ஈழ திருநங்கையின் அனுபவங்கள்

 

தனுஜா அவர்கள் தன் வாழ்க்கை அனுபவத்தை எழுதிய புத்தகம் பற்றிய 'தனுஜா' உரையாடல் 31 ஜனவரி அன்று zoom இல் பௌசரால் நடாத்தப்பட்டது.

இப்படி ஒரு புத்தகம் வருகிறது என்று அறிந்த போது அதை நான் தவறாமல் படிக்க வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி அதை வலுப்படுத்தியது. இலங்கையைச் சேர்ந்த தமிழ் திருநங்கையின் அனுபவங்கள் என்பவை இது வரை நாம் அறிந்தவற்றிலிருந்து மாறுபட்டவையாக, குறிப்பாக எமது ஈழத் தமிழ் பேசும் சமூகம் இது தொடர்பாக தம்மைக் குறைந்த பட்சம் குற்ற உணர்வோடும் பெறுப்புணர்வோடும் பார்க்கப் பழ ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்றும் நம்பலாம். நம்மை நாமே ஏதோ புனிதர்களாக ஒழுக்க சீலர்களாகக் காட்டிய படங்களுக்கு விழுந்த சம்மட்டி அடி என்றும் சொல்லலாம்.

இயலாதவர், ஒடுக்கப்பட்டவர், கைவிடப்பட்டவர் என்பவர்கள் மீதான எம் வன்முறை குணங்களில் நாம் மற்ற சமூகத்திலிருந்து ஒன்றும் குறைந்தவர் இல்லை என்பதை வரலாறு சொல்லும். அவை சந்தர்ப்பம் கிடைக்காத போது மட்டுமே நாம் எல்லோரும் தமிழ் பண்பாட்டுக் காவலர்கள் என்பதைச் சொல்பவை. உள் ஒன்றும் வெளி ஒன்றாகவும் போலி பிம்பங்களாக கட்டியவைகளை உடைப்பவை. அரசியல் பிரக்ஞையால் ஏற்பட வேண்டிய மாற்றங்களை எந்த சமூகமும் பிம்பங்களால் தக்க வைக்க முடியாது. தனுஜா அதற்கு நல்ல ஒரு உதாரணமாக இருக்கிறார் என்றே நம்புகிறேன்.

தனுஜா-நூலை நான் இன்னும் படிக்கவில்லை. இது- அந்நூல் பற்றிய பார்வையும் அல்ல. அன்றைய நிகழ்வையும் என்னால் அன்றே பார்க்க முடியவில்லை. எனது தோழி ஒருவர் சொன்னதன் பின்தான் பார்க்க வில்லை என்பதை உணர்ந்து முழுதாக பார்த்தேன்.

பார்த்தது மிக நல்லதாகப் போய் விட்டது புத்தகத்தைப் படிக்கும் போது எனக்கு அவை மிக உதவியாக இருக்கும். நிகழ்வில் நடந்த உரையாடல்களிலிருந்து என் அவதானிப்புகளை பொதுவாக என் அறிவுக்கு எட்டிய விடையங்களை எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. புத்தகத்தைப் படித்து விட்டு அதற்கான என் பார்வையை பின் எழுத முயல்கிறேன்.

மாற்றுப்பாலினத்தவர், திருநங்கை(நம்பி), பால் புதுமையானர் என்ற பல தமிழ்ப் பெயர்கள் தமிழில் அவர்களின் அடையாளங்களை விளக்க போதுமானதாக இல்லை என்ற வாதம் இருக்கிறது. என்னளவிலும் அப்பெயர்கள் உணர்த்தும் பொருள் சிக்கல்கள் கொண்டதாயும் எம்மிலிருந்து அவர்களைப் பிரிப்பதாகவும் உள்ளது. ஏன் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கின்ற இந்த வரத்தைப் பிரயோகங்கள் கூட அப்படித்தான் உள்ளது. அதை அகற்றி தமிழில் எழுதுவது எப்படி என்று யோசித்து விட்டேன் முடியவில்லை.

அதற்குக் காரணம் அவர்களை நாம் இன்னும் எமக்கு வெளியில் வைத்து ஒடுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதும் நாம் அவர்களாக அவர்கள் நாமாகச் சேர்த்து உணரும் நிலை என்பது இன்னும் சமூகத்தில் சிறியளவில் கூட நிகழவில்லை என்பதுமாக இருக்கலாம். அவை மொழியிலும் செல்லாக்கு செலுத்துகிறது. அவர்களுக்கான பிரச்சனைகள் தீரும் மட்டும் அவர்களை நம்முடன் இணைத்து எழுதுவது பேசுவது அரசியல் தளத்தில் சரியானதாக அமையுமா என்றும் குழப்பமாக உள்ளது. காரணம் எனக்கான தேடல் போதாது என்றே நம்புகிறேன்.

எல்லா வகையான அடையாளங்களும் இயற்கையானவையல்ல. தானே தோன்றி உருப்பெறுபவைகளும் அல்ல. அவை இடம் சார்ந்தும் காலம் சார்ந்தும் சமூக நிலை சார்ந்தும் உருவாகின்ற ஒன்று. அது திணிக்கப்படுகின்ற கட்டமைக்கப்படுகின்ற ஒன்றுதான்.

அதாவது ஆபிரிக்காவில் பிறந்து வாழும் நான் இனவாதத்தை உணர முடியாது. வெள்ளையர் வருகையும் அடிமைகளாக என்னை நாடு கடத்துவதும் வரலாற்றில் தற்செயலாக நடக்கின்ற நிகழ்வுகள். அது எனக்கான அடையாளத்தை எனக்குள் வலிந்து திணிக்கிறது. பின் அது கொண்டிருக்கின்ற ஒடுக்கு முறை கருவிகளைக் கொண்டு இனவாதத்தைத் தோற்றுவித்து என்னை ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்குகிறது.

இங்கு ஆண்-பெண் என்ற கருத்தியல் கட்டுமானங்கள் பலவழிகளில் மனிதர்களை ஏற்கனவே பிரித்தே வைத்திருக்கிறது. ஒரு பாலினத்தவராகப் பிறந்து இன்னுமொரு பாலினராக உணரும் ஒரு மனித உயிர் மேல் இச் சமூகமே அவர்களுக்கு இன்னுமொரு செக்ஸ்சுவாலிட்டி(திருநங்கை)அடையாளத்தைத் கொடுக்கிறது. அதைக் கொண்டு ஒடுக்குகிறது.


ஆனால் இந்த அடையாளங்களை வெறும் அடையாளங்களாக இலகுவாகக் தட்டிக் கடக்க கூடிய நிலையில் அவை இல்லை. அவை பொருள் வகை தன்மைகளோடு சமூகத்தில் ஆழ வேரூன்றி வரலாற்றில் நிலைத்து விட்டதை அறிந்து கொள்ள வேண்டும்.

இந்நிகழ்வில் இமயம் அவர்கள் பேசும் போது ஒரு இடத்தில் , ஒரு சிறு மெல்லிய கோடே தனுஜா என்ற புத்தகம் செக்ஸ்(உடலுறவு) புத்தகமாக மாறாமல் காப்பாற்றி உள்ளது-என்ற பொருள் படச் சொன்னார். இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். புத்தகம் படிக்காமல் நான் இதற்குக் கருத்துச் சொல்ல முடியாது.

ஆனால் ஒரு புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரின் அரசியல் சமூக அறிவை பெருத்தே அதன் கருத்துகள் கூர்மை பெரும். அது எப்படி என்றால் ஒரு பெண்ணுடைய பாலியல் உறவுப் பிரச்சனைகளை ஒரு ஆண் எழுதும் போது. அந்த ஆண் இந்த சமூகம் வளர்த்த காலங்காலமாகப் பழக்கப்பட்ட கற்பிதங்களுக்குள்ளாலேயே பெண்ணை அவள் பாலியல் பிரச்சனைகளைப் பார்க்கிறான். அவனுக்கு எந்த விதமான வரலாற்றுச் சமூக விஞ்ஞான அரசியல் புரிதல்கள் பெண்கள் பற்றி இருக்காத போது சிக்கலாகிறது.

இந்தடிப்டையில் ஒருவர் எழுதும் போது அவர் பெண் பற்றி அவர் கொண்டிருக்கின்ற எண்ணங்களின் பிரதி பலிப்பாக அதை எழுதுகிறார். அவர் தனகிருக்கின்ற எழுத்து , புனைவு திறமையால் அதை வென்று விடலாம் என்று நினைப்பது புத்தியல்ல. பெண்கள் அவற்றைப் படிக்கும் போது கொச்சையாகத் தெரியவும் முகம் சுழிக்கவும் அதுவே முழு முதல் கரணமாக இருக்கிறது.

ஆனால் எழுத்து வல்லமை இல்லாத பெண் கூட தனது அல்லது மற்ற பெண்களின் பாலியல் உறவுச் சிக்கல் அல்லது துஷ்பிரயோகம் என்பவற்றை எழுதி விட முடியும். அது பெருமளவு பெரும் பான்மை பெண்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். ஏன் என்றால் அப்பிரச்சனைகள் உலகளாவிய ரீதியில் புறக்காரணிகளில் ஒன்றிணையும் தன்மைகளைக் கொண்டிருக்கிறது. அதை எந்த ஒரு பெண்ணாலும் உள்ளுணர முடிகிறது.

தனுஜா இறுதியில் அந்நிகழ்வில் சொன்னதும் இதைத்தான். தான் எதிர் பார்த்ததை விடப் பெண்களிடமிருந்துதான் அவருக்கு நல்ல பாராட்டுகளும் உற்சாகமும் கிடைத்து என்று. ஒரு பெண் தனக்கான பிரச்சனைகளை இன்னுமொரு பெண்ணுடன் பேச விளையும் தருணங்களும் இவைதான்.

ஏன் என்றால் தன்னைப்போல் அந்த பெண்ணும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதை எதிர் நோக்கியிருப்பாள் என்பதால். அந்த இணைவு பொதுத் தன்மை பெற்றது. அது வந்து விடக் கூடாது என்று என்றுதான் ஆண்கள் பெண்களை பிரித்தாலும் புள்ளியும் அதுதான். ஒரு சில பெண்களுக்கு நலன்கள் வளர்ச்சி முக்கியமாக இருக்கிறது. எவள் எக்கேடு கெட்டால் என்ன தங்கள் கட்டுரை எடிட் பண்ணி இணையதளங்களில் வர வேண்டும் என்ற அற்ப ஆசையால் யுனிவர்சல் பிரச்சனைகளை உணர்வதில்லை.
எனவே இமயம் சொன்ன 'செக்ஸ் புத்தகம்' என்பதிலிருந்து ஒரு பெண் படிக்கும் போது முற்றிலும் மாறு படலாம்.

அடுத்து வந்த ஒரு விடையம் தனுஜாவை தாய் எப்படி நிராகரித்தார் புறக்கணித்தார் கொடுமைப்படுத்தினார் என்பதான ஒரு உரையாடல். தாய்மை என்பதற்கு நாம் கொடுக்கின்ற அழுத்தம்தான் தாய்மை மீது எமக்கிருக்கின்ற எதிர்பார்ப்பையும் தீர்மானிக்கிறது. அன்றி அதுவும் ஒரு கற்பிதம்தான். இந்த அழுத்தம் மற்ற எல்லோரையும் விடத் தாயை(பெண்ணை) கொடுமைக் காரியாகப் பார்க்க போதுமாக இருக்கிறது. அல்லது ஆண் சமூகம் தங்களின் மேல் இருக்கின்ற குற்றத்தைச் சமப்படுத்த ஒரு இலகுவான நபரைக் கண்டு பிடித்து 'தாயே அப்படித்தானே நடந்தார்' என்று தப்பித்துக் கொள்ள வசதியாக அமைகிறது.

தாய் என்பவள் தந்தை வழி சமூகத்தால் வளர்க்கப்பட்டவள் என்பதைப் பலர் வேண்டுமென்றே மறக்கின்றனர். தனுஜாவின் ஒவ்வொரு நடவடிக்கையாலும் நேரடியாகத் தொடர்பு படும் இடத்தில் இருக்கிற சமூக உறவு தாய். இதை நம் வசதிக்காகத் தட்டிக்கழித்து விட முடியாது. அந்த இடத்திலிருந்துதான் நாம் அவரை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திய மற்றும் மற்றைய தேசத்து ஆண்களை விடவும் இலங்கை தமிழ் ஆண்களினால்தான் அதிகம் தனுஜா பதிக்கப்பட்டார் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார் என்ற வாதம். வேலு தோழர் அவர்கள் அதற்குச் சொன்ன ஒரு பதில் செமையான இருந்தது . பொதிவில் அண்மைய சிந்தனையை நிறுத்தி அறையும் பதில். எனக்கு இன்னும் ஒன்று தோன்றியது.

அதாவது மாற்றுப்பாலினத்தவர் பற்றிய அறிதல் புரிதல் அதற்கான செயற்திட்டங்கள் போராட்டங்கள் எம் ஈழத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஏற்பட்டு ஊர்ந்து வருகின்ற ஒன்று. ஆனால் தமிழ் நாட்டைப் பெருத்த வரை அப்படியல்ல. சமூக கலாச்சார அரசியல் போராட்ட தளத்தில் அதற்கான உரையால் கொஞ்ம் பெரிது. எனவே அதுவும் தமிழ் நாட்டுத் தமிழ் ஆண்களிடம் மாறுப்பலினத்தார் தொடர்பான சமூக பிரக்ஞை நிலைக்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
இன்னுமொரு விடம் ஒன்று உறுத்தியது. திரு நம்பிகளுக்கு இத்தனை வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறதா என்பது. (உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை) ஆக இங்கு இத்தகைய வன்முறைகள் சரி பாதிக்கு மேல் பெண்ணுக்கு நடத்தப் படுபவைதான். திருநங்கைகளைப் பெண்களாகிய நாமும் பெண்களாக ஏற்றுக் கொள்ளாத போது ஆண்களுக்கு அவை இன்னும் வசதியாகிப் போகிறது.

ஒரு பெண் ஆணாக உணரும் போது தன்னை அதற்கான தயார் செய்யும் போது, உடை நடை பாவனை எல்லாம் ஆளுமை சார்ந்ததாக சமூகத்தால் உள்வாங்கப்படுகிறது. ஒரு பெண் தலை முடியை வெட்டி ஜீன்ஸ் போட்டு சட்டை கையை சுருட்டி மடித்து விட்டு வீதியில் நிமிர்ந்து நடந்தால் இலகில் வேலுதோழர் சொன்ன ஆண்குறி அவரவர் கழுசானுக்குள் சுருண்டு படுத்துக் கொள்கிறது. அது எப்படி? ஏன்?

திரு நம்பிகள் விடயத்தில் பாலியல் வன்முறைகள் சீண்டல்கள் அதிகளவில் நடக்காமல் இருக்க மேற் சொன்னவை காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இதிலிருந்து பார்க்கிறபோது- பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும்(நல்ல பெண்) என்று கட்டமைத்த கருத்தாக்கங்கள்(மதங்கள் உட்பட) அவர்கள் மீதான பாலியல் கிளசிக்கானதாகவே இருக்கிறது. ஆக ஆண் கட்டமைத்த பாத்திரத்தில் இருக்கிற பெண்கள் மீது அதைக் கட்டமைத்த ஆண்களினாலே அதிக வன்முறை நிகழவும் சாத்தியங்கள் உண்டு என்றே தோற்கிறது.
அது உடல் முழுதும் கருப்புத் துணியால் மறைத்த பெண்ணாகவும் இருக்கலாம் படபடக்கும் ஆறு முழச் சேலை( 6 முழம் ?ஒரு குத்து மதிப்பில் கேள்வி ஞானத்தில் அடித்து விடுகிறேன்) கட்டிய பெண்ணாகவும் இருக்கலாம். அதாவது அந்த நல்ல பெண் என்கிற பிம்பம் அவர்களை பாலியல் பண்டமாக உணர்த்த என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்.

இறுதியாக உள்ளார்ந்த நான் உணர்கிற ஒரு விடயம் என்ன வென்றால் ஒரு பெண்ணாக நாம் ஒடுக்கப்படுகின்ற நிலையில் இருக்கிறோம். நாமே இன்னுமொரு பெண்ணுக்கு அதைச் செய்து விடும் இடத்திலிருந்து விடக் கூடாது என்பதுதான்.
உலகம் முழுதும் மாற்றுப்பாலினத்தவர் மீதான வன்முறைகள் மிகக் கொடுமையாக நிகழ்கின்றன. உயிர்ப் பலி அளவில் கூட அவை செல்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 350 மாற்றுப்பாலினத்தவர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. அதை வெறும் கொலைக்கான பொது காரணங்களோடு மட்டும் இணைத்துப் பார்த்து விட முடியாது. அவர்களின் சமூக நிலை மிக முக்கியமான காரணம். தான் மாற்றுப்பாலினத்தவர் என்பதற்காகவே கொல்லப்பட்டவர்களாக பெரும் பாலானோர் இருக்கலாம்.

பெண்களுடைய பொது கழிப்பறைகளை இவர்கள் பாவிப்பதைக் கூட மறுக்கும் நிலை கூட மாறவில்லை. தங்களின் நலன்களை இவர்கள் பறிப்பதாகவும் பங்கு போடுவதாகவும் பெண்ணிய அமைப்புகள் கூட இவர்களை ஒதுக்கி வைக்கிறது. அரசாங்கத்திடம் நலத்திட்டங்களுக்காகச் சண்டை பிடியுங்கள் பெண்ணிய அமைப்புகளைக் குறை சொல்ல முடியாது என்று வாதிடும் இடது சாரிய போக்கும் இருப்பதாக அறிகிறேன். பெண்ணிய அமைப்புகள் அளவில் பெரிதாகவும் மாற்றுப்பாலினத்தவர் சொற்பமானவர்கள் என்ற எண்ணிக்கைப்பிரச்சனையாக ஒடுக்கு முறை அரசியலை பார்கிறாரகளோ என்னவோ?


பெண்களாகிய எம்மை விடப் பல மடங்கு வன்முறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகும் மாற்றுப் பாலின தோழிகளுக்குத் துணையாகவும் எம்மோடு சக மசியாய் பார்ப்பதுமே அவசியம்.

இங்கு யாரும் அவர் அவர்களாக வாழ முடியாத நிலையே உள்ளது. நான் யாராக வாழ நினைக்கிறேன் என்னை நான் எப்படி உணர்கிறேன் என்பது என் அடிப்படை உரிமையல்லவா.

ஒரு திரு நங்கை தான் தன்னை பெண்ணாக உணர்வதாகச் சொல்கிறார் என்றால் அதற்கு அர்த்தம் அவர் என்னைப்போலவே உணர வேண்டும் என்பதல்ல. அவருக்குள் தனித்தன்மையான உணர்வுகள் இருக்கலாம் என்னோடு ஒத்துப் போகின்ற பொதுத் தன்மையான உணர்வுகளும் இருக்கலாம். அதை நான் பெண் என்பதால் தீர்மானிக்க-முன் முடிவுக்கு வர முடியாது.

நான் யாராக வாழ உணர விரும்புகிறேனோ அதே போல் தனுஜாவும் ஒரு தனி மனுசி. இது மிகச் சாதாரண விடயம் இதை ஒவ்வொருவரும் உணர்ந்து வழி விடலே போதுமானது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்