சந்தர்ப்பம்! சந்தர்ப்பம்!! பிழைப்பு பிழைப்பு வளர்ச்சி! வளர்ச்சி!!

 


எம்முடைய நேர்மை, அறம், சமூக-அறிவு ஏற்படுத்திய அரசியல் புரிதல், தன்மானம், சூடு சொரணை, பகுத்தறிவு, சக மனித நேயம், போன்ற உணர்வு- பண்புகளில் நாம் சருக்கிடாமலும் விலகிடாமலும் இருப்பதற்கா வாழ்வதே வாழ்வு என்று வாழ்பவர்கள் நாம்.

பொய்-புரட்டு எவர் முதுகை சொறிந்தாலாவது எமக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வது, எவரையாவது குப்புறத் தள்ளி வீழ்ந்தவர் பிடரியில் ஏறி நின்று எம் நிலைகளை எட்டுவதற்கு முயல்வது, எவரையாவது காக்கா பிடித்து உண்மைக்குப் புறம்பாக நடந்து பிழைத்துக் கொள்வது என்பவை எமக்குச் சுட்டுப் போட்டாலும் வராது.

அது போக எம்மை இத்தகைய பேர் வழிகள் என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருப்போம். அதிகாரத்துக்கு சொறிந்து பிறரை வீழ்தி எமது வளர்ச்சி இருந்து விடக் கூடாது என்பத்திலும் எம் மன நிம்மதியும் எம் ஒட்டு மொத்த வாழ்வின் பொருள் இருப்பதாக வாழ்பவர்கள்- அப்படி வளர்க்கப்பட்டவர்களும் கூட..

அதுவல்லாமல் யாராவது எம்மை கருதி விடும் சந்தர்ப்பத்தில் மேற் சொன்ன அத்தனையும் சுயம் கொண்டெழுந்து கோபப்படும். இல்லையே, நாம் அப்படி இல்லையே! என்று உடல் பொருள் 'ஆவி..' எல்லாம் கொதிக்கும். எம் குணம் எமக்குத் தெரியும் அது எப்படித் தரம் குறைய முடியும் என்ற தன்னம்பிக்கையில் வெடிக்கும்.

உடைமைச் சமூகத்தின் உச்ச உடைமை பொருள்-புகழ் என்றாகிப்போன நிலையில் கூட அதைச் சுற்றியே சூழும் மனிதர்கள் மத்தியிலும் இத்தகைய பண்பை இறுக்கப்பற்றல் எமக்கான தன்மையாகக் கொண்டிருப்போம். ஏன் என்றால் அதுவாகத்தான் நாம் இருக்கிறோம். எமது நிமிர்வும் திமிரும் அதுதான்.


நம் பேச்சும், எழுதும், நடக்கும் ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பெடுக்கத் தயங்குவதில்லை. எந்த இடத்திலும் எவர் முன்னும் அதற்கான பொறுப்பு கூறலை மனதில் கொண்டே நடப்போம். அதனால் எமக்கான அறத் துணிச்சல் அலாதியானது.


ஆனாலும் அறியாமல் சில சமயங்களில் தவறுகள் நடந்ததை உணர்ந்தால், கூனி குறுகி வெட்கப் பட்டுப் போவோம். அந்த மனிதர் முன் தலை நிமிர்ந்து பார்க்கவே கூச்சம் கொள்வோம். கண்கள் அந்த அவமானத்தை உணர்த்தும். 'தவற்றை மாற்றிக் கொள்ள, ஏற்றுக் கொள்ள, மன்னிப்புக் கேட்கத் தயங்க மாட்டோம்'. ஏன் என்றால் நாம் ''அதுவாகவே வாழ'' விரும்பாதவர்கள்.

ஊரில் - 'சிவராஜாவின் பிள்ளைகள் அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்' என்று குறிப்புணர்த்தும் மேற் சொன்ன குணங்களில் எம் தந்தையரைக் காண விரும்புபவர்கள். அது வேண்டி நிற்பது பணமோ அதிகாரமோ செல்வாக்கோ சாதியோ அல்ல. முழுக்க முழுக்க சக மனிதனை நம்மைப்போலவே கருதும் மனமும் அது கொண்ட ஓர்மையும் மட்டுமே. அது எம்மையும் எவரிடமும் இறக்காது மற்றவர்களையும் நம்மில் வைத்துத் தாழ்த்தாது.

அது ஒன்றும் அத்தனை சிரமமான ஒன்றல்ல, ஆனால்
ஏற்றத்தாழ்வுகளும் பாகு பாடுகளும் கொண்ட இச் சமூகத்தில் அது கடுமையானதுதான். எனவே, சொல்லுக்கும் செயலுக்கும் அது கொண்டு வாழ்வதற்கும் பெரும்பாடு படுவோம். இருந்த போதிலும், அதற்காக நாம் கொடுக்கும் விலைகள் அதிகம். ஆயினும் அது பற்றிக் கவலைப்படுவதில்லை.
கண்முன்னே வாய்ப்புகள் நழுவிச் செல்லும். வயிற்றுப்பாட்டுக்கான வேலை கூட பறிபோகும். பெண்ணாக இருந்தால் 'பெண்' என்ற சுரணை சூட்டால் காதல் இழப்போம். இணை என்பது சாத்தியமின்றில் கல்யாணம் துறப்போம். இப்படிப் பல....

ஆனால் இங்குச் சிலரைப் பார்க்கும் போது எமக்கு அடி வயிறு புரட்டி வாந்தியே வந்துவிடும் போல் கிடக்கிறது. முன்னுக்கு நின்றால் மூஞ்சியாலேயே எடுத்து விடுவேன் தள்ளி நில்லு! என்று கண்ணாலேயே சொல்லும் அளவு அவர்களது செயற்பாடுகள் அருவெறுப்பானதாக இருக்கும்.

பொய் புரட்டு சுத்து மாத்து ஒட்டியே கிடக்கும். அன்று அப்படிச் சொன்னோமே இன்று இப்படி நடக்கிறோமே! வாய்மை பற்றி எந்த சொட்டுச் சுண்ணாம்பு கூச்சமும் இருப்பதில்லை இவர்களுக்கு.

நீதி நியாயம் அந்த மண்ணாங்கட்டி பற்றி எல்லாம் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். தன்மானம் பக்கத்து தட்டின் தராசில் மேலே பறக்கும்... 🙂

சந்தர்ப்பம்! சந்தர்ப்பம்!! பிழைப்பு பிழைப்பு வளர்ச்சி! வளர்ச்சி!! முன்னேற்றம்! முன்னேற்றம்!! அவ்வளவுதான்.
அடுத்து வரப்போகும் இடத்திற்காக வாழ்ந்து விட்டுப் போவதா வாழ்க்கை!. வாய்கிறது என்றால் நேர் எதிர் தராசில் பறப்பதுவா கொள்கை!!

எழுத்துக்கும் நடத்தைக்கும் தொடர்பில்லை, கோசத்துக்கும் கொள்கைக்கும் பக்கமில்லை, கொள்கைக்கும் வாழ்க்கைகும் உறவில்லை, ஏதோ அவர்களும் இருகிறார்கள் என்று காட்டுகிறார்கள் இருந்து விட்டுப் போகட்டும்.. :😊
கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.