அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்

 

அண்மையில் திரள் என்ற குழுவினர் நடத்திய முதல் நிகழ்வு ஒன்றில் எடுத்துக்கொண்ட தலைப்பு 'தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்' என்ற இணைய வழி கலந்துரையாடல் ஆகும்.

அதே போன்ற மற்றுமொரு நீண்ட கால பேசு பொருளாக இருக்கும் விடயம்தான் படடைப்பிலக்கியத்ததில் அழகியல் தொடர்பானதும்.

நமக்கும் இலக்கியத்துக்கும் சொட்டாகுமா ஆகாதா? நாம் எல்லாம் இலக்கியம் தெரிந்தவர்களா தெரியாதவர்களா? இலக்கிய அழகியலில் சிலிர்த்துக் கிடக்க இரசனைப் பெற்றவர்களா அற்றவர்களா? இலக்கியம் தெரியாது என்றாலும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? அல்லது 'எமக்குத்தான்' தெரியும் என்று படம் காட்டுபவர்களை விட நமக்குக் கொஞ்சம் அதிகமாகத் தெரியுமா என்றெல்லாம் தெரியாமல்தான் தற்செயலாக அந்த இணைய வழி நிகழ்வில் பார்வையாளராகக் கலந்து கொள்ளவேண்டி வந்தது.

அழகியல் தொடர்பான வாதங்கள் நீண்ட கால விவாதப் பொருள்தான். அது 'சுட்ட' பழம் 'சுடாத' பழம் (நாவல்) சர்ச்சை 'அழகியல்' சர்ச்சையாக மாறியுள்ள இன்றைய காலம் முதல் எண்பதுகளில் ஈழத்து இலக்கிய விமர்சனத்தில் அழகியல் பற்றிய சர்ச்சைகள் வரை சமரசமின்றி தொடரவதுதான்.

எந்த ஒன்றும் உரையாடு தளத்திலிருந்து வாதிக்கப் படுவது ஆரோக்கியமானது. ஆனால் ஈழத்து இலக்கியத்தில் அழகியல் என்றாலும் அரசியல் என்றாலும் அண்மைய எழுத்துலகமாகத் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. ஆண் எழுத்தாளர்கள் தம்மை முதன்மைப்படுத்த அல்லது தமது எழுத்தை-பெயரைப் பேசு தளத்தில் கொள்ளப் பல வகை கைகரிங்களை செய்கிறார்கள். இங்குப் பல பெண் எழுத்தாளர்களின் புத்தகங்கள் இத்தகைய எந்த பேசு பொருளிலும் அகப்படாதபடி பார்த்துக் கொள்ளச் செய்யப்படுகிறது. குழு வாத இலக்கியப் போக்கு பெண் எழுத்தாளர்களுக்கு இலகுவாக வாய்த்ததில்லை என்பதினால் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இணையங்கள் இல்லாத காலங்களில் அடக்க ஒடுக்கமாகப் புத்தக அலமாரி-பத்திரிகை கட்டுகளுக்குள்ளும் குறிப்பிட்ட வாசக வட்டத்தினது மட்டும் நின்றிருந்த அழகியல்-அரசியல் வாதங்கள். இன்று நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் இணைய வழியாக வலிந்து வந்து எம் பலரின் மூக்கு முன் நின்று அடிக்கடி சுடக்குப் போடுகிறது. எம்மை கூர்ந்து பார்க்கச் செய்தும் விடுகிறது.

நம்மில் பலர்- நாவல்களைப் படித்தோமா இரசித்தோமா சிலதை உள் வாங்கினோமா கடந்தோமா என்றுதான் இருப்போம். படிக்க முடியாத அளவு எழுத்தோ கருத்தோ வடிவமோ இருந்தால் மூடி தூக்கிப் போட்டு விட்டு நகர்வோம் (நானும் அவ்வகையே)தூக்கிச் சுமப்போர் அல்லர். ஏன் என்றால் ஒவ்வொருவரின் தேடல்களும் தேவை தொடர்பானது. அதனால் இத்தகைய சர்ச்சைகளில் ஆர்வம் செலுத்திக் கவனித்ததில்லை. சரி அவை பற்றி என்னதான் இவர்கள் செல்கிறார்கள் என்று கொஞ்சம் கூர்ந்து அறிந்து கொள்வோமே என்ற சிறு ஆர்வத்தை ஏற்படுத்தியது சுற்றி நடந்த சில சம்பவங்கள்.




முதலில்-அரசியல் நீக்கம் பெற்ற இலக்கியம் அல்லது புடைப்பு-பிரதி என்பது அரசியல் பேசும் பேசாமை என்ற வகைப்படுத்துவது சரியானதா? அரசியல் நீக்கப்பட்ட மனிதர்கள் சமூகங்கள் இருக்கமுடியுமா? அரசியல் நீக்கம் பெற்ற பிரதி யாருக்கானது அது உண்மையில் அரசில் அற்றவைதானா? அப்படியானால் அது எதை யாரை முன்னிலைப்படுத்துகிறது? அரசியல் பேசும் பிரதிகள் அழகில் அற்றவையா அல்லது அழகியல் இருப்பதினாலேயே அரசியல் அதிலிருந்து நீக்கப்பட்டு விட வேண்டுமா?

சமூக வாழ் நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது சிந்தனை வாழ் நிலையைத் தீர்மானிப்பதில்லை என்ற மார்க்ஸின் பொருள் முதல் வாத ஆய்வுப்படி சமூகமே பொருளாகும்.
பொருள் அகத்தின் வெளி நின்று இயங்குவது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிரஞ்ஞை பூர்வமாக எமக்குள்(அகத்தில்) ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தில் தாக்கத்தை உண்டு பண்ணி மாற்றத்துக்கு இட்டுச் செல்லும். இந்த மாற்றங்களின் பங்களிப்பில் கலை இலக்கியப் படைப்புகளுக்கும் குறிப்பிட்டளது பங்குண்டு.

எனவே சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அனைத்திலும் அரசியல் நீக்கமின்றி நிறைந்துதானே இருக்க முடியும் என்பது என்னுடைய முதல் புரிதல். அது போக உற்பத்தி சாதனங்கள் தனியுடைமை- ஏகபோகம் என்ற நிலையில் பெரும்பான்மையான மக்கள் உழைப்பேயன்றி விற்பதற்கு ஏதுமற்று உடைமை நீக்கம் செய்யப்பட்ட சமூகத்தில் மற்றும் விளிம்பு நிலை-பால் சமத்துவமில்லை போன்ற பல்வேறு ஒடுக்குதலைக் கொண்ட மக்கள் மத்தியில் அரசியல் பேசாமை (?) என்ற பிரதி அதிகார சக்தியின் பக்கம் நின்று பேசும் ஒன்று என்ற முடிவுக்கும் வர முடிகிறது.

குறிப்பாக ஒரு பிரதி பேச வேண்டிய அரசியலை பேசாமல் தவிர்ப்பது என்பதும். அல்லது பிரதிக்கு வேண்டிய அரசியலை மறுத்து மாற்றித் திரித்து பொருத்தமற்ற அரசியலைப் பேசுவது போன்றன என்பதும். இன்னும் குறிப்பாக எம்மைப்போன்ற இலக்கியம் அழகியல் தெரியாதவர்கள் ஜெ.மோ. மொழியில் சொல்வதானால் நடுநிலை அரசியல் பேசுவது போன்றவை அரசியல் நீக்கம் பெற்றவையாக இருக்கும் என்று சொல்லலாம். திரள் இலக்கிய குழுவின் பெயரை நான் தவிர்த்து விட்டுக் கூட இப்பதிவை எழுத முடியும். அதற்கும் எனக்குள் ஒரு அரசியல் இருப்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்வர். ஒரு சின்ன முக நூல் பதிவுக்கே அது பொருந்தும் போது இலக்கியத்தில் நிறைந்தே கிடக்கும்.

சமூகத்தில் பிற்போக்குத் தனங்களை பொது புத்தி போக்குகளை ஒரு பிரதி அரசியலற்று அழகியலோடு பேசுகிறது என்பதற்காக அதைக் கொண்டாடி விட முடியுமா? அல்லது அரசியல் அறிவு போதவர்கள்தான் அழகியலை கொண்ட முடியும் என்ற நிலையும் சரிதானா?

இந்த இடத்தில்தான் அழகியல் என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது?

அழகியல் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளும் என்னுடைய நண்பர்களிடம் ( கதைகள் எழுதுபவர்கள்) அது பற்றிக் கேட்டேன். ஏன் என்றால் இவர்கள் அழகியல் என்று எதைத்தான் சொல்கிறார்கள்? அது என்ன? அது இலக்கியத்துக்கு மட்டுமானதா ஒட்டு மொத்த படைப்பு- கலைகளுக்கும் பொதுவானதா? ஏதோ இருக்கத்தானே வேண்டும் _என்று அறியும் உண்மையான ஆவல்தான். ஆனால் எனக்கு சரியான திருப்பதியான பதில் எதுவும் அவர்களிடமிருந்து கிடைக்க வில்லை. வலைத்தளங்களில் தேடியபோதும் அதுதான் கிடைத்தது. ஒருவேளை என் தேடல் மிகக் குறுகியதாகவும் பற்றாக்குறையாகவும் இருக்கலாம் .

ஆனால் இவை பற்றி எனக்குள்ளான ஒரு புரிதல் ஒன்று இருந்தது-அது என்னுடைய இலக்கிய சினமா படைப்புலகத்துடனான சின்ன அனுபவத்துடனானது- அது ஒரு நாவலோ ஓவியமோ புகைப்படமோ ஏன் ஒரு திரைப் படமோ எம்முள் ஏற்படுத்தும் அல்லது விட்டுச் செல்லும் தாக்கம், கரைவு கசிவு, ஏக்கம், கோபம், இயலாமை. மூச்சை இழுத்துப் பிடிக்கச் செய்யும் கால எல்லை, நொடி சூடாகி இலகும் நெற்றி இப்படி ஒன்று அல்லது இவை எல்லாமும் ஒரு படைப்பின் அழகியலாக இருக்கும் என்பது என் அனுபவம். அது படைப்பினுடைய வடிவமாக கருவாக எதுவாகவும் இருக்க முடியும் என்பதே.

நான் தேடிய-உரையாடிய மட்டும் அழகியலை வெறும் இன்ப நுகர்வுடன் சுருக்குதல் அல்லது புற பொருளற்ற வர்ணங்களில் ஜாலங்கள், (வர்ணங்களுக்கும் அரசியல்-பொருள் உள்ளது) கவர்சியாக வார்தைகளில் எல்லாற்றையும் அடக்க விளைவது அல்லது எண்ணுவது போன்றனவே பதிலாகக் கிடைத்தது. அல்லது சுற்றிச் வளைத்து அந்த வகைப்பட்ட பதிலாக அமையப் பார்த்துக்கொண்டதாக இருந்தது.

நுகர்வு எல்லாவகை உணர் புலன்களுக்கும் பொதுவானது. ஆனால் படிப்பவர்களின் உணர் நிலை ஒவ்வொருவருக்கும் வேறு. இங்கு படைப்பு சொல்ல-உணர்த்த வருவது எது என்பதே முக்கியம். பாலியல் வன்கொடுமையை ஒருவர் படிக்கும் போது பாலியல் சுய இன்பத்தை தூண்டும் படி எழுதி விட்டு, அது படிப்பவரின் பொது உணர் நிலை என்று சொல்லி விட முடியாது. அந்த தைரியத்தைப் பெறுவது என்பதே தமிழ் இலக்கிய உலகின் அபத்தம் என்றுதான் நினைக்கிறேன். அதே போல் வன்முறை போர் சாதிய கொடுமைகளையும் சொல்லலாம். இவற்றை எழுத நினைக்கும் படைப்பாளி அதன் கொடூர உணர்வைப் படிப்பவருக்கு கடந்துவதுதான் அழகியலாக இருக்க முடியும்.

அண்மையில் இரண்டு புத்தக சர்ச்சையில் இரண்டு புத்தகளிலும் வரும் இரண்டு பாலியல் வல்லுறவு தொடர்பான சம்பவங்களை ஒரோ பார்வையில் படிக்க கிடைத்தது. சம்பவத்தில் ஆண் ஒருவன் பெண்ணின் பாலுப்புகளை அவளுக்கு தெரியாமல் அல்லது விருப்பமின்றி பார்ப்பதையும் அத்து மீறுவதையும் பேச முனைகிறது. ஒரு பெண் இந்த சம்பவங்ளை படிக்கும் போது அந்த எழுத்தின் மீதுதான் அருவருப்பு அடைய முயும்.

இப்படியானவற்றை படித்துவிட்டு பாலியல் வன்கொடுமையை அவர்கள் புனைவில் கொண்டு வந்து விட்டதாக ஒரு பெண்ணால் எண்ணி விட முடியுமா? இவர்களுடைய பார்வையில் பெண்களின் மீதான பாலியல் வன் கொடுமை வன்முறை செயல்-வார்தைகள் எல்லாவற்றுக்கும் என்ன வரையரை வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. எந்த ஒரு வன்முறையையும் ஒமுக்குமுறையையும் நாம் எவ்வாறு உண்மையாக உள்வாங்குகிறோம் புரிந்துக் கொள்கிறோம் என்பதிலிருந்துதான் எழுதும் போதும் வெளிப்படும். பல ஆண் எழுத்தாளர்களுக்கு பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை எழுதும் போது சுதப்பக் காரணமும் இதுதான். இவற்றை எழுதும் படிக்கும் ஆண்களுக்கு புரிகிறதோ இல்லையோ படிக்கும் பெண்களுக்கு நன்கு உணர்த்தும். ஏன் என்றால் இப்படி ஒரு அனுபத்தைப் பெற்றவர் அல்ல.

உறவுச் சிக்கல்களை சமூக அரசியலோடு புறத்து வைத்து அணுகாமல் வெற்று உடல்களின் உறவு கரகரப்பாக பார்ப்பதும், விதி விலக்கான பால் உறவு குழப்பங்களை சமூக விதியாக முன் முடிவில் எழுதி விட்டு இருப்பதை இருப்பதாக எழுதுகிறோம் என்று கெட்டித்தனமாக சொல்லி தப்பிக்க முடியாது. இங்கு அவர்கள் இருப்பதை இருப்பதாக எழுத வில்லை தமக்குள் இருப்பதை (தப்பெண்ணங்களை) எழுத தெரியும் என்ற ஒன்றை நிலையில் இருந்து எழுதுகிறார்கள்.

அழகியல் தொடர்பாகத் தேடும் போது இமானுவேல் காண்ட என்பவர் இப்படி சொல்கிறார்-என்று ஒரு இடத்தில் படித்தேன். புலனின்பமும் அழகும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை மேலும், அழகு என்பது தற்செயலான மற்றும் தனிப்பட்ட புலன் இன்ப நுகர்ச்சிகளைவிட மேன்மையானது. மனித அங்கீகாரத்தை வேண்டுவதும் அத்துடன் இயற்கை- இயற்கையின் வடிவத்தின் வடிவத்தை அறிவதும் உறவு கொள்வதும். என்பதாக சொல்கிறார்.
அப்படியானால்அவர் அழகியலை புலன்னின்பத்துடன் மட்டும் மட்டுப்படுத்த வில்லை. இன்ப கொண்டாட்டத்துக்கு மட்டுமானதாகவும் நினைக்க வில்லை. மாறாக மனித அங்கிகாரததை வேண்டுவதாக சமூகத்துக்கானதாகவும் வலியுறுத்துகிறார்.




அரசியல் பேசும் படைப்புகளில் அழகியலை கொண்டு வரமுடியாதிருப்பது என்பது படைப்பாளியின் பலகீனமேயன்றி அரசியல் பேசுவதின் பலகீனமல்ல. அரசியல் பேசப்படுவதால் குறிப்பாக இடது சாரிய அரசியலை பேசுவதால் அதில் அழகியல் இல்லை என்று சொல்லும் பண்பும் வளர்ந்து வருவது அதனோடு தொடர்பானது என்றே நினைக்கிறேன்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும். என்பது அரசியல் என்பது மக்களுக்கானது. அந்த அரசியலைப் பேசுவதே அறமாகும். அது பிழைத்துச் செய்யப்படும் படைப்போ இலக்கியமோ அரசியல் நீக்கம் பெற்றதாகும். அதிகாரத்திர்க்கு பக்கமானதாகும் அழகியலும் அற்றதாககும்.

அடுத்து அரசியல் பேசுவதால் பிரதி பிரச்சார தன்மை கொண்டதாக ஆகிப் போகும் என்கிறார்கள். ஒரு படைப்புக்குப் பிரச்சார தன்மை இருப்பதில் என்ன பிழை இருக்க முடியும் என்று எனக்கு புரிய வில்லை. படைப்பாளி சமூகத்தின் பங்காளிதான். ஒரு அங்கம்தான். தனித்து விடப்பட்டவரல்ல. ஒரு ஆணாகவோ ஒடுக்குகின்ற சாதிய-வர்க்கத்தை சேர்ந்தவனகவோ இருக்க முடியும். அது பிரதியில் பிரச்சாரமாக பிரதிபலிக்கவும் செய்யலாம். மறாக இதற்குள் அடங்காதவர்கள் எழுதும் போது மக்கள் அரசில் நிலைப்பாட்டைப் பாத்திரங்கள் கொண்டிருக்கலாம்.

பிரச்சாரம் என்பதைக் கட்சிகள் அமைப்புள் செய்வது போல் நாவலில் செய்து விடுவதை நாம் இங்கு பேச வர வில்லை. செய்தி (நியுஸ்) எழுத சொன்னால் கட்டுரை எழுதுவது, கட்டுரை எழுதச் சொன்னால் கவிதை எழுதுவது, கவிதை எழுதச் சொன்னால் கட்டுரை எழுதுவது, போன்ற எழுத்தைப்பற்றிய சர்ச்சை-வாதங்கள் அல்ல இது. குறைந்த பட்சம் குறிப்பிட்டளவான அதற்குரிய பண்புகளுடன் எழுதப்படும் பிரதிகளில் உள்ள அரசியல்-அழகியல் தொடர்பானது என்பதை சொல்லிக் கொள்ள வேண்டும். திரும்பத் திரும்ப சொல்லும் வெற்றுக் கோச அரசியலையே நாம் நகைக்கும் போது அரசியல் கோசங்களை யாரும் இலக்கியம் என்று வாதிக்க வர முடியாது என்றுதான் நினைக்கிறேன்...

அரசியலாக சமூகத்தின் எல்லா வகை சிக்கல்களையும் ஒடுக்குகளையும் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்களுக்கு இலக்கியத்தின் நீள அகலங்களில் சிக்கிக் கொள்வது கொஞ்சம் சிரமமானதாக இருக்குமோ என்றும் நான் யோசிப்பதுண்டு. ஆனால் ஒரு அரசியல் நாவல் வாசகரை மிகப்பொரிய மக்களின் போராட்ட அரசியல்பக்கம் திருப்பச் செய்யும் வல்லமை பெற்றது என்று நினைக்கிறேன்.


எந்தவெரு அரசியலையும் புனைவாக அழகாக பிரச்சாரிக்க முடியும். அது எழுத்தாளரின் கை வல்லமையிலேயே தங்கியுள்ள உள்ளது. இடது சாரி எழுத்தாளர்கள் அதிகம் இதில் எழுத தொடங்குவது மிக மிக்கியமான ஒரு கலாச்சார பண்பாட்டு மாற்றத்துக்கு இட்டுச் செல்லும். குறிப்பாக இத்தகைய பிரதிகளில் அழகியல் இல்லை என்பது திட்டமிட்ட அரசியல் முரணிலிருந்தும் வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். இது இலக்கித்தின் அழகியலில் இருக்கும் அக்கறையை தாண்டிய அரசியல் தொடர்பானது. ஏன் என்றால் பல குப்பைகளை இலக்கியம் என்று அங்கிகரிப்பதிலிந்து அதை புரிந்து கொள்ள வேண்டியுமுள்ளது. இடது சாரிய இலக்கிய வெளியை அதன் தேவையைப் படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை இரசனை தளத்திலும் கொண்டு வரச் செய்யவும் வேண்டும்தான். அதே போல் இலக்கிய வடிவங்களில் அதன் உயிர்பில் உண்மை அக்கறை கொண்டவர்களின் விமர்சனங்களை இவர்களுடன் சேர்த்து தள்ளி விட நிட்சயம் முடியாது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!