கவிதை வனைந்த உலகு

 

கடந்த 14 மே மாதம் சனிக்கிழமை அன்று மலை நடை பெற்ற ''கவிதை வனைந்த உலகு நிகழ்வில்'' 5 கவிதை புத்தங்கள் இடம் பெற்றன:


இறுதி அமர்வாக நடை பெற்ற விஜிதரனுடைய
''குருதி வழியும் பாடல்'' கவிதை நூலைத் தோழர் வேலு அவர்களும் நானும் அதற்கான ''விமர்சன- உரையைச்'' செய்தோம்.

அந்நிகழ்வில் நான் பேச எண்ணி எழுதியவற்றை முழுமையாகச் சொல்ல முடியவில்லை. குறித்த நேர எல்லைகள் அதற்குக் காரணங்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலான விடையங்களை தெட்டிருந்தேன் என்றே நம்புகிறேன். விமர்சனம் என்பது ஒரு படைப்பபை கூர்மைப்படுத்த உதவும். எழுதியவரின் அகத்தில் நின்று மட்டும் ஒரு வாசகரால் ஒரு படைப்பை படிக்க முடியாது. அதுவும் விமர்சன மனநிலை என்ற நிலை எமக்குள்ளால் கேள்விகளை எழுப்பி இன்னுமொரு பிரதியை கட்டமைக்கும். அதற்குள் நாம் வேண்டி நிற்பவை, எம்மால் செய்ய முடியாதவை, செய்ய கூடியவை எல்லாம் விமர்சனமாக வெளிவரும். அது குறித்த படைப்பில் இருக்கும் ஆழ்ந்த ஈடு பாடே அன்றி வெறுப்பல்ல. அதிலும் சமூக அறியல் தேடலுடையவர்களுக்கு விமர்சனமும் அதை நோக்காக கொண்டே இருக்கும். இரசனைக்கும் அறிவுக்கும் இலக்கியத்தில் போட்டி நிகழும்! விரோதமல்ல அது. நிகழ்வுக்காக நான் எழுதித் தயாரித்தவற்றை இங்குத் தொகுத்திருக்கிறேன்.

கருதி வழியும் பாடல்:
விஜிதரனுடைய ஏதிலி படித்துக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் இருக்கலாம். நான் படிக்கும் அவருடைய 2 ஆவது நூல் 'குருதி வழியும் பாடல்' என்னும் கவிதை நூல்.

குருதி வழியும் பாடல் புத்தகத்தின் வடிவமைப்பும் ஏதிலியை ஒத்ததாக கைக்கு அடக்கமான தற்போது வருகிற ஒரு கைப்பேசிகளின் அளவ விட சிறிது பெரிதானது. பக்கங்களின் கனதியைப் படிக்கும் முன் வாசகர்களுக்குக் குறைக்கும் உளவியலுக்காகக் கூட இவ்வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

கவிதை என்ற இலக்கியம் ஒருவகையில் உணர்ச்சிகளோடு பேச விளையும் கலை வடிவம் என்றே நான் நினைக்கிறேன். ஒத்திசைவான சொற்களைத் தெரிவு செய்து குறிப்பாக 'அதீதமான' உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அதன் நடையில்- ஒலியில் தாம் பேச வந்த உணர்வை வாசகர்களுக்குக் கடத்திவிட நினைக்கும் ஒரு வடிவம். பல நேரங்களில் அவை வாசகர்களால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதில்லை. அல்லது வேறு ஒன்றாக புரிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ள அமைப்பு அது.
ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேசுகிற படைப்பு இன்னொரு வகையில் இன்னொரு ஒடுக்குமுறையை உளவியல் கட்டமைப்பில் பிரச்சாரம் செய்கிற போக்கை எப்படி மாற்றி அமைப்பது

ஏதிலி படித்து விட்டு நான் எழுதிய சிறு குறிப்பில் வருகிற ஒரு பந்தியை அப்படியே இங்குத் தருகிறேன்.

''சில நூல்களைப் படித்து விட்டு அது பற்றி ஏதாவது எழுதுவோம் என்று நினைத்தால் எழுத ஒன்றும் தோன்றாது. காரணம் தெளிவாக கனத்துடன் அந்த புத்தகமே எம்முடன் உணர்வு கலந்த உறவை விட்டுச் சென்றிருக்கும்.

எம்மை மௌனிக்கச் செய்து விட்டு அதன் வலியைத் துயரை ஆற்றாமையை, சின்ன சந்தோசங்களை எம்முடன் நிகழ்த்தியிருக்கும். அது பேசும் மொழி-விளிம்பு நிலை மக்களின் ஆழ்ந்த நீண்ட வலி சொல்லும் மொழி. அதற்கு மேட்டிமை தெரியாது. திறமையால்(skill) திண்டாடச் செய்யும் தேவை இல்லை. மட்டமான பிரச்சார உத்தி கிடையாது. விசுவாசிகளோ- வியாபார விளம்பரமோ தேவையற்றது. அது சுமந்த-பிரசவித்த சமூக நோவைப் படிப்பவருக்குள் கடத்தி விட்டுச் சென்று இருக்கும்.

அப்பொழுதுகளில் நாம் அழுதிருப்போம்! இதயம் காற்றால் நிரம்பிச் சுவாசிக்கத் திண்டாடியிருப்போம்!. கோபம் இயலாமை போன்ற உணர்வுகளுக்குள் சிக்குப்பட்டு அழுந்தியிருப்போம்!. முடிவில் வார்த்தைகள் அற்ற மொழியில் முழு புத்தகமும் கரைந்திருக்கும்!!

சில நேரங்களில் சில மனிதர்களின் துயரங்கள் மொழிகள் அற்ற வலிகளாக மௌனிக்கச் செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் அவர்களின் வாழ்வியல் சூழலை எம்மால் மொழி பெயர்க்கக் கூடிய நிலையில் இல்லாத சிறப்புச் சலுகைகள் பெற்ற மனிதர்களாக எம் வாழ்வு இருப்பதால் கூட இருக்கலாம்.''
குருதி வழியும் பாடல் ஏதிலி நாவல் பேசிய அதே மக்களுடைய அன்றாட பிரச்சனைகளை, வாழ்க்கை அனுபவங்களை, துயரங்களை, அவர்களுடைய நிலையில்லா இருப்புகளைப் பேச விளைகிறது.

'காம்ரா-பிணங்கள் வைக்கப்படும் இடம்' கவிதைகள் அகதி வாழ்வின் துயர்களை அவலங்களை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகின்றன. அரசியலால் வஞ்சிக்கப்பட்ட மக்கள் வாழும் வாழ்விடங்களின் பெயரே அவர்களுக்குச் சுமையாக-தூற்றப்படும் சொல்லாக மாறுவது எமது சமூக கொடூரம். அதில் வரும் மூன்றாவது கவிதை ஒட்டு முழுதாக சமூக அம்மத்தைக் காட்டுகிறது.

''என்னை
இன்னும் தொடரும் ஒற்றைக் கேள்வி
எங்க தங்கி இருக்கிறீயள்’
அகதி வாழ்வு''

தன்னை சுற்றியுள்ள மக்களின் அகதி வாழ்வு எத்தனை தூரம் அநீதியானது என்பதையும், அவர்கள் மீது திணிக்கப்பட்ட நியாயமற்ற அன்றாட நிகழ்வுகளைக் கேள்வியாக எழுப்புகிறது. அரசியலால் வஞ்சிக்கப்பட்ட விளிம்பு நிலை என்பது துயரங்கள் எல்லாவற்றிலும் துயரமானது என்பதை வாசகர் எம்மை ஏற்றுக்கொள்ளச் செய்கிறது.

நாடு அற்றவர்களாக வாழும் மக்களின் ஒடுக்கு முறைச் சொற்களைத் தேர்ந்தெடுத்து பொதுவாக அம் மக்களுக்காக ஒரு பெயரைச் சூட்டச் சொல்லிக் கேட்கிறார் விஜிதரன்.

ஸ்ரீலங்கன்,இலங்கையர்,ஈழத்தமிழர்,பள்ளன்,பறையன்,சக்கிலியன்,தோட்டக்காட்டான்,வடக்கத்தியர்,துலுக்கன்,சோனகன்,முஸ்லிம்,துரோகி,ஓடுகாலி,அகதி,ஏதிலி,நாடிலி,
பெண்களின் உழைப்பு, சிரமங்கள் பெறுமதியற்றதாக கடக்கப்படுவதுடன் இது மிக சமூக இயல்பானதாகவும் நோக்கச் செய்யப்படுகிறது. இதற்குள் இருப்பது ஆண் அமையப்பட்டதான சிந்தனையும் அவர்கள் மட்டுமேயான சமூகமாகப் பார்க்கப் படும் பார்வையுமே.!

சிங்கள பேரின ஸ்ரீலங்கன் இலங்கைக்குள் ஒடுக்குபவனாகவும் இன்னொரு தேச மக்களால் தம்மை ஒடுக்கப் பயன்படுத்தும் தீண்டாமைச் சொல்லாகவும் இருப்பதை எம் மண்டையில் அடித்துப் பல கொண்டைகளை ஆட்டுகிறது.

போர் என்றாலும்-அகதி வாழ்க்கை என்றாலும் உழைக்கும் மக்களின் வாழ்வு என்றாலும், இயற்கையை முதலாளிகள் சுரண்டிய பின் எதிர் கொள்கின்ற இயற்கை அனர்த்தப் பிரச்சனைகள் என்றாலும், ஒடுக்கப்பட்ட சாதி என்றாலும், வெள்ளையர்களால் வஞ்சிக்கப்படும் இனவாதம் என்றாலும், ஏன் இன்று இலங்கையில் நடக்கின்ற பொருளாதார நெருக்கடி என்றாலும் இப்படி எந்த ஒடுக்கு முறையை எடுத்துப் பேச முயன்றாலும் அதில் பெண் என்பவள் மிகக் 'குறிப்பான' ஒடுக்குமுறைகளை எதிர் நோக்குகிறார்கள்.

இன்று சமையல் எரிவாயுவுக்கு பாழக்கப்ட்டதாக பொதுவாகப் பேசப்படுகிறது. ஆனால் இதில் பேசுகிற ஆண்கள் எவரும் தம் பெண்கள்தான் அதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஒரு வார்த்தை சொல்லி நான் பார்க்க வில்லை. விறகடுப்பில் பொருளாதார நெருக்கடியின் பின் தாங்கள் (ஆண்கள்) அடுப்பூதுவது போல்தான் பேட்டிகளில் பேசுகிறார்கள். இத்தகைய பொதுமைப்படுத்தல்களால் பெண்களும் மற்றும் LGBTQa+ ஓரங்கட்டப்படுகிறார்கள் அல்லது அவர்களது ஒடுக்குமுறை சுரண்டல் கணக்கில் எடுக்கப்படாமல் தவிர்க்கப்படுகிறது.

பெண்களின் உழைப்பு, சிரமங்கள் பெறுமதியற்றதாக கடக்கப்படுவதுடன் இது மிக சமூக இயல்பானதாகவும் நோக்கச் செய்யப்படுகிறது. இதற்குள் இருப்பது ஆண் அமையப்பட்டதான சிந்தனையும் அவர்கள் மட்டுமேயான சமூகமாகப் பார்க்கப் படும் பார்வையுமே.!

விஜிதரன் கவிதைகள் அந்த மறுக்கப்பட்ட தளத்தைத் தேர்ந்தெடுத்துப் பேசியிருக்கிறது. அவரது கவிதைகள் எல்லாம் பெண் என்ற அடையாளத்துடன் நாடிலிவாழ்வில் அவர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளைப் பேசுகின்றன. இது மிகப் பெரிய பொறுப்பு வாய்ந்த செயற்பாடு. இரண்டு பக்கங்கள் கூர்மையான கத்தியில் நடப்பது போன்றது. கொஞ்சம் சருக்கினாலும் இன்னொரு பக்கத்தால் பதம் பார்த்து விடும். அதாவது பெண் அடையாளத்துடன் பெண்ணுக்கு எதிராகப் பேசும் ஆபத்தைப் பெற்றுத் தந்துவிடும். ஆனாலும் மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் பெறுப்பணர்வுடன் அவர் வார்த்தைகளையும் உள்ளடக்கத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஆனால் அங்குமே எனக்கு பொதுவான சில சிக்கல்கள் இருப்பதாக தோணுகிறது. அதைப் பின் பேசுகிறேன். ஒரு தொகுப்பில் தவிர்க்க முடியாமல் காதலனாகப் பேசுகிறார். அது ‘’அன்புள்ள ரதிக்கு’’கவிதையில். காதல் என்று வரும் போது அவரால் தன்னை இயல்பான இடத்தில் வைத்துப் பேச இயல்பான உணர்தலைப் பெற்றவராகிறார்.


சமூக மறு உற்பத்தியின் முக்கிய பங்காளியான பெண்களைப்பற்றிய எந்த அக்கறையும் அற்று 21 நூற்றாண்டிலும் நவீன தொழில் துரையும் அரசங்களும் வளர்ந்துள்ளமை அண்மைய சமூகத்தின் உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அந்த உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. அந்த வகையில் பெண் கவிதையாக இதை நான் பார்க்கிறேன்..

'பட்டுப் பாவாடையும்
பட்டுச் சீலையும்தான்
எங்கட பாரம்பரியம்
என்று கதைத்து திரிந்த
சித்தப்பனிடம்
பீரியட்சுக்கு இன்னும் துணிதான்
என்றேன்''

பெண் மொழியில் பேசிய அவரது எல்லா கவிதைகளிலும் இந்த கவிதைதான் எண்கு மிகப் பிடித்திருந்தது. இது ஒரு ஆண் மையை சமூக உற்பத்தியையும் அதன் உறவையும் கேள்வி கேட்டு உடைப்பதாக இருக்கிறது.

அடுத்து ஒரு கவிதை மழைக்கால இரவு என்ற தலைப்பின் கீழ். இயற்கை உபாதை என்பது உயிரினங்களுக்கு பொதுவானது என்றாலும் பெண்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்கள் அவற்றை நிறைவேற்றுதற்கு சமூக நிலை ஒன்றாக இருப்பதில்லை. அகதி முகாமில் வாழுகின்ற ஒரு பெண்ணின் நிலையைக் கவிதை இப்படிச் சொல்கிறது…

''மழைக்கால இரவுகளின் வரக்கூடாத ஒன்று
ஒண்டுக்கு!
மழைக்கால இரவுவில் வரக்கூடாத இன்னொன்று
இரண்டுக்கு!
தார்ச்சீட்டு ஓட்டைத் தண்ணீரைப் பிடிக்க வைத்திருந்த
வாளியை எடுத்து
இரு வீட்டு லைன்களுக்குள் இடையேயுள்ள அரையடிப்
பாதையில்
விரிந்து, விரியாத குடையைப் பிடித்து...
கொட்டும் கூரைத் தண்ணீரில் குளித்து
அடிக்கும் குளிரோடு
காட்டுக்குப் போனால்
கழிவுக் குப்பைகளோடு மனுசப் பீயும் பன்னிப் பீயும்
கலந்து கரைந்து கரையாமல் மிதக்கும் தண்ணீரில்
வெடித்த நாற்றத்தையும் தாண்டி
பாவாடை தூக்கி இருந்தால்...
அடிக்கும் மின்னல் அம்மணமாக்கிக் காட்டும்
வருவதை அனைத்தும்
ஒரே நேரத்தில் பேய்விட வேண்டும் என்று
துடித்து...
போயும் போகாமலும்
மீண்டும் மிதக்கும் வீடுகளுக்குள்
அடங்கிப் போவது..
வரக்கூடாத ஒன்றும், இரண்டும் வந்ததினால்!''

கவிதைகள்-கதைகள் பெண் ஒடுக்குமுறை சொற்களைக் கொண்டிருக்கின்றன என்ற வாதம் மிக நீண்ட காலமாகப் பெண்ணிய வாதிகளிடமிருந்து வருகிற ஒன்று. இத்தகைய விமர்சனங்கள் இலக்கியங்களைப் பாதிக்கின்றன, அல்லது படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரத்தில் கைவைக்கும் செயலாக இருக்கின்றன என்கின்றனர் சிலர். பிரதிகளில் படைப்பாளியின் அரசியலை சமூக நிலைப்பாட்டைத் தேடக் கூடாது பிரதியைப் பிரதியாக மட்டுமே படிக்க வேண்டும் என்ற வாதங்களும் இருக்கின்றன.

ஆனால் இரண்டு வகையான பார்வையிலும் பிரச்சனைகள் இருப்பதாகவே நான் பார்க்கின்றேன். படைப்புகளில் பெண் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்கு முறைச் சொற்கள்-சொற் தொடர்கள், பழ மொழிகள், சம்பவங்கள்(இவை எல்லா ஒடுக்கு முறைகளோடும் இணைத்துப் பார்க்கக் கூடியவை) இடம் பெறுவதை இரண்டு வகையானதாகப் பிரித்துப் பார்க்கலாம். பல படைப்பாளிகள் தங்களது சமூகச் சூழலில் இருக்கின்ற எல்லா வகை பிற்போக்கு கூர்களுடனும் வளர்ந்தவர்களாக இருக்கின்றனர். சாதிய வாதம், பெண் ஒடுக்குமுறை, இனவாதம், அவற்றைக் குறைந்த பட்சம் பிரக்ஞையிருந்து அல்லாமல் சமூக அரசியல் அறிவியல் தளத்திலிருந்து கூட கடந்தவர்களாக இருப்பதில்லை.  
சமூக மறு உற்பத்தியின் முக்கிய பங்காளியான பெண்களைப்பற்றிய எந்த அக்கறையும் அற்று 21 ஆம் நூற்றாண்டிலும் நவீன தொழில் துரையும் அரசங்களும் வளர்ந்துள்ளமை அண்மைய சமூகத்தின் உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அந்த உற்பத்தி உறவுகளின் மறு உற்பத்தி பற்றிய கேள்விகளையும் எழுப்புகிறது. அந்த வகையில் பெண் கவிதையாக இதை நான் பார்க்கிறேன்..

முதலாவது ஒரு சாரார் எழுதுபவை தனக்குள் இருக்கின்ற மேற்சொன்ன எல்லாவகை ஒடுக்கு முறை பிற்போக்கு கருத்தியலையும், பெண் வெறுப்பு போக்கையும் தனது படைப்பில் தானே சொல்வதாகச் சொல்கிற போக்கு நிகழ்ந்து விடுவது உண்டு. இவற்றை வாசிக்கும் வாசகர்கள் குறிப்பாக ஒருப்பட்ட நிலையில் இருப்பவர்கள் இலகுவாக அதன் வன்மத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவது, ஏற்றத்தாழ்வுகளையும், ஒடுக்கு முறை- சுரண்டல்களையும் அரசியல் புரிதலுடன் அணுகும் படைப்பாளி. அவர்கள் அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிராக நின்று ஆனால் அச்சமூகம் கொண்டிருக்கிற ஒடுக்கு முறையை, அதன் உறவுகளைப் படைப்பின் பாத்திரங்கள் பேசுவதாக வெளிப்படுத்துவது. அதன் போது அம்மக்களின் மொழியை அப்படியே பயன் படுத்துவது. அதாவது ஒரு பாத்திரம் அது கொண்டிருக்கிற சமூக பண்பாட்டு நிலையிலிருந்து அச்சமூக மொழியாகப் பேசும் போது வருபவை.


இந்த இரண்டாவது செயற்பாட்டை முழுமையாக நாம் படைப்புகளில் புறக்கணிக்க முடியாது என்றே நினைக்கிறேன். விஜிதரனுடைய கவிதைகள் இந்த இரண்டாம் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிற ஒன்றாகப் பார்க்கலாம். ஆனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒடுக்கு முறையைப் பேசும் போது அம்மொழி இன்னொரு ஒடுக்கு முறையை, பாலியல் சுரண்டலைச் செய்யும் மொழியாகவும் இருக்கிறது என்பதையும் எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள முயல வேண்டும். அந்த உருத்தல் பலருக்கு இல்லாமல் இருப்பதற்கு அவரவர் கொண்டிருக்கின்ற சலுகைகள் (privilege) காரணமாக இருக்கலாம் என்றே நினைக்கிறேன்.

இருப்பதை இப்பத்தாகச் சொல்லும் அதே வேளை ஒரு ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேசுகிற படைப்பு இன்னொரு வகையில் இன்னொரு ஒடுக்குமுறையை உளவியல் கட்டமைப்பில் பிரச்சாரம் செய்கிற போக்கை எப்படி மாற்றி அமைப்பது, அவற்றை உள்ளார்ந்த உடைப்பது என்பது பற்றியும் சிந்திக்கலாம். அதாவது பாத்திரம் கொண்டிருக்கிற ஒடுக்கு முறையையும் பாதிரம் பேசும் மொழி கொண்டிருக்கிற ஒடுக்கு முறைகளையும் ஒரே தளத்தில் எப்படிக் கலைவது அல்லது கேள்விக்குட்படுத்துவது என்று யோசிக்கலாம். இவற்றைச் செய்வது படைப்புகளில் படைப்பாளி எதிர் கொள்கின்ற சவாலாக இருக்கலாம்.

விஜிதரன் தன் கவிதைகளைப் பெண் அடையாளத்துடன் பேச முனைந்திருப்பது நல்ல விடயம். ஆனால் ஒரு பெரியாரின் பெண்ணிலையிலிருந்து சிந்திக்கின்ற பெண்ணாகப் பேசியிருக்கிறாரா என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. பெண் ஒடுக்கு முறையைப் பரிதாபமாகப் பார்க்கும் ஒரு ஆணாக எடுத்துக் கொள்ளலாம். இது எதிர்மறையானது அல்ல. ஆனால் பெண் அடிமைத்தனத்தைக் கண்ட பெரியாரின் கோபம்தான் மிகப் பொரிய மாற்றத்தைப் பெண்கள் மத்தியில் செய்தது. மிகை உணர்வோ பொன்கள் மீதான பரிதாபமோ அல்ல. ஒரு ஆணால் அதைச் செய்வது மிகக் கடினமான வேலையாக இருக்கலாம். ஆனால் கவிதைகளில் மட்டுமல்ல எந்த ஒரு கலைப்படைப்பிலும் அவற்றைச் செய்ய முடியாதிருக்கும் என்றும் நான் நம்ப வில்லை.

பெண்ணாக இருந்துமே பெரியார் போல் பலராலும் சிந்திக்க முடியவில்லை என்பதே யதார்த்த உண்மை என்பதையும் நான் இங்கு மறுக்க வில்லை. பல பெண் கவிஞர்களால் கூட அவர்களது கவிதைகளில் பரவலாகப் பெரியாரின் அக்கினிக் குஞ்சு உணர்வை அதிக அளவில் எட்ட முடிய வில்லை என்றுதான் நான் படித்தமட்டில் சொல்வேன். கவிதை என்பது பெரும்பாலும் தன்னிலை உணர்விலிருந்து எழுகிற எதிர்வினையாற்றல்.

பெண்களுக்கு இயற்கையாகக் கிடைத்த கொடைகள் சக்தி மிக்கவை. அவற்றைத் துயராகவும், வெறுக்கும் ஒன்றாகவும், தீண்ட தாகததாகவும், இரண்டாம் பட்சமானதாகவும், பரிதாபம் கொள்ளத்தக்கதாகவும், சித்தரிப்பது சமூகமே. இந்த இடத்தில்தான் சமூகத்தின் கருத்தியல் மட்டம் மிகப் பலமாக இருப்பதும் அதை மாற்றியமைப்பதில் எமது பங்கு மிகக் குறைவாக இருப்பதும் உணரப்படும் தருணம் என்று நினைக்கிறேன்.

''அத்தனை முறை மறுத்தும்
காதலின் சத்தியமாய்
காணொளியில் புணர்ந்தாய்
என்னை
நாட்டுக்கு வந்த உன் நண்பன் அதைக்காட்டி
துகிலுரிக்கச் சொல்கிறான்
என்னை''

இதைப் படிக்கும் போது உணர்வு தளத்தில் ஒரு பரிதாப உணர்வு உண்டாவது உண்மைதான். ஆனால் மறு பக்கத்தில் செயலற்ற பெண்ணாக(passive) மறு காட்டுவதாக இருக்கிறது. இன்னுமொரு கவிதையையும் உதாரணமாகச் சொல்லலாம்.

''இன்று
வாசிக்க இயலாக் கவிதையை
அன்று எழுதினேன்
என்னவென்றே விளங்கவில்லை
கிறுக்கப்பட்டதை என்னால் கூட
வாசிக்க முடியவில்லை
“அவன் தொட்ட அருவருப்பு”
என்ற இடைவரி ஒன்றும்
“இனி இவனோடா வாழ்வு?”
என்ற வரியும் அப்படியே இருக்கின்றது
கொஞ்சம் பொறுங்கள்
அவர் கூப்பிடுகிறார்''

குருதி வழியும் பாடல் கவிதைத் தொகுப்பில் பெரும்பாலும் இந்த பிரச்சனை இருப்பதாகத் தெரிகிறது. விஜிதரனுடைய ஏதிலி கதைகளில் வருகின்ற பெண் பாத்திரம் கொண்டிருந்த ஆளுமை கவிதைகளில் காணாமல் போயுள்ளது போன்று உள்ளது. காரணம் கவிதைகளில் நாம் ஒருவகை அதீத உணவுகளுடன் பேச விளைவதாக இருக்கலாம். ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் இல்லை. ஆனால் அவை எம்மையும் அறியாமல் வந்து விடக்கூடிய ஒரு அமைப்பைக் கவிதைகள் பெற்றிருக்கின்றனவோ!?

பசி-உண்பதாய் ஒரு கனவு, மாவீரர் நாள் பலியிடப்பட்ட பிணங்கள் விற்பனைக்கு ஆகிய கவிதைத் தொகுப்பில் வந்திருக்கின்ற கவிதைகள் ஈழ தேசிய விடுதலைப் போராட்டம் கொண்டிருந்த கொண்டிருக்கின்ற சிக்கல்களை- அவலங்களைப்- பிற்போக்குத்தனங்களைப் பேசுகின்றன. தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கில் வாழும் ஈழ அகதிகளை இப் போராட்டம் தேவையற்றவர்களாகக் கருதுகிறது அல்லது கணக்கில் எடுப்பதில்லை என்கிறார். அம்மக்களுக்காக எந்த தமிழ்த் தேசிய வாதியும் வாய் திறப்பதில்லை. ஆமைக்கரி அரசியலிலிருந்து பனைமரத்தில் வவ்வாலுக்குச் சவால் விடும் பலர் இம்மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை என்கிறார்.

ஓடிப்போ பிள்ளாய்
இன்று கைதிகள் கணக்கெடுப்பு
செக்கிங்காம்
கார்டை முன்னால் வைக்க வேண்டும்
ஒரு மணிநேரத் தாமதத்திற்கு
அரைநாளை வெட்டிவிடுவான்
அந்த சூப்பவைசர் அருதலி
கஷ்டம்தான் பிள்ளாய்
இன்றும் ப�ொறுத்துக் கொள்ள வேண்டும்
உன் அப்பா எங்கே என்று கேட்டு
என் மார்பைப் பார்த்து சிரிக்கும்
ஆர்.ஐ. வெத்தலைக் கரை வாயனையும்
பானை வயிறு சதைப் பிண்ட க்யூ பிராஞ்சையும்
கடைசியாகப் பிள்ளாய்
விடுதலை கோசத்தில் நம் குரல் கேட்காது
ஆனால் நீ கவலைப் படாதே
தூரோகிகள் பட்டியலில்
நமது பெயர்தான் முதலில் வரும்
கஷ்டத்தைச் சொன்னதற்கு

இம்மக்களின் பிரச்சனையை தீர்ப்பதில் அடி வேராக இருக்கும் தமிழ் நாட்டு அரசாங்கம் மற்றும் ஈழப் போராட்த்தை தம் நலன்களுக்காக பயன் படுத்திக் கொண்ட இந்திய ஆளும் வர்கம் இவைகளை கவழதையில் கேள்விகள் கூட கேட்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார் என்பது எம்மால் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றே.

சில நேரங்களில் சில மனிதர்களின் துயரங்கள் மொழிகள் அற்ற வலிகளாக மௌனிக்கச் செய்து விடுகின்றன. இதற்குக் காரணம் அவர்களின் வாழ்வியல் சூழலை எம்மால் மொழி பெயர்க்கக் கூடிய நிலையில் இல்லாத சிறப்புச் சலுகைகள் பெற்ற மனிதர்களாக எம் வாழ்வு இருப்பதால் கூட இருக்கலாம்.''

 விஜிதரனுடைய கவிதைகள் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுடையதாக இருக்கிறன. மிக இலகுவான மொழியில் வாசிக்கும் போது சிக்கல்கள் இல்லாமல் புரிந்து கொள்ளக் கூடியனவாக இருக்கின்றன. எந்த ஒரு ஒடுக்கு முறையையும் அனுபவிப்பவரைத் தாண்டி மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். புத்தகத்தை வாங்கிப் படித்து அம்மக்களின் வாழ் நிலையைப் புரிந்து கொள்ள முயல்வோம். விஜிதரன் தோழருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.