகப்பொரிய விமர்சனமாக வைக்கப்படுகிறது.

அதிகாரமற்ற மக்களின் நிலையிலிருந்துதான் போராட்டங்கள் வழி நடத்தப்படுதல் என்பதுதான் எமக்கான பலமாகவும் அரசியலாகவும் இருத்தல் வேண்டும். மாறாக அடையாளம் என்ற இந்த கருத்தாக்கம் தன்னிலை சார்ந்த அதிகாரத்தின் அடையாளமாக மாறிப்போகக் கூடாது.


அப்படி அல்லா விட்டால் அது பொதுத் தன்மையில் ஒன்று கூடுவதையும் கூட்டிணைவினையும் கலைக்கிறது. இது புதிய தாராளமயத்தின் தனி நபர் வாதமாகப் பார்க்கப்படுகிறது. அது பொதுப்பிரச்சனைகளை தனிநபர் சார்ந்த பிரச்சனையாக மாற்றிப் பார்க்க உங்களைப் பயிற்றுவிக்கிறது. எனவே எமது பிரச்சினைகளின் பொதுத் தன்மையை உணர்ந்து பொது கூட்டு அரசியல் தளத்தில் ஒன்று கூடாமல் செய்கிறது. அதனடிப்படையில் தனித்தனி நபர்களாகப் பிரிந்து நின்று எமது அனுபவங்களைப் பார்க்கும் நிலையில் அது கண்டு கொள்ளப்படாமல் விடப்படச் செய்கிறது.





புதிய தாராளமயமாக்கங்களின் பண்புகளான தனி நபர் முன்னேற்றம், தனி நபர் வளர்ச்சி போன்றனவும் சந்தை என்பது வினியோகத்திலிருந்து போட்டியாக மாறி நிற்கும் நிலை-அது கூட்டாக ஒன்றினையும் பண்பை(தொழிற் சங்க உணர்வு) உடைக்கும் போக்கை உருவாக்குகிறது. இந்தப் போக்கானது அடையாள அரசியலின் வருகின்ற உறவுகளும் புதிய தாராளமயமாக்கலின் விளைவுகள் ஏற்படுத்தும் தன்மைகளும் ஏதோ ஒரு புள்ளியில் இணைவதாகச் சொல்லப்படுகிறது.


புதிய தாராளமயமாக்கல் சந்தையானது இந்த கூட்டுணர்வை உடைப்பதற்காகத் தனி மனிதர்களுக்கு நிரம்பச் சலுகைகளை (privilege individuality) வழங்குகிறது. அதனூடாக தொழிற்சங்களில் இருந்து தொழிலாளர்களை விலக்கவைத்து தனிநபருக்கான சலுகை,முன்னேற்றம் போன்றவை பற்றிய கவலை கொண்டிருக்கின்ற இயக்கங்களை நோக்கி இவர்களை நகர்த்துகிறது.


ஒருவருக்கு ஏற்படுகின்ற ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சனையை அரசியல் நீக்கம் செய்து தனி நபர் நிலை சார்ப் பிரச்சினையாகப் பார்க்க வைக்கிறது. அதாவது பொருளாதார கட்டமைப்பால் ஏற்பட்ட பிரச்சனைகளை இருட்டடிப்புச் செய்ய முயல்கிறது. இது முற்று முழுதான கட்டமைப்புக்கு(‘systems) எதிரான போராட்டத்துக்குப் போராட வேண்டியதைக் குறுக்குகிறது என்கிறார்கள். வெறும் அதன் குண குறியீடுகளில் அதன் அனுபவங்கள் போராட்டங்களைச் சிக்க வைக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. கட்டமைப்பைத் தவிர்த்து விட்டு ஒடுக்குமுறையைப் பற்றிய புரிதலை அக நிலை நோக்கித் திருப்புவதால் அதுவும் ஒரு வகை அதிகாரத்தைக் கோரி நிற்கிறது.


அது மேலும் நாம் 'ஒடுக்கப்பட்டவர்' 'ஒடுக்கப்பட்டவர்' என்று சொல்வதன் மூலம் பச்சாதாபத்தையும் அது ஒடுக்கப்படுவது என்பதே பெரிய விடயமாகவும் காட்டப்படுகிறது. அதாவது சமூக மாற்றத்துக்கான விடயங்களைச் செய்வதை விடுத்து தமக்கான ஒடுக்குமுறைகளைத் திரும்பத் திரும்பக் கூறி சுய திருப்தி கொள்ளும் நிலைக்கு இட்டுச் செல்லும் நிலை உள்ளதாக அடையாள அரசியலை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள்.


ஒடுக்கு முறைக்கான மூலகாரணங்களிலிருந்து விலகிச் செல்கின்ற போக்கானது தத்தமது ஒடுக்கு முறைக்கான எடுகோள்களை பிடித்துக் கொண்டு 'ஒடுக்குதலை' கொண்டாடும் மன நிலையை உருவாக்கி விடுகிறது என்பது அடையாள அரசில் மீது வைக்கப்படுகின்ற மற்றுமொரு குற்றச்சாட்டாகும். அது அடையாளங்களைத் திரும்பத்திரும்ப உறுதிப்படுத்திக் கொள்கின்ற போக்கு ஆகும்.


இவை ஒடுக்கு முறைகளுக்கான மூலகாரணங்களிலிருந்து சிந்திப்பதை நிறுத்திக் கொள்ளச் செய்கிறது. அதாவது பொருளாதார அரசியல் கலாச்சார காணங்களில் இணைத்துப் பார்க்காமல் பிரிந்து நின்று தனித்தன்மையான ஒற்றைப்பார்வை கொண்ட பிரச்சனையாகப் பார்க்கிறார்கள் என்பது. அதாவது ஒடுக்குமுறை கொண்டிருக்கின்ற அரசியலுக்குள் செல்லாமல் வெறும் அடையாளங்கள் ஏற்படுத்துகின்ற துன்பங்களோடு மட்டுமாக நிறுத்திக் கொள்கிறார்கள். ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய அதிகாரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தின் மாற்றத்திற்காகவும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அது. ஆனால் அதைத் தவிர்த்து அடையாள அரசியல் போக்கானது புதிய தாராள மயமக்களின் முக்கிய பண்புகளில் ஒன்றான 'தன்நிலை வாதமும்,’ 'தனி மனித முன்னேற்றம்' போன்ற போக்குடன் ஒரு புள்ளியில் இணைவதாகக் கருதப்படுகிறது.

இன்றைகளில் இருக்கின்ற பெரும்பான்மையான அடையாள அரசியல் அமைப்புகள் அது தோற்றம் பெற்ற பொருள் வகை காரணங்களிலிருந்து துண்டித்துக் கொண்டும் முதலாளித்துவப் போக்குகளில் இணைவு கொண்டதாக இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. அதாவது அந்த அடையாளம் உருப்பெற்ற பின்னின்று நிலைக்கின்ற காரணங்களைக் கணக்கில் அவர்கள் எடுப்பதில்லை என்பது. இது பொது எதிரியைக் கண்டு பிடிப்பதற்குப் பதிலாக இருமைகளுக்கு இடையிலான அதாவது பெண்-ஆண், கருப்பு வெள்ளை என்ற மோதலாக இருக்கிறது என்கிறார்கள்.

மேலும் அவர்கள் தங்களினதும் பிறறினதும் ஒடுக்கு முறைக்குக் காரணமான ஒட்டு மொத்தமான அமைப்பையும் எதிர்ப்பதற்குப் பதிலாக ஒரு பொது எதிரியை நிறுத்திப் பழிவாங்குவதை நோக்காகக் கொண்டுள்ளார்கள். எப்போதுமே அதை அடித்துக் கொண்டிருப்பதானது ஒட்டுமொத்த ஒடுக்கு முறையிலிருந்து நிரந்தர தீர்வை பெற்றுத் தரவல்லதல்ல என்ற புரிதலை இவ்வமைப்புகள் பெறுவதில்லை என்கின்றனர்.

இணைந்து செயற்படல்:

ஆனால், இங்கு முக்கியமாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். கூட்டு அரசியல் தோல்வி அல்லது அவர்களைக் கண்டு கொள்ளாமையே அடையாள அரசியலுக்கு வழி வகுத்துச் செல்கிறது. அதாவது எம்மை கண்டு கொள்ளாத உங்களிடமிருந்து நாம் பிரிந்து நின்று எமக்கான அடையாளங்களைக் காத்துக் கொள்ள வேண்டிருயிக்கிறது என்பதிலிருந்து பார்க்கலாம். வர்க்கப் போராட்டம் என்பது என்னவோ புனித போர் போலவும், அதை முன்னெடுப்பவர்கள் அறிவுஜீவிகள் மற்றவர்கள் அல்லது பிற ஒடுக்குமுறை எல்லாம் தீண்டத் தகாதவவை என்ற பெரியண்ணன் மன நிலையிலிருந்து வெளி வர வேண்டும்.

எப்படி 'மேற்கத்தியத் தொழிலாளர் வர்க்கம்' என்பதற்குள் 'வெள்ளை இன ஆண் தொழிலாளர்கள்' என்ற உட் பொருள் புதைந்து தொழிலாளர் வர்க்கம் சாராம்ச வாதமாகச் சுருங்கிக் கிடக்கிறதோ அதே போன்று கறுப்பினத்தவர் பிரச்சனை என்று வரும் போது அது கறுப்பின ஆண்களாகவும் பெண்களின் பிரச்சனை என்று வரும் போது அது 'வெள்ளை இனப் பொன்களின்' பிரச்சனைகளாக மட்டும் சுருக்கி பார்க்கும் நிலை உள்ளது. இதை அப்படியே ஆசியாவின் குறிப்பாக இந்தியாவின் சாதிய கட்டமைப்பு பிரிவுகளுக்குள்ளும் பியோகித்து பார்க்க முடியும்.

அதன் அடிப்படையில், அடையாள அரசியலில் இருப்பதாகக் குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பவர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக வைக்கும் எதிர்க் கருத்து மிக முக்கியமானது என்று பார்க்க வேண்டியுள்ளது.
வெறும் அடையாளமல்ல அடிப்படை உரிமை:





அதாவது தமது சொந்த அனுபவங்களிலிருந்தும், சொந்த ஒடுக்கு முறைகளிலிருந்தும் நாம் அதை மைய கருவாகக் கொண்டு இயங்குகிறோம் என்பதும். அதாவது வேறு ஒருவரின் அல்லது ஒன்றுடன் கொண்ட ஒடுக்குமுறையின் தீவிரத் தன்மையை விட நேரடியாக எமக்கு எம் அடையாளங்களின் அடிப்படையில் கிடைக்கின்ற ஒடுக்கு முறையின் தீவிரம் அதிகமாகும் என்பதுமாகும்.


இருந்த போதிலும், தமது போராட்டம் என்பது தனியே பிரிந்து செல்வதற்கான ஒன்றாக இல்லாமல் உலகளாவிய மனிதக் குல விடுதலையுடன் இணைந்த ஒன்றின் அடைப்பிடையில் உணர்வதாக இருக்கிறது என்கின்றனர். அதாவது இந்த சமூக கட்டமைப்புக்குள் சாதாரணமாக சக மனிதராகக் குறைந்த பட்சம் வாழ்வதற்கான போராட்டம்தான் இத்தகைய அடையாளத்தை முன் நிறுத்திய அடிப்படை உரிமை போராட்டம் என்கின்றனர்.

அதவாவது சாதிய ரீதியில், பாலியல் அடிப்படையில், பிரதேச, நிற அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் கலாச்சார பண்பாட்டுத் தளங்களிலான ஒடுக்கு முறைகள் தம்மை தம்மோடு வாழக்கிக்ற மற்றவர் போல் வாழ விடாமல் இழுத்துப்பிடித்து வைத்திருக்கிறது என்கின்றனர்.

இதன்படி இன்று அடையாள அரசியல் என்ற தீண்டத் தகாத பொருளில் உள் நோக்கங்கள் கருதியும் மார்க்சிய இயங்கு விதிகள் தொடர்பில் எந்த வகை புரிதலும் இல்லாமல் அடித்து நொறுக்கப்படுகின்றன. பெண்ணிய அமைப்புகள், தலித் விடுதலை அமைப்புகள், கறுப்பின, லெஸ்பிய, மற்றும் மாற்றுப் பாலினத்தவர், சுற்றுச் சூழல் போராட்ட அமைப்புகள் பொதுத் தளத்தில் உலகலாவிய மனிதர்களின் விடுதலைக்கும் உயிர் வாழ்வதற்கான போராட்டங்களாக உயிர்ப்புள்ளதாக இருக்கின்றன என்பதை அவர்கள் மறுக்க முடியாது. அவர்க்ள மிகப் பெரும் சக்தியாக உருப் பெற்று வருவதையும் புரிந்து இணைந்து இயங்க வேண்டிய தருணம் என்பதும் முக்கியம்.

பல வகையான உட் குறுக்கீடுகளைச் செய்யும் ஒடுக்குமுறையானது வெறும் குறுக்கல் வாதத்தின்(reductionism) தன்மையைப் பெறும் போதுதான் அது அடையாள அரசில் என்ற அளவில் குறுக்கப்படுகிறது. அதாவது நாங்கள் பெண்கள், பெண் மட்டும்தான். நாங்கள் தலித் தலித் மட்டும்தான். நாம் கருப்பினத்தவர் கருப்பினத்தர்வர் மட்டும்தான் எமக்கு வேறு ஒன்றையும் பற்றிய கவலைகள், பொறுப்புகள் இல்லை என்ற அளவில் மட்டுப்படுத்திக் கொள்ளும் அமைப்புகள், கட்சிகளுக்கே பொருந்தும்.

இந்த குறுக்கல் வாத பொருளாதார வாத அரசியல் என்ற பெயரில் சுருங்கிப் போய் கிடப்பவர்களுக்கும்- தம்மிலிருந்து உள் ஊடறுத்துக் கிடக்கும் பலவிதமான ஒடுக்கு முறை சக்திகளைக் கணக்கில் எடுக்காமல் 'வெற்று வர்க்க கோசங்களில்' மட்டும் திருப்திப் பட்டுக் கொண்டு குட்டையாகத் தேங்கிக் கிடக்கின்ற பல சேஸலிச-கமுனிஸ்ட கட்சிகளுக்குமே பொருந்தக் கூடியதுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

என் அனுபவத்துக்கு மேலால் ஆண்கள் பேசுவதை நிறுத்துங்கள்:

தனி நபர்களின் அனுபவங்களிலிருந்து அறிவை பிரித்துக் கொண்டு செல்வதால் அவை தொடர்ச்சியாக உடைவுகளுக்கு உள்ளாகின்றன. ஒருவருடைய அனுபவம் இன்னொருவரின் அனுபவத்திலிருந்து பல்வேறாக வேறுபடுவதாக இருக்கும் போது கூட்டான அறிவு செயற்பாடுகள் என்பவற்றுக்கு இவை தடையாக இருக்கிறது என்கின்றனர். ஆனால் குறிப்பான விடயம் ஒன்றில் ஒருவர் குறிப்பான பண்புகளை அனுபவங்களை அறிவை தனித்துவமாகவும் பொதுத்தன்மையுடனும் பெற முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

'என் அனுபவத்துக்கு மேலால் ஆண்கள் பேசுவதை நிறுத்துங்கள்'! என்று பெண்ணிய வாதிகள் கூறும் புள்ளியும் இதுதான். ஆனால் ஒருவருக்குக் கிடைக்கின்ற அனுபவத்திலிருந்து மட்டும்தான் அதற்கான ஒடுக்கு முறைக்கு எதிராகப் பேச வேண்டும் என்ற வாதம் சரியானது அல்ல. என்னுடைய அனுபவத்தை ஏற்றுக் கொள்ளல் என்பதே சரியான அறிவாக இருக்க முயும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உள்ளது என்பது மேற் சொன்ன இணையும் பொது அனுபவத்தை மறைக்க இருட்டடிப்புச் செய்ய எடுக்கப்படுகின்ற straw man வாதம் போன்ற ஒன்று.

அதாவது ஒரு கருப்பினத்துப் பெண்ணுக்குக் ஏற்படுகின்ற ஒடுக்கு முறை அனுபவம் என்பது இன்னுமொரு கருப்பினத்துப் பெண்ணுக்குக் கிடைக்கின்ற அனுபவத்துடன் பல கூறுகளில் ஒத்திருக்கும். ஒரு கணவனால் செய்யப்படுகிற அவமானங்கள் இன்னுமொரு பெண்ணின் உணர்வோடு மிக நெருக்கமாக இணையக் கூடியதாக இருக்கும்.


அறிதல் முறை என்பது வெளியில் இருக்கின்ற ஒன்று அதை அறிந்து கொள்வதே அறிவு. இந்த அறிவைப் பெற்ற எவரும் அதற்கு எதிராகப் பேச முடியும். அதற்கு அனுபவ அறிவுதான் வேண்டும் என்பதில்ல. ஆனால் அனுபவம் என்பது நேரடியாகத் தொடர்புடைய ஒரு விடையம். அதற்கு வெளியில் இருப்பவர்களை விட அனுபவத்தைப் பெறுபவர். ஒடுக்கு முறைக்கான அறிதலுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

அடையாளங்களோடு இயங்குபவர்கள் மீது வைக்கப்படுகின்ற மற்றுமொரு குற்றச்சாட்டு இவர்கள் அமைப்புகள் கொண்டிருக்க வேண்டிய கட்டமைப்புகளோடு, அமைப்புத் துறை கோட்பாடுகளுடன் இருப்பதில்லை, இயங்குவதில்லை என்பது.

அதாவது வெளியிலிருந்து வரும் எவரும் இவர்களைப் பிரித்தாளக் கூடியதாக இருக்கும். அதாவது தீவிர வலது சாரிய கருத்தியலை வாத திறமையால் இவர்களது அமைப்புக்குள் பலமாக்கக் கூடிய ஆபத்தும் இருக்கிறது. எந்த கருத்தையும் எவருடைய தனிப்பட்ட கருத்து என்ற போக்கில் எடுத்துச் சொல்லக் கூடிய நிலை இருக்கும் போது இயக்கம் அமைப்பு கட்சி என்ற திட்ட வட்டமான கட்டமைப்பிலிருந்து விலகிய மேடை நிகழ்ச்சி போன்ற ஒரு தோற்றத்தையும் போக்கையும் அது கொடுக்கக் கூடும்.




பெண்கள், கருப்பினத்தவர்,தலித் மாற்றுப்பாலினத்தவர்கள் என்ற அடையாளங்களைத் தாங்கிய ஒன்றைக் காரணத்துக்காக அத்தகைய அமைப்புகளில் இணைய போதுமானதாக இருக்கிறது. அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதற்கான அடிப்படை வரலாற்று அரசியல் காரணங்களைப் புரிந்து அவற்றுக்கான திட்டம், அதற்கான நோக்கம், கொள்கை போன்ற கருத்தாக்கம் கொண்ட வரைபை அவை பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை என்பது அடையாள அரசில் மீது வைக்கப்படுகின்ற மற்றுமொரு குற்றச்சாட்டு.

பொறுப்புக்களைத் தட்டிக்கழித்தல்:

இந்த ஒடுக்கு முறைகளுக்குள் இருக்கின்ற அரசியல் கூறுகளைப் புரிந்து கொள்ளத் தவறுவது என்பதை ஒருவர்த் தனியாகக் கொண்டிருக்கின்ற பாவச் செயலாகக் கடந்து போக முடியாது. ஒரு தொழிலாளி தானேயாகிய வர்க்கத்திருந்து தனக்காகிய வர்க்கமாக எளிச்சி பெறும் போதுதான் போராட்டத்துக்குத் தயாராகிறார். அதே போன்றுதான் மேற் சொன்ன நேரிடையான அடையாள அனுபவம் பொதுப்படையான அரசியல் புரிதலுக்கு வந்தடையக் காலமாகலாம். அந்தப் பணியைச் செய்ய வேண்டியவர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து தப்புவதற்காக அல்லது தட்டிக் கழிப்பதற்காக அடையாள அரசியல் என்று அடிக்கும் வேலையைச் செய்கின்றனர்.


மேற் குறிப்பிட்ட விடயங்களிலிருந்தும் வாத பிரதி வாதங்களிலிருந்தும் பார்த்தால் அடையாள அரசியல் பற்றிய கமுனிஸ்ட்டுகளின் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக தங்களது ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சனைகள் அது சார்ந்து இயங்குபவர்கள் அப்பிரச்சனைகளை ஒட்டு மொத்த சமூக மாற்றத்துக்கான போராட்டமாகப் பார்க்காமல் தத்தமது அமைப்புகளை அதை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் இருப்புக்கானதாக மாற்றிக் கொள்கின்றனர் என்றும், அது ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே அவர்களுக்கான நலன்கள் பிழைப்பாகவும் போய்விடுகிறது என்பதும் குற்றச்சாட்டுகளாகும்.

நலன்களில் தேங்காமல் சமூக உணர்வை வளர்தல்:

இதைக் கூர்ந்து அவதானித்தால் இவை முழுக்க ஒடுக்கப்பட்ட சாதிய, பெண்ணிய, இனவாத அமைப்புகளுக்கு மட்டுமே பொருத்தமான ஒன்றல்ல. மேற் குறிப்பிட்டது போன்று தொழிற் சங்க இயக்கங்களுக்கும், தொழிலாளர் அமைப்புகளுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றுதான் என்பதைப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

இத்தகைய அமைப்புகளும் கூட ஆரம்பத்தில் போராட்டம் புரட்சி என்றே தொடங்குவர். காலப் போக்கில் கட்சியாக அமைப்பாக இருப்பதுவே வாழ்க்கையாகப் பிழைப்பாகப் போய்விடும் அவர்களுக்கு. அவையமே 'கட்சி' 'அமைப்பு' ஒரு அடையாள இருத்தலாக மாறிவிடுகிறது. அதற்கு மேல் கட்சியையோ தொழிலாளர் அமைப்பையோ கொண்டு செலுத்த வேண்டுமானால் தற்போதைய தங்களது நிலையைக் கேள்விக்கு உட்படுத்தி சவாலுக்குத் தயாராகவேண்டிவரும். அதனால் அவர்களின் தற்போதைய நலன்கள் பாதிக்கப்படலாம்.

லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற புத்தகத்தில் ஒரு இடத்தில் 'தொழிற் சங்க இயக்கத்திற்கும் சமூக சனநாயக உணர்வுக்கும் உள்ள வித்தியாசம்' என்ன என்பது பற்றி பேசுகிறார். தொழிற் சங்க உணர்வென்பது அதில் வருகின்ற வெற்றி இலாபம் என்பதை மையப்படுத்தி அதற்குள் நின்று கொள்வது, (அதற்கு மேல் செல்ல முற்படும் போது நலன்கள் அடிபட வாய்ப்புகள் உள்ளன என்ற அடிப்படையில்)

ஆனால் அந்த எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்படுகின்ற எல்லா சக்திகளையும் விவசாயிகள், மாணவர்கள் படையினர், பெண்கள், என்று எல்லோரையும் ஒன்றிணைத்து இந்த ஒடுக்கு முறைகளில் இருக்கின்ற பொதுவான பண்பை விளங்கி இணைத்து ஒட்டுமொத்த சமூக மாற்றத்துக்கான போராட்டத்தில் இணைவதிலேயே மாற்றம் தங்கியுள்ளது- என்ற பிரஞ்சை கொள்ளும் சமூக உணர்வு பெறுவதுமே அது. அது தொழிற்சங்க எல்லையைக் கடந்து வந்த ஒன்று.

மேற் சொன்ன அமைப்பு கட்சிகள் போன்ற வற்றுக்கும் இத்தகைய பொருத்தப்பாட்டு விளக்கத்தைப் பெற முடியும் என்றே நினைக்கிறேன். ஆனால் இங்கு பிரச்சனை என்ன வென்றால் வெறுமனவே அடையாள அரசியல் அமைப்புகளை மட்டும் சாடி தாங்கள் புனிதர்களாகவும் அவர்களைப் பிழைப்பு வாதிகளாகவும் காட்ட வெளிக்கிடுவதுதான். வர்க்க வாதிகளான இவர்களது நடவடிக்கைகள் மக்களை இவர்களிடமிருந்து விலத்தி வைக்கிறது.

'சாதியா, வர்க்கமா' என்ற கேள்வியில் சாதியப்பிரச்சனையை வர்க்க விடுதலையின் எதிர் நிலையில் வைத்த கம்யூனிஸ்ட்டுகள், தங்களது புனித பொருளாதார வாதத்திற்குத் துரோகம் செய்ய முடியாமல் 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை' ஆதரித்து சி.பி.எம் 10 வீத இட ஒதுக்கீட்டுக்கு வாக்களித்தமை இங்குச் சொல்லலாம்.

இத்தகையவர்கள் அடையாள அரசியல் பற்றிப் பேச என்ன தகுதியும் அறமும் இருக்க முடியும். சி.பி.எம் இத்தகைய நிலைப்பாடுகளை எடுப்பதற்குக் காரணம் 'பார்ப்பன'த் தலைவர்கள்தான் என்பது பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டகளின் குற்றச் சாட்டை எப்படிப் பின் தள்ள முயும்.

இங்கு சமூகம் பல பிரிவுகளாகவும் உட்பிளவுகளாவும் பிரிந்தே கிடக்கின்றன. அவை பேசப்படா விட்டாலும் நாம் அதுவாகத்தான் பிரிந்து இருக்கிறோம் என்பதுதான் உண்மை. எமக்குச் சவாலான ஆய்வுகளுக்கும் கோட்பாடுகளுக்கு முகம் கொடுக்க தயாரில்லாத காரணங்களுக்காகத் தட்டையா கோசங்களுக்குள் முடங்கி கிடப்பது எமக்கு வசதியாக இருக்கிறது. ஆனால் நாம் வாழும் சமூகமும் அது இயங்கிக் கொண்டிருக்கிற முறையும் அப்படியானதல்ல.

-பாரதி சிவராஜா-
----------------------------------------------

பி.கு: கடந்த சில மாதங்களுக்கு முன் எமது தோழர்களுக்கிடையிலான அரசியல் கோட்பாட்டு உரையாடலுக்காக அடையாள அரசியல்'( identity politics) தொடரடபான சில கட்டுரைகளையும் மற்றும் அடையாள அரசியல் குறித்த சமகால விவாதங்களில் மார்க்சிய தலையீடுகளை மையமாகக் கொண்டு வந்த சில விவாத கட்டுரைகளையும் எடுத்துக் கொண்டோம். அவற்றிலிருந்து புரிந்து கொண்டும் எழுத முயன்றிருக்கிறேன்.


கருத்துகள்

  1. https://medium.com/@panthershub767/postmordernism-feminism-anuradha-gandhy-c99742c96ca8

    பதிலளிநீக்கு
  2. பின்னை நவீனத்துவம் சமீப காலங்களில் தீவிரம் கொள்ளும் ஒரு புதிய சனநாயக அலையின் கருத்தியல் என பின்நவீனத்துவத்திற்கு ஒரு அரசியல் அடையாளத்தையும் சூட்டுகிறார் முத்துமோகன். ஆனால் மற்றொரு பார்வையில் நவீனத்துவத்திற்கும் பின் நவீனுத்துவத்திற்கும் பெரிதாக வேறுபாடுகள் கிடையாது என்றே பகிரங்கமாகக் கூறுகிறார். உலகம் பற்றிய எல்லாச் சித்தரிப்புகளிலும் மனித மனத்தின் கறிபிதங்களுக்கு முதன்மையான இடம் உண்டு என்று கான்ட் கூறுகிறார்... பின்னை நவீனத்துவம் இந்த கான்டிய மறு உயிர்ப்பை மேலும் தீவிரப்படுத்துகிறது. அனுபவங்களாலும் கற்பிதங்களாலும் மொழியாலும் புற உலகம் குறித்த பார்வைகள் மட்டுமின்றி தனிமனிதனும் கூட கட்டமைக்கப்படுகிறான். எனது கட்டமைப்புகளே என்னை ஏமாற்றிவிட்டன என்று அவன் வேதனையோடு உணர்கிறான். அவனது சோகமே கேளிக்கையாக உருமாற்றம் பெறுகிறது... இது தான் பின்னை நவீனத்துவத்தின் தத்துவ நிலைப்பாடு என பின்நவீனத்துவ சிந்தனை பற்றிய தன் கருத்துக்களை, தன் விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார் எனக் கூறலாம். பின்நவீனத்துவ சிந்தனையின் பரிமாணங்களில் இதுவும் ஒன்று என ஒப்புகொள்ள வேண்டி இருந்தாலும் முத்துமோகன் பின் பின்நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்றான இத்தன்மை தான் பின்நவீனத் தத்துவத்தின் நிலைபாடு என முடித்திருப்பது வருத்தம் தருகிறது. வேறுபட்ட தனிமனிதர்களின் புலம்பல்கள் அவநம்பிக்கைகள் இவற்றின் குவிப்பே இச்சிந்தனை என்பது போல் அவர் எழுதியிருப்பது அவநம்பிக்கையான போக்காக தோன்றுகிறது.
    விமர்சனங்களை முன்வைத்து கருத்தியல் அமைப்புகளைத் தகர்ப்பது மட்டுமே பின்நவீனத்துவத்தின் ஒரே குறிக்கோள் எனும் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். டெரிடா போன்ற பின் நவீனத்துவ சிந்தனையாளரின் தளம் மிகவும் பரந்துபட்டது. டெரிடா முன்வைத்த விவாதத்தின் வீச்சு எவ்வளவு வீரியமானது என்பதைப் புரிந்து கொள்ள அவர் இறப்பே மிகப்பெரியச் சான்றாகும். டெரிடா இறந்து விட்டார் என்பதை தத்துவவாதிகளும், பத்திரிக்கையாளர்களும் மட்டும் பேசவில்லை. இலக்கிய விமர்சகர்கள், பொருளாதார அறிஞர்கள், ஏன் சட்ட வல்லுனர்களும் உளவியல் ஆய்வாளர்களும் அச்சம்பவத்தை ஆழ்ந்த வருத்தத்துடன் வெளிப்படுத்தினர். கட்டுடைத்தல் போன்ற பின்நவீனத்துவ சிந்தனையின் மறுபக்கம் சமூக அரசியல் தளமாகும்.
    தத்துவச் சிக்கல்களை கேள்விக்குள்ளாக்கிய அதே நேரத்தில் லியடார்ட், ஃபூக்கோ, இஹாப் ஹாசன், டெரிடா போன்ற பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் மனித உரிமைகள், விலங்குகள் உரிமைகள், போர், தீவிரவாதம், இனப்படுகொலை, நீதி மரணம், நட்பு, சமாதானம், இனக்குழுக்களின் கலாச்சாரம், வட்டார கலாச்சாரங்கள் போன்ற சமூக பண்பாடு சார்ந்த விடயங்கள் குறித்த கருத்தாடல் பங்களிப்பை பெரிதும் ஆற்றியுள்ளனர்.
    சமூக அரசியல் வட்டத்தில் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்களின் இனக்குரல்களை அவர்கள் தூக்கிப்பிடித்து வந்துள்ளனர். ஓரின சேர்க்கையாளர்கள், கருப்பின மக்கள், குறுநில மக்கள், திருநங்கைகள் போன்ற முகம் மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்டவர்களின் உரிமைகளை முன்னிறுத்தி அவர்கள் அதிகார மையங்களை கட்டுடைக்க சிந்தனை பலம் அளித்துள்னர். மற்றமையின் உரிமைகள் மீது அக்கரை கொண்ட இவர்களின் சிந்தனைகள் பன்மிய நிலைகளை, வேறுபாடுகளை, வேற்றுமைகளை, நெகிழ்ச்சி தன்மைகளை, வித்யாசங்களை கொண்டாடும் மனோபவத்தை பறைசாற்றின. அதே சமயம் அச்சிந்தனைகள் எவ்வித தீவிர நிலைபாடுகளையும் முன்னிறுத்தவில்லை... இங்குதான் பிரச்சினையே.

    பதிலளிநீக்கு
  3. https://namaduillakku.blogspot.com/2023/05/blog-post_15.html?m=1

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!