பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!



நில உடைமை சிந்தனைகள்;

பிற்போக்குத்தனத்தைப் பீற்றுவது’ - தப்பெண்ணங்களை(prejudice)என்றால் என்ன?(இது தொடர்பில் முன்தினமும் எழுதியிருக்கிறேன்). திரும்பவும் எழுதத் தூண்டியிருக்கிறது அண்மையில் நடந்த நடக்கின்ற சம்பவங்களால்.

வரலாற்றுப் பொருள்முதல் இயக்கவியல் பொருள்முதல்வாத சமூக அறிவியலின் படிநிலை படி பார்த்தால், நில உடைமையான கூறுகள், சிந்தனைகள், செயற்பாடுகள் பிற்போக்கானதாகவும், சக மனிதர்களை ஒடுக்கப் பயன்படும் போது அது மோசமாக எதிர்க்கப் பட வேண்டிய அடக்குமுறையாகவும் கருதப்படுகிறது. பிற்போக்குத்தனங்களை அல்லது பகுத்தறிவுக்குப் பொருந்தாத விடயங்களை தூக்கிப் பிடிக்கின்ற சமூக அரசியல் நிலைகளும் உள. அதை வேறு விதமாகவே அணுக வேண்டியும் உள்ளது.

இப்போது நடந்து கொண்டிருக்கிற விடயம் ஒன்றுக்கு வருவோம். உலக கிண்ணத்தின் மீது அவுஸ்திரேலிய விளையாட்டு போட்டியாளர் காலை தூக்கிப் போட்டுக் கொண்டு இருக்கின்ற படம் அது. இது ஏன் எம் சமூகத்தில் இருப்பவர்களால் ஒரு வகையான பாராட்டைப் பெறுகிறது என்று கூர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி பார்க்க முடியாதவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது அதிர்ச்சியாகவும், அதை விளங்கப்படுத்த வேண்டிய தேவையும் இருப்பதாக உணர்கிறேன்.

இந்த குறித்த சம்பவம் இந்தியாவில் நடந்த உலக கிண்ண கிரிகட் போட்டியோடும் அங்கு நிகழ்ந்த காரண காரியங்களோடும் அணுகிச் சிந்திக்க வேண்டும். அந்த குறித்த புகைப்படம் எம்மவர் மத்தியில் பேசப்பட்டமைக்கு என்று குறிப்பான பண்புகள் உண்டு. இடம், காலம், சம்பவம் நிகழ்ந்த சந்தர்ப்பங்கள் என்று இவற்றை இணைத்து-பிரித்துப் பார்த்து யோசிக்கப் பழக வேண்டும்.

பொருட்களின்(செல்வம்),நிலத்தின், மூத்தவர்களின், திருமணத்தின்(இப்படி பட்டியல் பெரிது) மீதான மரியாதை என்பது 'நில உடைமை' சிந்தனையிலிருந்து(feudal mindset) வருகிற ஒரு விடயம். நில உடமையின் உற்பத்தி சக்தி -உற்பத்தி உறவு சிந்தனையிலிருந்து வெளியேறுவது முற்போக்கான சமூக மாற்றத்திற்கான ஒன்று.

நிலவுடமையில் நிலமும் அதனுடன் கூடிய விவசாயமும் பண்ணை முறைகளும் அதனோடு இணைந்த அடிமை மனித உறவுகளும்( இது அய்ரோப்பா போன்ற தேசங்களுக்கு மிக பொறுத்தம் என்றாலும் நமது ஆசிய தேசங்களில் பின் வந்த காலனித்துவம், அதற்கும் முந்திய சாதிய தீண்டாமை கருத்து கட்டமைப்புகளோடும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது) இன்றும் எமக்குள் செல்வாக்கு செலுத்துகின்றன.

   மரியாதை யாததெனில்...

உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் சொல்கிறேன். வயதில் ஒருவர் மூத்தவர் என்பதற்காக 'மரியாதை' கொடுக்க வேண்டும் என்பது மிக மோசமான நில உடைமை சிந்தனை. இது தமிழர்களின் பண்பாடு என்று பிழையாக புரிந்து கொள்ளப்படுகிறது. திருக்குறளை ஆரிய பார்ப்ப சிந்தனைக்கு எதிரான ஒன்றாக முன் நிறுத்துவதற்கு காரணம் திருக்குறள் சுயமரியாதையை பேசுகிறது. சுய மரியாதை என்பது எல்லா மனித உயிர்களுக்குமானது என்னும் போது எமக்கு இன்னுமொரு பெயரை மறக்க முடியாது அது தந்தை பொரியார்.

ஆரிய பார்ப்பனியம் முருகனுக்கு ஒரு அண்ணன் 'பிள்ளையாரை' உருவாக்கி எந்த ஒரு செயலை செய்ய தொடங்கும் முன்னும் வழிபட வேண்டிய கடவுள் யார்? என்று கேள்வி கேட்டு 'விநாயகர்' என எமக்கு பாடசாலையில் கற்பிக்கப்படுகிறது. இருந்த இடத்தில் இருந்து அசையாத, அசைய முடியாத பிள்ளையாருக்கு முதல் மரியாதையாம். அதற்கு காரணம் மூத்தவராம்.
ஆனால் திருக்குறள் இப்படிச் சொல்கிறது..

''இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.''

இந்தச் செயலை இதன்பொருட்டு இவரால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும். இங்கு வயது மூத்தவர் இளையவர் என்ற நில உடமை சிந்தனை இல்லை.

ஒவர் எத்தனை மோசமானவர் என்றாலும் அவரை மதிக்கப் பழக வேண்டும். கொண்டாட வேண்டும், பதவி கொடுக்க வேண்டும் என்பது எதிலிருந்து வருகிறது என்றால், குடும்பத்தில் முத்த(அதிலும் ஆணுக்கு) அரசனாகும் அதிகாரம் இருக்கிறது என்ற நில உடமையிலிருந்துதான். இளையவன் சிறந்தவனாக இருந்தாலும் கூட அவன் அரசனாக முடியாது. ஆனால்
முதலாளித்துவ சனநாயகம் என்பதற்குள் மேற் சொன்ன உற்பத்தி சக்தி-உறவு முற்றாக மாறுகிறது.

பிக்பாஸ் நிகழ்வில் வயதில் பெரியவர் என்பதற்காக தன்னை தாயாக ஏற்க வேண்டும் இல்லையேல் மேடம் என்று அழைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட நிகழ்வு ஒன்றை பார்க்க கிடைத்தது. அதாவது ஒரு பேட்டி நிகழ்வில் கூட பெயரை சொல்லி அழைப்பது மரியாதை இல்லை என்று நம்ப வைக்கப் படுகிறது. அய்யா, சாமி, துற, பணம் படிப்பு அந்தஸ்த்து , அதிகாரம் இருப்பவனுக்கு பம்முவது நெலிவது எல்லாம் மரியாதை ஒழுகம் பண்பாடு என்று நில உடமை கற்பிக்கப் படுகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் இருந்து கொண்டு நிலவுடமை உறவுகளை நியாயப்படுத்துவது முற்போக்கானது அல்ல. அதே போல் முதலாளித்துவத்திற்குள் இருந்து கொண்டு வெறும் முதலாளித்துவ சன நாயகம் பற்றி சிந்திப்பதும்,செயற்படுவதும் உழைக்கும்- ஒடுக்கப்படும் மக்களுக்கானதாக இருக்க மாட்டாது.

இப்படியே குறித்த புகைப் படத்திற்கு வந்தால், முதலாளித்துவ சனநாயகம் வளர்ச்சி அடைந்த நாடுகளில் நில உடைமை சிந்தனைகள் மிகக் குறைவாகவே இருக்கும். இந்த அடிப்படையில் பட்டங்களும் பதவிகளும் பொருட்களும் நிலங்களுக்குமான போட்டி இருக்குமே ஒழிய அதில் பெருமைகொள்ள அதற்கு மரியாதை செலுத்த ஒன்றும் இருக்காது. ஏன் என்றால் அங்கு இவற்றைப் பெறுவதற்கான சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்புகள் பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்திருக்கிறன. அதாவது முதலாளித்துவம் வளர, தாக்குப்பிடிக்க பொதுவானதாக்க ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எம் மத்தியில் உள்ள பல நில உடைமை சிந்தனை கூறுகள் பொருளாதார அரசியல் சமூக விடயங்களில் அடிப்படையான விடயங்களைச் சகலரும் பெறுவதில் இடைஞ்சல்களை ஏற்படுத்தியிருக்கின்றன. முதலாளித்துவ சன நாயகத்தை மிக குறைந்த அளவு கூட நாம் நுகர்வதில் சிக்கல்களை அவை ஏறபடுத்தியுள்ளது.

இங்குதான் ஒன்றைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வுகளை ஏதோ ஒரு வகையில் கொண்டாடுகிறவர்களுக்கு இந்தப் படம் சிக்கலை ஏற்படுத்துகிறது. இவை மேற்கத்திய வளர்ப்பு, சிந்தனை, அது நம் கலாச்சார பண்பாட்டிற்கு ஏற்றதல்ல என்று உருட்டுகின்றனர். அந்த விளையாட்டுப் போட்டியாளர் காலை கிண்ணத்தில் போட்டதாலேயே முற்போக்காளர் என்று சொல்ல முடியாது என்றும் இன்னுமொரு வாதம் வருகிறது. இது எனக்குச் சிரிப்பை ஏற்படுத்துகிறது. இங்கு நாம் அந்த நபர் குறித்தான வாதத்தை சிறிதும் செய்ய வில்லை. அந்த போட்டியாளரின் செயற்பாடு தொடர்பான படம் குறித்தானது. எதைச் சுருக்கி எதை நீட்டிப் பார்க்க வேண்டும் என்பதற்கு அளவுகளை ஓரளவாவது புரிந்து விவாதிப்பது தேவையாக உள்ளது.

பெற்றோர்களின், ஆசிரியர்களின், அரசியல் வாதிகளின், ஏன் முதலாளிகளின் கால்களில், ஒடுக்குகின்ற சாதி தடித்தவனின் கால்களில், மத தலைவர்களின் கால்களில் விழுவது கூட மிக சாதாரணமாக இருந்த கலாச்சார பண்பாட்டு மிச்ச சொச்சங்களில்தான் நாம் இன்றும் வாழ்கிறோம். இவற்றைச் சரி என்று வாதிட முடியுமா? எத்தனை கேவலமான அடிமைத்தனத்தின் சிந்தனை செயற்பாட்டு முறை இது. பெற்ற பிள்ளை என்றாலும் அவர்களைத் தனியான சக மனிதனாக மதிப்பதுதானே மனித அழகும் அறமும்.

ஒவ்வொரு மனித குழுமத்திற்கும் ஒவ்வொரு பண்பாடு இருக்கிறது என்பதற்காகக் கேள்விகளே இல்லாமல் எதையும் கொண்டாடிவிட முடியுமா? அப்படிப் பார்த்தால் உடன் கட்டை, பூப்பெய்தல் கொண்டாட்டங்கள், தாலி, பார்ப்பனிய-வகாபிச என்று எல்லா கருமத்தையும் ஏற்றுப் போற்ற வேண்டியதுதான் வரும். கால் என்பது உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பு. அதைக் கீழானதாகத் தீண்டத் தகாததாகக் கற்பித்ததில் நில உடைமை மதங்களுக்கும் அதை ஒட்டி வந்த சாதிய கட்டமைப்பிற்கும் நலன்கள் உண்டு. அதை ஒரு மனித குழுவின் விழுமியங்கள் என்று ஏற்றுக் கொள்ள முடியாது.

விளையாட்டோடு தொடர்புடைய மிக சுவர்சியமானதும் சிந்திக்கக் கூடிய ஆழமான ஒரு கட்டுரை படிக்கக் கிடைத்தது. தொ. பரமசிவன் 'அறியப்படாத தமிழகம்' என்ற நூலில் இதைச் சொல்கிறார். விளையாட்டுகளோடு பிணைந்திருக்கும் எமது சிந்தனைப் பற்றிது இது. தனியுடைமை தோன்றி வளரும் காலத்தின் அதனை நியாயப்படுத்தும் படியான கூறுகளைப் பல்லாங்குழி,சூதாட்டம்,ஆடு புலியாட்டம்,சதுரங்கம் தாயம், செய்திருக்கின்றன என்கிறார்.

'தனியுடைமை உணர்வினையும் தனிச் சொத்தின் வளர்ச்சியின் விளைவாகப் பிறந்த வறுமையினையும் பண்பாட்டு ரீதியில் நியாயப்படுத்தும் ஆட்களே. இந்த நியாய உணர்ச்சி மனித மனங்களில் திணிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

சம தன்மை நிலவிய பண்டைய சமூகத்தில் 'சூதூ'-'ஆட்டம்' மூலம் சமதன்மை குழைக்கப்பட்டு செல்வம் என்பது பறிப்பது, பிடுங்குவது என்ற நேரடி வன்முறையில்லாமல் அடுத்தவன் கைக்கு எளிமையாகப் போய்ச் சேர்ந்து விடுகிறது. வறுமைக்கான காரணத்திற்கு மனிதனை மீறிய ஒரு சக்தி உள்ளது என்ற கருத்தும் உணர்வும் இப்படித்தான் மனித மனங்களில் உருவாக்கப்பட்டது. விளையாட்டிலும் தோற்றவன்(ர்) எதிரியின் திறமையால் மட்டும் தோற்றதாகக் கருதுவதில்லை. அதற்கும் மேலான ஒன்று(அதிஸ்டம்,கெட்ட நேரம்,ஊழ்) இருப்பதாக நினைத்து தனக்கு நிகழ்ந்ததை ஏற்றுக் கொள்கிறனர்.

சூதாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் தொடர்பு உண்டு என்பதோடு நிகழ்கால பன்னாட்டு நிறுவனங்கள் கவர்சிகரமான பரிசு,பணம் என்று போட்டியாளர்களை சூதாட்ட உணர்விலேயே வைத்திருக்கின்றன என்கிறார்- அவர்.

எனக்கு அண்மைக்கால பஞ் ஒன்று நினைவுக்கு வருகிறது. ஏழையாகப் பிறந்தது என்னுடைய தவறில்லாமல் இருக்கலாம் ஆனால் ஏழையாக சாவது என்டையது. இந்த இடத்தில் கிராம்சியையுடைய 'பண்பாட்டு மேலாண்மை' பற்றிய கருத்துக்களை நினைக்காமல் கடக்க முடிய வில்லை.

இது இப்படியே நிற்க:

இன்னும் சிலதைப் பற்றியும் கையோடு எழுதி விடலாம் என்று இருக்கிறேன். கீழ் வருகிற விடயங்களுக்கும் மேற் சொன்ன விடங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதால் அவற்றை இதனோடு இணைத்து சொல்லி விடுகிறேன்.

தப்பெண்ணம்(prejudice

-----------------------------------------

ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும், இனத்திற்குள்ளும்,பிரதேசத்திற்குள்ளும் பிற சமூகத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள்(prejudice) இருப்பது உண்மை.


ஆனால், இதில் மிகப் பொரிய அபத்தம் என்ன வென்றால், அந்த தப்பெண்ணங்கள் கூட (பிற சமூகங்கள் மீது) தன் சமூகத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அரைவேற்காட்த்தனம்தான். இவர்களைத்தான் ''பிற்போக்குத்தனத்தையும் பீற்றிக் கொள்பவர்கள்'' என்ற சொற்றொடரில் நாம் அழைக்கத் தொடங்க வேண்டும்.

எம்மவர்களுக்குள் இருக்கின்ற தப்பெண்ணங்கள் சில:

*தமிழ் இந்துக்கள் பற்றி- பீத் தமிழன், தூய்மை அற்றவர்
*தமிழ் முஸ்லிம்கள் பற்றி- தொப்பி பிரட்டி,தூய்மை அற்றவர்
*தமிழ் கிறிஸ்துவர் பற்றி- பாவாடை,
*சிங்களவர் பற்றி- மோடயன்,
*மட்டக்களப்பார்கள்(கிழக்கு) பற்றி-காட்டிக்கொடுப்பான்
*யாழ்ப்பாணத்தார்(வடக்கு) பற்றி- பணங்கொண்ட,நண்டு
*தீவாவார்கள் பற்றி- புங்குடு தீவாருக்கு புகையிலை விற்ற( கஞ்சர்கள்)
*மலையக தமிழர்-வடக்கத்தியான்

இப்படிப் பல சொற்கள், சொற்றொடர்கள் ஒருவரை ஒருவர் தாழ்த்த,ஒடுக்க வெறுமனே பொதுப்புத்தியில் பயன் படுத்தப்படுகிறது. இவற்றில் மண்டை வீங்கிய காழ்ப்புணர்வைத்த விர வேறு எதுவித உண்மையோ, அறிவியலோ, சமூகப் புரிதலோ கிஞ்சித்தும் கிடையாது.

இத்தகைய தப்பெண்ணங்கள், அவரவர் சமூகத்தினர் அதிகமாகக் கலந்து கொள்ளும் இடங்களில்,விழாக்களில் பிறசமூகத்தினர்( குறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில்) நாசுக்காக அல்லது வெளிப்படையாகத் தாக்கப் பயன் படுத்துவர். ஆனால் சமூக அறிவில் புரிந்த எவரும் அவற்றைப் பயன்படுத்த வெட்கப்படுவர். பயன் படுத்துபவர்களைப்பார்த்து அருவெறுப்பும் கொள்வர்.

நிற்க!
23.09.2023 அன்று விம்பத்தால் நடத்தப்பட்ட முழு நாள் சிறுகதை, நாவல் கருத்தரங்கு நிகழ்வில் சர்மிளா சையத்துடைய 'இருசி' என்ற கதைப் புத்தகத்தைப் பேசிய றஜிதா சாம் பிரதீப்- 'மூத்திரம் கழுவாத தமிழன்' என்று ஒரு பாத்திரம் இன்னொரு பாத்திரத்தை விழிப்பதாகவும், இப்படி ஒரு பார்வை இஸ்லாமிய( முஸ்லிம்) சமூகத்தில் இருப்பது தனக்குத் தெரியாது என்றும். 'கழுவாத ஆட்கள் தயவு செத்துக் கழுவிக் கொள்ளுங்கள்'.. என்று முடித்தார்.

அதாவது ஒரு ஒடுக்குமுறை தப்பெண்ணத்தை political correctness ஆகப் பேசத் தெரியாமல் இப்படிச் சொதப்பி இன்னுமொரு தப்பெண்ணத்தை மாற்று இனத்தின் மீது விதைத்துப் பேசினார். இது இலங்கை இஸ்லாமிய சமூகம் பிற தமிழ் சமூகம் மீது கொண்டுடிருக்கிற மோசமான பார்வை என்பதை அடித்துப் பேசியிருக்க வேண்டும். இங்கு அவர் பேசத் தொடங்கும் போதே முஸ்லிம் சமூகத்தாருடைய இலக்கியங்களைப் படித்ததில்லை, இதுதான் முதல் புத்தகம் என்றும் குறிப்பிட்டே பேசுகிறார். இங்குப் பலருக்குப் பிற சமூகங்களோடு ஒட்டுமில்லை உறவுமில்லை. பின் எங்கிருந்து பிற சமூகங்களுக்குள் இருக்கின்ற பரஸ்பரம் நல்லவை கெட்டவை தெரியப் போகிறது. வெறும் பொதுப் புத்தி தப்பெண்ணங்கள் மட்டுமே மிச்சம்.

இங்கு இவர் மட்டுமல்ல பலர் பொதுத்தளங்களில் ஊட்டங்களில் எதுவித சமூக அரசியல் பற்றிய அறிவியல் இல்லாமல் இப்படித்தான் நடந்து கொள்கின்றனர். கேட்டால், உங்களுக்குத்தான் எல்லாம் தெரியுமா-என்று குடுமி பிடிக்கு வருவினம். அவர்களுக்குப் பிற சமூக மக்கள் மீது இருக்கிற “தப்பபிப்பிராய குடுமி” மட்டும் பெரிது என்ற நினைப்பு. பிற சமூகத்திற்குள்ளும் இவர்களைப் பற்றிய குடுமி இருக்கும் என்பது பற்றிப் புரிதலுக்குக் கூட இவர்களின் தலைக்கனம் இடம் கொடுப்பதில்லை.

அதே போல், அண்மையில் வாசு முருகவேலின் ஆக்காட்டி என்ற ''முஸ்லிம் வெறுப்பு'' கதைப் புத்தகம் ஒன்றை லண்டனில் வெளியிட்டு விளம்பரம் செய்தது ஒரு தரப்பு. இந்த தரப்பு யார் என்று பார்த்தால் தங்களைப் புரட்சி, இடதுசாரிகள்,பெண்ணிய வாதிகள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள். இவர்களின் சமூக கடமைகளில் மிகப்பொரியது இப்படியான தப்பெண்ண குப்பைகளை விழுந்து விழுந்து விளம்பரப்படுத்துவது. இது ஒருவகையில் தங்களது இடத்தை எப்பாடு பட்டாவது தக்க வைத்துக் கொள்வதற்கான சித்த விளையாட்டு. இதனுள் மேற்சொன்ன பண்பாட்டு தப்பெண்ணங்களுக்கு நீர் ஊற்றி வளர்க்கும் போக்கு உள்ளது. அது பாலியல் சுரண்டலாக இருக்கலாம், சாதிய இனவாத பண்பாக இருக்கலாம்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீதான தப்பெண்ணத்தை கொட்டிருக்கும் ஆக்காட்டி கதைப் புத்தகத்திற்கு தடவி விட்டு வெள்ளை அடித்திருக்கிறார்கள். இவர்கள் வெறும் இலக்கிய வாதிகள் என்றால் இங்கு நாம் பேச எதுவுமில்லை. ஆனால் அதை ஒழுங்கமைத்து பங்கு பற்றிய பலர் தம்மை அப்படிச் சொல்லிக் கொள்வர்கள் அல்ல. தமிழ்- முஸ்லிம் சமூகங்களின் அரசியல் இருப்பிற்கும், வடக்கு கிழ்க்கு இணைப்பு நல்லினக்க அரசியல் இருப்பிற்கும் இரு சமூகத்திற்கான ஒற்றுமை என்பது மிக அடிப்படையானது.

எது எப்படி இருந்தாலும் ''புத்தகம்'' என்ற பெயரில் அச்சில் வந்து விட்டால் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் கூட்டம் கொஞ்சம் இருக்கிறது.! இது அப்படியிருக்க 'இஸ்லாமிய வெறுப்பு புனைவை' 'ஆவணம்' என்று சொல்லும் அளவு நேர்த்தியாக இந்த பேச்சாளர்கள் மிகக் கவனமாக இந் நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது கவத்திற்குறியது.

'சோனகர்' என்பதை 'சோனி' என்று பாவிக்கும் போதுதான் அது ஒடுக்குமுறைச் சொல்லாகிறது. ஆனால் வாசு முருகவேல் முஸ்லிம்கள் மீதான காழ்ப்பில் 'சோனகர்' என்று பாவித்திருக்கிறார் என்பது தெளிவு. இதைப் புரிந்து கொள்ளாமல் நடிக்கின்ற பேச்சாளர்கள் வேண்டுமென்றே மிக வழிந்து வழிந்து அச்சொல்லை இயல்பில் வராத போதும் சொல்லுகின்றனர். இலங்கைச் சோனகர் என்ற பதமானது 'இலங்கை முஸ்லிம்கள்' என்ற பதத்தில் அரசியல் தளங்களில் சட்ட ஆவணங்களில் பாவிக்கப்படுவது மிக சாதாரண விடயமாகிவிட்டது.

ஆக்காண்டியும்- ஆள் காட்டியும்:


சோனகர் என்பது மிக அழகான சொல்தான். அரபியரைக் குறிக்க பயன்பட்டது. ஆனால் அதை எந்த தொனியில் பாவிக்கிறார்கள் என்னும்போது பொருள் மாறுபடும் என்ற அடிப்படை கூடவா புரிய வில்லை. வாசு முருக வேல் முஸ்ஸ்லிங்கள் மேல் நல்லெண்ணத்தில் 'சோனகர்' என்று பயன் படுத்தியிருக்கிறார் என்று சொல்லாத குறைமட்டும்தான் இங்கு நிகழ வில்லை.

இதே தொனியில் தழிர்கள் பற்றிய ஒரு தப்பபெண்ண குப்பையை மாற்று இனத்தவர்கள் யாராவது எழுதினால் மார்போடு அணைத்து புத்தகத்தை விளம்பரப்படுத்துமா இந்த கூட்டம். எனக்கிருப்பது ஒரே ஒரு கேள்விதான். உங்களை பிற்போக்கு வாதிகள் என்று சொல்லிக்கொண்டு, சங்கிகள் என்று காட்டிக் கொண்டு மனு நூல்லின் மறு பதிப்பிற்கும் விளம்பரம் செய்யுங்கள்.நாம் யாரும் திரும்பியும் பார்க்க மாட்டோம். நீங்கள் இடது சாரிகள், சோசலிச தமிழ் தேசியர்கள், பெரியாரியர்கள் என்றல்லவா தம்பட்டம் அடிக்கின்றீர்கள். அப்படியானால் நாங்கள் எல்லாம் யார்.

அண்மையில் செய்தியாளரைச் சந்தித்த சீமான் , ஒரு ஊடகவியலாளர் கேட்ட கேள்வியை எதிர் கொள்ள முடியாமல் கேள்வி கேட்ட ஊடகவியலாளரின் பெயரை கேக்கிறார். அவர் 'சிராயூடீன்' என்கிறார். அதற்கு சீமான், 'அப்போ நீ பேசுவ'- என்கிறார். சீமான் முதல் தடவையல்ல கேள்வி கேட்பவரின் பெயரைக் கேட்பது. இதற்குப் பின்னால் சீமான் செய்கின்ற மிகப் பெரிய இனவாத போக்கு உள்ளது. இஸ்லாமிய வெறுப்பு மட்டும்ல இரத்தப் பரிசோதனை செய்கிற இனவாத அரசியலும் உள்ளது. அரசியலை உண்மையாக எதிர் கொள்ளத் தயார் இல்லாத பேர்வழிகள் manipulating, அரசியலைக் கையில் எடுப்பது வழமைதான். கேள்விகளைக் கேட்பவர்களை பொதுப்புத்தியில் ஏதாவது ஒரு 'அடையாளத்துடன்' சேர்த்து அடித்து மூடிவிடுவது அதன் அடிப்படை. இந்த பொதுப்புத்தி இடையாள அரசியல் மிக இலகுவானது.

அதே போல் மேற் சொன்ன நிகழ்வில் சோபா சக்தியின் கருங்குயில் கதை பற்றி பேசியவர்களும் அக்கதையை ஆகோ ஓகோ என்கின்றார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் எவருக்கம் இந்த கதையின் கடைசி பந்தி கண்ணில் படாமல் போனது எப்படி. நீங்கள் கதை படிக்கும் இரசனையை மெச்சுங்கள், கொண்டாடுங்கள் அழகியல் என்று போற்றுங்கள் அதில் எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால் ஒடுக்கு முறையை சுரண்டலை, நியாயப்படுத்தும் அல்லது அதைச் செய்தவர்கள் நிலையை வைத்து கடந்து போகும் பண்பை விர்சனம் என்று வைத்துக் கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை செய்யாதீர்கள்.

அந்த கதை இப்படி முடிகிறது....
'' எல்லோருமே எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்.”
ஆனால், கருங்குயில் வீட்டிலிருந்த வெள்ளைக் கவிஞன் அதை மறக்கவில்லை. அவன் இலங்கையை விட்டு, தன்னுடைய செல்லப் பிராணியான கிரியாவுடனும் வெளியேறியதிலிருந்து, சரியாக நாற்பத்து மூன்று வருடங்களுக்குப் பின்னால் வெளியிடப்பட்ட ‘பப்லோ நெருடா: நினைவுக் குறிப்புகள்’ என்ற நானூறு பக்கங்களைக் கொண்ட சுயசரிதை நூலில் ஒரு பக்கத்தைச் சம்பங்கிக்காக ஒதுக்கியிருக்கிறான்.
(கிழிஞ்சி போச்சி)

அங்கு நிகழ்ந்திருப்பது ஒரு உண்மையான பாலியல் வன்கொடுமை சம்பவம்( rape crime) பப்லோ நெருடா ஒரு rapist writer. அதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. இதை வன்கொடுமை என்று எண்ணுகின்ற எவரும் நெருடா 'தனது புத்தகத்தில் பக்கம் ஒதுக்கியதைப்' புனிதப்படுத்த மாட்டார்கள்.

அதாவது எழுத்தாளன் என்ற சொல்லும் பாத்திரமும் புனிதமாக்கப்படுகிற நில உடைமை அதிகார சிந்தனையின் வெளிப்பாடு இது. இத்தகைய புனிதப்படுத்தல் சிந்தனை முறைகளுக்குள்ளாள் பல சுரண்டல்களைக் கடந்து செல்கின்ற போக்கு பல காலமாய் நிகழ்கிறது. எழுத்தாளன், புரட்சியாளன், போராளி, பெரியாரிஸ்ட் என்ற பதங்கள் சமூக நலன்களுக்கில்லாமல் தன் நலன்களுக்காகவும்,பல சுரண்டலைச் செய்து தப்புவதற்குமானதான பிரபள பட்டங்களாக்கப்பட்டிருக்கிறது.

இங்கு எழுத்தாளர்கள், கதைசொல்லிகள், அறிவாளிகள் எல்லோருக்கும் தங்களைப் பற்றிய அதீத விம்பங்கள் அவர்களுக்குள் விளைந்து கிடக்கிறன. அவர்கள் செய்கின்ற பாலியல் சுரண்டல்கள், துஷ்பிரயோகங்கள், மோசடிகள், வன்முறைகள் எல்லாம் தப்புக்களே இல்லை. அதை செய்ய தாங்கள் அதிகாரம் பெற்றவர்கள் என்பது ஒன்று. இன்னும் ஒன்று இப்படி எதையும் செய்து விட்டு ஒரு புத்தகம் போட்டால், அரசியல் பேசினால் அதற்கு இது பரிகாரமாகிவிடும் என்பது அடுத்தது. தம்மைத் தூக்கிச் சுமக்கப் பல இரசனை சொட்டும் இரசிக மன நிலை பெற்ற சிலர் இருக்கிறார்கள் என்ற தைரியம் அதற்கு வலுச் சேர்கிறது..


அதிக தப்பெண்ணங்களைக் கொண்ட சமூகம் அதிக பிற்போக்கானது- நில உடைமையின் மிச்ச சொச்சங்களை பண்பாடு, கலாச்சாரம் என்று புரிந்து கொள்ளும் அளவு சிந்தனையை மட்டுப்படுத்தாதீர்கள்.

-பாரதி சிவராஜா-



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.