They say it is love. We say it is unwaged workஎனக்கு வலிக்கிறது என்றால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் என்று ஒவ்வொரு வீட்டிலும் ஊதியமற்று மாடாய் உழைத்துத் தேயும் பெண்ணும் இந்த முதலாளித்துவ சமூகத்தையும் அதன் வழி எந்த வித குற்ற உணர்வுகளும் இன்றி சௌகரியம் அனுபவிக்கும் ஆண்களையும் பாரத்துக் கேட்க வேண்டியுள்ளது.இந்த அடிப்படையில் இடது சாரிய பெண்ணிய ஆய்வாளர்கள் பலரின் கட்டுரைகளை எங்கள் வாராந்த வாசிப்புக்கும் உரையாடலுக்கும் எடுத்துக்கொண்டோம்.

அந்த வகையில் செல்வியா பெட்ரிக் எழுத்துக்கள் ஆய்வுகள் மிக முக்கியமாக இருந்தன. அது தொடர்பான வாசிப்பின்போது என்னளவிலும் எம் தோழர்கள் மட்டிலும் புதிய விடயங்களாகவும் தமிழில் நாங்கள் இது வரை வாசிக்காத அல்லது எங்களுக்குக் கிடைக்காத விடயங்களாகவும் இருந்தன.

வீட்டின் வேலை அது கொண்டிருக்கின்ற சமூக நிலை போன்றன பற்றிய பெண்ணியப்பார்வையில் மிகக் காத்திரமாக உறுதியாக ஆய்வு தளத்தில் பேசுகின்றன. இத்தகைய உரையாடல்கள் தமிழில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் வர வில்லை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட தளத்தில் நிகழ்ந்திருக்கிறது என்பது இடது சாரிய பெண்ணிய வாதிகளான எமக்கு மிகவும் கவலை தரும் விடயமாகும்.

இது எம் சமூகத்தில் உள்ள முற்போக்கு இடதுசாரியைப் புரட்சிகர சகதிகள் பெண்கள் மீதும் அவர்களின் இருப்பு மற்றும் பிரச்சனைகள் மீதும் அவர்கள் கொண்டிருக்கின்ற அக்கரை எது என்பதும் நாம் செல்ல வேண்டிய தூரம் எத்தனை நீட்சியானது போன்ற நம்பிக்கையீனத்தையே எனக்கு வருத்தத்துடன் தருவதாக இருக்கிறது.

வெற்று கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தி விட்டு பெண்கள் விடுதலைக்குப் போராடி விட்டதாகச் சொல்பவர்களுக்கு அதைப் பற்றிய அக்கரை தேவையற்றது, மற்றும் அவர்களுக்கான மாற்று நலன்கள் சார்ந்ததும் புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் ஒரு பெண்ணாகப் பிறந்து அதன் காரணமாக ஒடுக்குதல்களையும் அதற்கு எதிரான குறைந்த பட்சமானதான விடுதலையையும் கோரும் எந்த பெண்ணும் அதை வெறும் கோச மட்டத்தில் வைத்து சமரசம் செய்து கொண்டிருக்க முடியாது.
அந்த உண்மையான அக்கறையும் விடுதலை நேசிப்பின் ஆழத்திலிருந்தும் எம் உரையாடலை முடிந்த வரை எமக்குப் புரிந்த வற்றைத் தொகுத்து எழுதுவது சரி பிழைக்கப்பால் உரையாடலுக்கு விடுவது அவசியம்.

மூன்றாம் உலக நாடுகளில் மிகப் பொரிய விடுதலை சக்தியாக ஊதியம் அற்ற பெண்களின் போராட்டங்கள் கருதப்படுகிறது என்றும். இவர்கள் உலக பொருளாதாரத்தைத் தாங்குபவர்களா இருப்பதுடன் அவர்களுக்கான ஊதியம் மட்டும் வருடத்துக்கு 16 ரில்யன்; டாலர்களைத் தாண்டுவதாக இருக்கும் என்கிறார் John McMurtry.

இத்தகைய போக்கின் அடிப்படையில் பார்க்கும் போது ஊதியமற்ற வீட்டு வேலைகள் தற்செயலாக உருவானதா அல்லது திட்டமிட்டே தமுதலாளித்துவதித்தினால் தோற்றுவிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. நிற்க, முதலாளித்துவத்துவம் நின்று நிலைக்க முதல் சுரண்டலும் முதல் பலியும் பெண் என்றே கூற வேண்டியுள்ளது.

இதையே பிரடெரிக் எங்கெல்ஸ் 'பெண்களுக்கு ஏற்படும் உழைப்புப் பிரிவினைதான் முதல் உழைப்புப் பிரிவினையாகும் என்று கூறுவதுடன், குடும்ப அமைப்பில் பெண்கள் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறைதான் முதல் வர்க்க பிரிவினையாகும் என்கிறார்.
முதலாளித்துவத்துக்கு ஒன்று நன்கு புரிந்திருக்கிறது-அதாவது தன்னை நிலை நிறுத்த அல்லது தன்னைத்தானே மறு உருவாக்கம் செய்து கொள்வது எப்படி என்று. அதனடிப்படையில் பார்த்தால் அது ஒரு சுரண்டலை முழுமையாக நிகழ்த்தும் போது அதற்கான எதிர் விளைவுகளும் அல்லது அதன் மறுதலிப்புகளும் தீவிரமாக இருக்கும் என்பதே அது. மேலும் எதிரான குரல் போராட்டத் தளத்தில் வெடிக்கும் போது சுயச் சார்பு பெற்று இயங்கும் வல்லமை பெற்றும் என்பதும்தான்.

அதனாலேயே முதலாளித்துவம் அந்த சுரண்டலை அதாவது தமக்குச் சேவகம் செய்யும் சம்பளமற்ற வேலையாட்களை சமூக பண்பாட்டுக் கருத்தியல் தளத்தில் மிக நுட்பமாக உறுதியாக உருவாக்கியிருக்கிறது.

இந்த இடத்தில்தான் மார்க்சிய தீவிர பெண்ணிய வாதிகள் முன் வைக்கும் முக்கியமான புள்ளி பேசு பொருளாகிறது. காரல் மார்க்ஸ் மீதான விமர்சனமாகவும் கூறப்படுகிறது.

அதாவது பண்ட உற்பத்திக்கு வெளியில் நடக்கின்ற மதிப்பை உற்பத்தி செய்வது பற்றிய விமர்சனப் பார்வை அது. குறிப்பாக வீட்டு வேலைகள் மூலம் நடைபெறுகின்ற 'மறு உற்பத்தி' மூலதனக் குவிப்புக்கு பெரும் பங்காற்றுகிறது என அவர்கள் வாதம் தொடங்கப்படுகிறது.

அதாவது_காரல் மார்க்ஸ் தனது ஆய்வில் ' வீடுகளில் ஊதியமற்று செய்யும் வேலைகளின் மறு உற்பத்தியின் பங்கைச் சரியாகப் பிரித்தறிந்திருக்கத் தவறிவிட்டார், அதாவது தொழிலாளியுடைய மறு உற்பத்திக்கான பெரும் பகுதியை வீட்டில் இருக்கும் பெண்கள் ஊதியமற்று செய்கிறார்கள். அதனால்தான் தொழிலாளி அடுத்த நாள் ஆலைக்குச் சென்று தனது உற்பத்தி சக்தியை விற்க முடிகிறது.

இதன் அடிப்படையில் உருவாக்கப்படுகிற வாதம்- இதனடிப்படையில் தான் முதலாளித்துவம் நின்று நிலைக்க முக்கிய காரணங்கள் ஆகிறது என்பதுதான்.

மார்க்ஸ் லேபர் பவரை(labor power) உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார். உற்பத்திக்குத் தேவையான காரணிகள் என்று வரும் போது means of production ரோ மெட்ரியல் போலவே லேபர் பவரும் உற்பத்தி செய்யப்பட வேண்டியவைதான் என்கிறார். அதாவது எல்லா பொருட்களைப் போலவே லேபர் பவரும் உற்பத்தி செய்யப்பட வேண்டிய ஒன்றுதான். என்றாலும் லேபர் பவரை உற்பத்தி செய்வதற்கான பெறுமதியை எப்படிக் கணிக்கிறார் அல்லது எடுத்துக் கொள்கிறார் என்பதில்தான் பிரச்சனையுள்ளது என்று பெண்ணிய வாதிகள் வாதிடுகின்றனர்.
ஒவ்வொரு பொருளும் அதன் ஆக்க கூறுகளால் ஆனது. அந்த ஆக்க கூறுகள் கொண்ட மதிப்பினாலேயே பொருளின் மதிப்பும் பெறுகிறது. அதே போன்றே லேபர் பவரும். உடுக்கும் உடை, சாப்பிடும் சாப்பாடு, உறங்கும் வீடு எல்லாவற்றாலும் ஆனதுதான் என்பதே.

மாக்ஸ் லேபவர்க்குத் தேவையாக எல்லா பொருட்களினதும் பெறுமதியையும் கவனமாகக் கணக்கிடுகிறார். ஆனால் அந்த பொருட்கள் அதாவது மா-ரொட்டியாக, வீடு வாழ்வதற்கான இடமாக, உடைகள் நாளை உடுத்துவதற்காகச் சுத்தமாக, மாறுவதற்குள் இருக்கும் உழைப்பு அல்லது வேலையை அவர் கருத்தில் கொண்டு கவனிக்கத் தவறிவிட்டார் என்பதே பெண்ணிய வாதிகளின் நிலைப்பாடாக உள்ளது.

சந்ததி மறு உற்பத்தி தொடர்பாக மார்க்ஸ் பேசும் போது, தொழிலாளியின் சம்பளம் தொழிலாளர்களைத் தொடர்ச்சியாக வைத்திருப்பதுக்கு அது அவனது சந்ததியான அவனது பிள்ளை அவனது தம்பி என்று தொடர்வதற்கான ஒன்றாக அமைகிறது என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இங்குச் சந்ததி மறு உற்பத்தி பற்றி கவனம் செலுத்தாமல் மறு உற்பத்தி செயற்பாட்டை வெறும் இயற்கை நிகழ்வாக விட்டுச் செல்கின்றார் என்பது குற்றச்சாட்டாக வைக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளின் தொடர்ச்சியாகவே வீட்டு வேலைக்கான ஊதிய கோரிக்கை எழுவதையும், அது போராட்ட வடிவமெடுப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆண்கள் பெண்களைக் காதல் என்றும் கடமை என்றும் நம்ப வைத்து மாடாய் ஓடாய் தேய உழைக்க வைத்து அந்த உழைப்புக்கு எவ்வித பெறுமதியும் இல்லாமல் சமூக அந்தஸ்தும் கொடுக்காமல் திண்டு பெருப்பது முதலாளித்துவம் மட்டுமல்ல அந்த பண்பாடுகளினால் வளர்த்தெடுக்கப்பட்ட ஆண்களும்தான்- என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டு வேலைக்கான ஊதியம் என்ற கோரிக்கை வெறும் சம்பளம் சார்ந்து பணமாக மட்டும் பார்க்கப்படுவது அந்த கோரிக்கையின் பலகீனத்துக்கு இட்டுச்செல்லும். இருந்த போதும் வீட்டுக்கு வெளியில் சென்று தனது வேலை பார்க்காத பெண்களுக்குப் பல வழிகளில் பயனுடையதாக இருக்கும். ஆனால் அது அரசியல் வகைப்பட்ட ஒன்றாகப் பார்க்கப் படும் போது அது வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்ற பெண்களுக்காகச் செய்யப்படுகின்ற பெரிய கலகத்துக்கான முழுமையாகப் பார்வையைக் கொடுக்கும்.

இங்கு மிகப் பெரிய ஓர வஞ்சனையான துன்பம் என்ன வென்றால், வெளியில் வேலை செய்யும் பெண்களுக்குமே வீட்டு வேலை என்பது சமூக விதியாக்கப்பட்டிருப்பதுதான்.

இதை உடைப்பதற்கும் கேள்வி கேட்பதற்கும் ஒரு அரசியல் தளம் தேவைப்படுகிறது. அந்த தளத்தை ஏற்படுத்துவதற்காகவே வீட்டு வேலைக்கான ஊதிய கோரிக்கை ஒரு கருவியாகப் பயன் படுத்தப் பட வேண்டும். அது சமூக குடும்ப உறவை அரசியலாகவும் புரட்சிகரமாகவும் மாற்றிச் சிந்தித்து மாற்றி அமைப்பதிலிருந்தே தொடங்க வேண்டி வருகிறது.

ஆனால் வீட்டு வேலைக்குப் பொருள் முறை சாந்து ஊதியத்தைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் பெண்களின் மற்றப் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விட்டதாகக் காட்டி விட முடியாது. அப்போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தினதும் பெண்ணிய செயற்பாடுகளினதும் முதன்மையானதாக இருக்க வேண்டும்.

செல்வியா பெர்ரிக் தனது வாதத்தை மிக வழுவாக முன் வைக்க இப்படி தனது கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்கிறார்:
'நீங்கள் காதல் என்று சொல்கின்றீர்கள் நாங்கள் ஊதியமற்ற வேலை என்கின்றோம்.(They say it is love. We say it is unwaged work) என்கிறார்.
இந்த காதல் என்ற வார்த்தைக்குள் பெண்கள் தங்கள் வாழ் நாள் தோறும் சுரண்டப்படுகிறார்கள். உடல் ரீதியிலும் உளவியல் அளவிலும் அந்த சுரண்டல் காலங் காலமாக மிகக் கவனமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தடிப்படையில் வீட்டு வேலைகள் பற்றிச் சொல்லும் போது அந்த வேலையும் ஏனைய சாதாரண வேலைகளும் கருத்தியல் பண்பாட்டு உணர்வு உளவியல் அடிப்படையில் ஒன்றில்லை என்பதைக் குறிப்பாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

வீட்டு வேலைகள் குறிப்பான அம்சங்களை உள்வாங்கிய ஒன்றாகவுள்ளது. முதலாளித்துவம் வேறு எந்த தொழிலுக்கும் அதன் தொழிலாளருக்கும் இல்லாத சில குறிப்பான வன்முறை வடிவங்களை வீட்டு வேலைகளோடு பண்பாட்டுத்தளத்தில் கட்டமைத்திருக்கிறது. அந்த வன்முறைக்குப் பெண்களின் சம்மதத்தையும் அவர்கள் வாழ் சமூகத்தின் அங்கிகாரத்தையும் பெற்றிருக்கிறது.

எப்படி என்று கேட்கின்றீர்களா? வேலைத் தளங்களிலிருந்து வரும் ஆண்கள் வீட்டில் உள்ள பெண்களுடன் வன்முறையில் நேரடியாக ஏற்படுத்துவதைப் பார்க்கலாம். வீடு நேர்த்தியாக, துப்பரவாக இல்லத போது, குழந்தைகள் சந்தம் போட்டு விளையாடும் போது, சமையல் சரியாக அல்லது உணவு பரிமாறத் தயாராக இல்லாத போது, பெண் சிரித்த முகத்துடன் காணப்படாத போது, ஆணின் பாலியல் தேவைக்கு பெண் ஒத்துழைக்காத போது அந்தப் பெண்களுடன் ஆண் வன்முறையில் ஈடு படுகின்றனர்.
இவை அணைத்துமே அடுத்த நாள் குறித்த ஆண் வேலைக்கு வழமை போல் செல்வதற்கான உழைப்புச் சக்தியை மறு உருவாக்கம் செய்ய 'உள-உடல்-சூழல்' அடிப்படையில் அவனுக்குத் தேவையானவை. இவை மறுக்கப்படும் போது அவன் வன்மறையில் ஈடுபடுகிறான்.
இத்தகைய வன்முறைகளை குடும்பம், மதம், கலாச்சாரம், சமூகம் அங்கீகரிக்கிறது. அல்லது அது பெரிய குற்றமாகக் கருதப்படாமல் பார்த்துக் கொள்கிறது. தாய் தன் கடமையிலிருந்து தவறுவதாகக் குறிப்பாக ஆண் குழந்தைகள் இதை மிக உள்ளுணர்வில் ஏற்றிக் கொள்கின்றனர். அது தங்களது அங்கிகாரமாக, ஆண்மையாக ஏற்பது அவர்களுக்கு மிக இலகுவாக அவர்களுடைய நலன்கள் சார்ந்து இருக்கின்றன.

அத்தகைய வேலைகளைச் செய்யாத போது பெண்ணுக்குமே குற்ற உணர்வை வர வைக்கும் படியாக மேற் சொன்ன ஸ்தாபனங்கள் அதுசார் நிறுவனங்களும் சமூகத்தைக் கட்டமைக்கின்றன. எல்லா மதங்களுமே பெண் இத்தகைய விடயங்களில் ஆணின் மனம் கோணாதா படி நடக்கச் சொல்கிறது. தவறும் பட்சத்தில் பெண்களின் மேல் ஆண் வன்முறை செலுத்துவதை கடவுள்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்கிறது.

மதங்கள் உருவானது தனியுடமையாளர்களை பாதுகாக்க என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஆதாம் - அவனுக்கு ஊதியமற்று பணிவாக வேலை செய்ய 'அவனிலிருந்து' படைக்கப்பட ஏவாள். கதை திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் பக்காவாக திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது முதலாளித்துவ அதிகார வர்க்கம்.

பல நேரங்களில் வேலைத்தளங்களில் நடக்கின்ற வன்முறைகளை, அடக்குமுறைகளை, அழுத்தங்களைப் பல நேரங்களில் அப்படியே வீட்டுக்குக் கொண்டு வரும் ஆண் அதை வீட்டில் இருக்கும் பெண்களிடம் காட்டுகிறான். இவற்றை மேற் சொன்ன அடிப்படையில் இதில் ஆணின் பங்கு எதுவுமில்லை முதலாளித்துவம்தான் என்று தட்டையாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இத்த தப்பித்தல்களுக்குள் பால் வாத, வன்முறை, பால் சுரண்டல் ஆணாதிக்க நலன்கள் இருக்கின்றன. இத்தகைய வெறும் பொருளாதார வாதம் ஒடுக்குமுறைக்குச் சார்பாக இருப்பதுடன் தமது பொறுப்பபைத் தட்டிக்கழிக்க இலகுவாகவும் இருக்கிறது.

முதலாளித்துவம் சுரண்டலின் அடிப்படை என்றாலும் அதன் மூலம் நலன்களை அனுபவிப்பது அந்தஸ்து பெறுவது ஆணாகத்தான் இருக்கிறார்கள். இவற்றை ஆண்கள் சுய விமர்சனம் செய்து பெண்களுடன் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும். தவிரச் சொல்லப்படுகின்ற நோண்டி சாக்கெல்லாம் இந்த சுரண்டலுக்குள்ளாள் கிடைக்கின்ற அவர்களின் நலங்களை விட்டு விலக மனமில்லா தந்திரங்கள்தான். இவற்றுக்குள் கமுனிஸ்ட் சோஸலிஸ்ட் ஆண்களும் பெரும்பாலும் அடங்கும்.

இவர்கள் பொதுச் சமூகம்(சாதாரண) பெண் ஒடுக்கு முறை சார்ந்து கடந்து விட்ட மொழி கலாச்சார பண்பாட்டு விடயங்களைக் கூட கடக்க துப்பில்லாதவர்களாக இருக்கின்றனர். வெறும் ஒப்புவிப்புகளையும் மனப்பாடங்களையும் செய்யும் இவர்களால் எப்படி சமூக மாற்றத்துக்காக உழைக்க முடியும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாது.

ஆக ஒழுக்கம், பாசம், தாய்மை, பெண்மை என்று சொல்லி வேலை என்ற உணர்வு இல்லாமல் செய்ய காதல் பாசம் புனிதம் உணர்வை மேன்லாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த தந்திரம் காதலுக்கும் வேலைக்குமான வித்தியாசங்களை மறைக்கின்றன. மேலும் இயல்பான உணர்வுகளை வேலை என்ற செயற்பாட்டிலிருந்து பிரித்தறியா வண்ணம் செய்து விடுகிறது.

மேற்படியான ஆய்வுகளுக் கூடாக உழைப்புச் சக்தியினது மறு உற்பத்திக்கான பங்களிப்பைப் பற்றிய பெண்ணிய வாதிகளின் வாதம் வலுக்கிறது. உலக பொருளாதாரத்தில் உழைப்பச் சக்தியின் மறு உற்பத்தி செய்வது தொடர்பான ஆய்வை மீள் கட்டமைக்க முனைவதற்காக வாதங்கள் உருப்பெற்று வருகிறது.

தொழிற் சாலைகளில் நடை பெறுகிற வேலை உழைப்பாகவும் அந்த உழைப்பைப் படைக்கின்ற உழைப்புச் சக்தியை மறு உற்பத்தி செய்கின்ற செயற்பாடு கணக்கில் எடுக்கப்படாமலும் விடப்படுகிறது.
ஒரு தொழிலாளிக்குத் தனது வேலையும் அந்த வேலைக்கான ஊதியமும் வெளிப்படையாகத் தெரிகின்ற ஒன்று. அதனடிப்படையில் வேலையில் ஏற்படுகின்ற வேலை நேரம், வேலைக்கான ஊதியங்களைப் பேரம் பேசக் கூடியதாக இருக்கிறது. முதலாளித்துவ பொருளாதாரம் நின்று நிலைக்க மூலதனப் பெருக்கம் அவசியம். அந்தப் பெருக்கம் மனித உற்பத்தி சக்தியிலேயே தங்கியுள்ளது. ஆனால் மறு உற்பத்தி செய்யப்படுகின்ற உழைப்புச் சக்தியின் செயற்பாடு கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகிறது. காரணம் அவை தொழிற்சாலைக்கு வெளியில் குடும்பம் என்ற தொழிற்சாலையில் நடை பெறுகிறது.

வீட்டு வேலைகள் இத்தகைய எல்லா நிலைகளிலும் இருந்து முற்று முழுதாக வேறு பட்டதாகவுள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்கள் அந்த வேலையுடன் இயல்பாகப் பிணைக்கப்பட்டு ஆழமான பெண்ணின் நற் குணப் பண்பாகப் பார்க்கப்படுகிறது. அதை நம்ப வைப்பதற்கான அனைத்து கருமங்களையும் முதலாளித்துவமும் அதன் பங்காளிகளாக மேற் சொன்ன மதங்கள் கலாச்சாரங்கள் பள்ளிகள் பக்காகச் செய்துள்ளன செய்கின்றன என்பதுதான் உண்மை.

இங்கு முக்கியமாக நாம் ஒன்றை புரிந்துக்கொளவது அவசியமாகவுள்ளது அது முதலாளித்துவத்தின் அடித்தளமாக உள்ள மூலதனம் பெண்களின் வீட்டு வேலைகளின் ஊதியத்தையும் அதன் பெறுமதிகளையும் இருட்டடிப்பு செய்வதில் காரியமாகச் செயற்பட்டுள்ளது. மூலதனம் தன்னை நிலைத்து நிலை பெறச் செய்வதற்கான மிகச் சாதுரியமாகப் பெண்களின் ஊதியமற்ற உழைப்பை விலையாகக் கொடுத்துள்ளது.

பாரதி சிவராஜா-


பின் குறிப்பு: பல மாதங்களுக்கு முன் எழுதித் திருத்தப்படாமல் கிடக்கின்ற கட்டுரைகள் சிலதை ஓரளவு திரும்ப எடுத்து தூசு தட்டி பதிவிட முயல்கிறேன். அதில் இதுவும் ஒன்று. திரும்பத்திரும்பப் பேசப்பட வேண்டிய ஒன்று பெண்களின் ஊதியமற்ற வேலை தொடர்பானது. 'The great Indian kitchen' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் பேசு பொருளானது. அது பேச மறந்த முதலாளித்துவத்தின் பங்கை அதன் பண்பாட்டுத் தளத்தை செல்வியா பெட்ரிக் ஆய்வு 1974 ஆண்டுகளிலே மார்சியப்பார்வையில் ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரப்படைத்தை ஒரு வரியில் மொழி பெயர்த்தால் செல்வியா பெட்ரிக் வரிகளில் இப்படி வரும் ''They say it is love. We say it is unwaged work''

இது தொடர்பாக எங்கள் உரையாடல் பங்கு பற்றிய தோழர் சந்திரா அவர்கள் எழுதிய கட்டுரையும் மேலதிகமாக அவருடைய முக நூல் பக்கத்தில் படிக்க முடியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.