மக்களுடன் நின்றே மக்களை அனைத்து மக்களுக்காகவும் வெல்ல முடியும்✊🤜🤛

 


இலங்கை மக்களின் தற்போதைய அரசாங்க எதிர்ப்பு போராட்ட அலை பலமானது அதை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அது தன்நெழிர்சியான போராட்ட வடிவமாக உள்ளது. அதற்கு கோட்பாட்டுச் செயற்பாட்டுப் பலமிக்க போராட்ட சக்தி கொண்ட கட்சியோ அமைப்போ இவற்றின் பின் நிமிர்ந்து நிற்குமானால் இலங்கையின் இன்றைய நிலை முற்று முழுதாக வேறான ஒன்றாக இருந்திருக்கும்.


மெல்போனின் நடந்த போராட்ட நிகழ்வில் முள்ளிவாய்கால் நினைவு பிரசுரம் கொடுக்கப்பட்ட போது கிழித்தெறியப் பட்டு அங்கு நடந்தது இனப்படுகொலையில்லை என்று அங்கிருந்தவர்களை தன் பின்னால் திரட்ட முனைந்த சிலரது செயற்பாடு வெறும் தற்செயலானது என்று மட்டும் சொல்லி விட முடியாது. அதன் பின்னால் சிங்கள பௌத்த பெருந் தேசிய கருத்தியல் மிக ஆழமாக உள்ளது. அதைக் குறைத்தும் மதிப்பிடுவது மிக ஆபத்தானது.

கோட்டாவும் அவரது குடும்ப ஆட்சியும் பொருளாதார பிரச்சனையோடு தொடர்பானதாகச் சிங்கள மக்களுக்கு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் கோட்டா தமிழ் பேசும் மக்களுக்கும் இடதுசாரிகளுக்கும் வெறும் பொருளாதார நெருக்கடியோடு குமட்டுமானவரல்ல. பச்சையான இனப் படுகொலையுடனும் இனவாதத்துடனும் என்பதை மறப்பது அரசியல் அறமாகாது. இவற்றைப் பேச மறுப்பது அல்லது தவிர்ப்பது நாம் மீண்டும் பெரும் தேசியத்தை ஆளும் வர்க்கம் வளர்த்தெடுப்பதற்கும் இன ரீதியாகப் பிரித்தாள்வதற்கும் வாய்ப்பை வழங்குவதாகும்.




கோட்டாவின் வெளியேற்றம் என்பது தமிழ் மக்கள் மீது நடந்த இனப்படுகொலையுடனான நீதி கோரலையும் பலமாகக் கொண்டிருக்கிறது. அத்துடன் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தொடர்ச்சியான இனவாத போக்கையும் அதன் கருத்தியல் பலத்தின் வேர்களையும் கலைவதிலும் உள்ளது.

அதிலும் குறிப்பாக மே மாதம் தமிழ் மக்கள் முள்ளி வாய்க்காலில் இனவளிப்பின் இறுதி நாட்களை அனுபவித்த மாதம். இம்மாதத்தில் கோட்டாவையும் அவர்கள் செய்த அநீதியையும் மறுத்து அதற்கான பிரச்சாரங்களைத் தவிர்த்து தமிழ் பேசும் மக்கள் பங்கெடுக்கவேண்டும் என்று எதிர் பார்க்க முடியாது. ஒற்றுமை என்பது எமக்கான ஒடுக்குமுறையை நீங்கள் ஏற்றுக்கொள்வதிலிருந்தே ஏற்படும் என்பதுதான் சனநாயக அடிப்படை அரசியல்.

அதற்காக அந்த சம்பவத்தை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு மக்கள் போராட்டத்தைக் குழப்ப அல்லது அவற்றிலிருந்து விலகி இருக்கப் பிரச்சாரம் செய்வதும் சொட்டும் அரசியல் அறிவான செயற்பாடு அல்ல.

மிகச் சாதாரண மக்களிடம் பல வன்முறைகளுக்கும் சுரண்டல்களுக்கும் சர்வாதிகாரத்திற்கும் தொடர்பான தேசியக் கொடிகள் பற்றியோ அல்லது ஒடுக்கும் தேசியம்- ஒடுக்கப்படும் தேசியம் என்பவை பற்றிய பரந்த அறிவை நாம் இந்த களத்தில் எதிர் பார்க்க முடியாது. பல தமிழ் சிங்கள கமுனிஸ்ட்டுகளுக்கே இவற்றைப் புரிந்து கொள்வதில், ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கிறது. சாதாரண மக்களை நாம்தான் அரசியல் படுத்த வேண்டும்?

நேற்றைய முன் தினம்(14.05.2021) லண்டன் பாராளுமன்றத்திற்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் தேசியக் கொடி ஏந்தி வந்த இருவரை ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்தவர்கள் கடுமையாகத் தடுத்து வெளியேற்றினர். அது மிக வரவேற்கத்தக்கது. அதன்போது தேசியக் கொடியை ஏந்தி வந்தவர்களுடைய முக பாவனையும் அவர்கள் ஏற்படுத்திய கேள்விகளும் மிக அப்பாவித்தனமான அரசியலிலிருந்து வருவதாக இருந்தது. இந்த அரசியல் அப்பாவித்தனத்திற்குள் மறைந்திருப்பது பொருந்திய வரலாறு போக்கு. இந்த அறியாமையின் அரசியலைத்தான் ஆட்சியர்கள் தமக்கேற்றால்போல் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இதை ஏற்பாட்டாளர்கள் தெளிவாக எடுத்துரைத்திருக்க வேண்டும்.


'கோட்டா வீட்டிற்கு போ-GoGotaHome' என்ற இந்த ஆர்பாட்ங்களின் கோசங்கள் ஒன்றாக இருந்தாலும் இதை ஏற்பாடு செய்பவர்கள் பல தரப்பட்ட அரசியல் சித்தாந்த வழி வந்தவர்களாக இருக்கின்றனர். இதில் குறிப்பாக இடது சாரிய வழிவந்தவர்களின் போராட்டங்களில் தமிழ் மக்களின் தேசிய அரசியல் உரிமைகள் தொடர்பான ஓரளவான சனநாயக பண்பிருப்பதாக அவதானிக்க முடிகிறது. ஆனால் வலதுசாரியச் சிங்கள பௌத்த தேசியவாதிகளாலும் போராட்டங்கள் வழிநடத்தப்படுகிறது. அதில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகள், அபிலாசைகள் சிங்கள பௌத்த பெருந்தேசியத்தை உடைப்பதாக அவர்கள் உணர்வார்கள்,உணர்கிறார்கள்.

நாங்கள் எல்லோரும் ஒருநாட்டு மக்கள் என்பது மகிந்தவுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் இலகுவானது சொல்ல. ஆனால் அந்த ஒற்றுமை எதனடிப்படையில் சாத்தியம் என்பதே இங்கு அரசியல்.

14.05.2021 அன்று இலண்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தேசியக் கொடி மறுக்கப்பட்டது மிகப் பெரிய விடயம் ஆனால் அது ஏன் கடும் பெரும் தேசியவாதிகளை எதிர்க்கும் மக்கள் போராட்டத்தில் ஏந்தப்படுவது சிக்கலானது என்பதைச் சிங்கள மொழியில் அரசியல் தளத்தில் ஒரு பிரச்சாரம் செய்திருக்கப்பட வேண்டும். மக்கள் அரசில் தேவைக்காகத் திரள்வது மிக அரிதாக நடப்பது. அதை அதிகூடிய அளவு பயன் படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றும் கோசங்களுக்குள் மக்கள் அரசியலை எப்படிப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் நாங்கள் சொல்வதைத் திருப்பி சொல்லி விட்டு கைகளைத் தட்டி விட்டு ஆளும் வர்க்கம் இதுவரை காலமும் பதித்த கருத்தியலைச் சட்டைப் பைகளில் சுமந்து கொண்டு மீண்டும் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். இந்த இடங்களில்தான் செயற்பாடுடன் கூடடிய கோட்பாட்டு தெளிவிவுகளை போராட்ட அமைப்பினர் பெற்றிருப்பதின் அவசியம் உணரப்படுகிறது.


மக்களுடன் நின்றே மக்களை அனைத்து மக்களுக்காகவும் வெல்ல முடியும்✊🤜🤛





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

பிற்போக்குத்தனங்களும் - தப்பெண்ணங்களும் : ஒரு அலசல்!!

கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்