கோணங்கியுடைய பாலியல் குற்றங்களும் பதட்டமடையும் ஜெ.மோகனும்

 


கோணங்கியுடைய பாலில் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கிய உலகில் இருப்பவர் மனங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அச்சம் என்னவாக இருக்கிறது என்றால் இந்த இலக்கிய ஆசான்களின் மீது பக்தர் கூட்டத்தின் பக்தியில் பாதிப்பு வந்து விடுமோ என்ற பதட்டமாகவே நான் பார்க்கிறேன். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் அவசரத்தின் அவசியம் அதில் இருப்பதாகத்தான் இருக்கிறது.


கோணங்கியுடைய  பாலியல் நடத்தை தொடர்பில் பல இளைஞர்கள் சமூக வளைத்தளண்க்களில் தொடர்ச்சியாக தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அது தொடர்பில் கூட்டறிக்கையும் வெளிவந்துள்ளது.

கூட்டறிக்கை:


எந்த ஒரு அதிகார சக்திகளுக்கும் பக்தர் கூட்டம் அவசியமான ஒன்று. அந்த வட்டத்திற்குள்ளேயே வட்டமடித்து அதற்குள் வெளியே சிந்திக்காமல் வைத்திருப்பதில்தான் அவர்களது கிரீடம் பாதுக்கப்படுகிறது. இது இலக்கிய படைப்பாளிகள் என்று தமக்குத் தாமே ‘படைப்புக் கொள்கையை’ புகழாகச் சூட்டிக் கொள்கின்றவர்களிடமும் கொஞ்சமும் குறைந்ததில்லை.

பாலியல் சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் ஏமாற்று செய்பவர்கள் மிக மோசமான சமூக விரோதிகள் என்றால் இவர்களுக்கு ஏதாவது ஒரு விடயத்தில் ஆதரவு கரம் கொடுப்பவர்கள் ஆபத்தானவர்கள்.இத்தகைய ஆதரவு கரங்கள் பல வகைப்படும். தத்தமது நலன்கள், பாராட்டுகள் அங்கிகாரங்கள், விற்பனைகள் கூட்டுப் பாலியல் களவுகள், எதிர்கால எதிர் பார்ப்புகள், தத்தமது அரசியல் திருகு தாளங்களின் பயம், என்று பட்டியல் பெரிது.

முன்னையோர்கள் பின்னையவர்களுக்கு இத்தகைய ஏதாவது ஒன்றுக்காகச் சொறிந்து கொண்டிருப்பார்கள். சொறியின் சுகம் அனுபவித்தவர்களுக்கு இவர்கள் சிலரின் பாலியல் குற்றங்கள் 'உறவுச் சிக்கலாக' தனிமனித உறவுப் பிரச்சனையாக பொது வெளிகளில் பல்டி அடித்து விடுகின்ற அபத்தத்தைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கதைசொல்லிகள் என்பவர்கள் புனிதர்கள், மிகப் பொரிய ஆளுமைகள், ஆசான்கள், தெய்வங்கள், என்று யார் நினைத்துக் கொள்வார்கள் என்று பார்த்தால் அதைத் தாண்டிய ஒரு வாசிப்பு அற்றவர்கள். மிக மிக இலகு படுத்தப்பட்ட இரசனைக்குள் மிதந்து கொண்டு அதையே எல்லா வற்றுக்குமான தீர்வாக ,சாதனையாக நினைப்பவர்கள்தான்.

இந்த கதை சொல்லி- கலைச் செல்வர்கள் எதைக் காணிக்கையாகக் கேட்டாலும் கொடுத்து விடுவது இந்த இரசனை தலைக்கேறிய பக்கத்தார்களின் மன நிலையாக ஆக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறான பக்த்த மன நிலை பலவாறாகக் கட்டியமைக்கப்படுகிறது. சினிமாகரர்கள் மீது, விளையாட்டு வீரர்கள் மீது மன்னர் குடும்பங்கள் , அரசியல் வாதிகள் என்று தொடர்கிறது. இவர்கள் எவரும் மக்களின் நலன்களுக்காக உழைப்பவர்கள் அல்ல.

கலை இலக்கிய அறிவார்ந்த செயற்பாடுகள் எல்லாம் தனிஉடமை மனநிலையிலேயே சுற்றிச் சுழல்கிறன. ஏன் என்றால் அவற்றுடன் புகழ் என்ற மிகப் பெரிய மயக்கம் இருக்கிறது. அதை தத்தமது குடும்ப தனிச் சொத்தாக்கவே விரும்புகின்றனர். எனவே இத்தகைய ஒன்றைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்றால், அவர்கள்(பக்தர்கள்)இவர்களுக்கு எதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த 'எதாவது செய்து கொண்டிருக்க வேண்டும்' என்பதற்குள் பல வகைப்பட்ட விடயங்கள் இருக்கின்றன.

வைரமுத்து தொடங்கி இன்று கோணங்கி என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இது ஈழ இலக்கிய வட்டத்தில் குறைந்த ஒன்றல்ல. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வெளியே வந்து குற்றம் சொல்லவில்லையே ஒழிய, ஈழ இலக்கிய மற்றும் எழுத்து உள்ளக வட்டத்தில் கதையாடலாக அறிந்த மைனர் குஞ்சுகள் பலர் உளர்.

அதைத்தாண்டியும் கட்சி, அமைப்புகள், மற்றும் பல்கலைக்கழம் என்று பல பாலியல் குற்றவாளிகளையும் கடந்த ஆண்டுகளில் முக நூல் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளதையும் நாம் அறிவோம்.( அவர்கள் தொடர்பாள அறிக்கைகள் லிங்குகள் சில பகிரப்படுகின்றன.)

இத்தகைய பாலியல் சீண்டல்கள், துஷ்பிரயோகங்களுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது இவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் வெளியே பேச மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். அந்த அப்படையில் தெரிவு செய்யப்படுவதால் அவர்களில் மிகச் சிலரே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியே வந்து தமக்கு நடந்த பாலியல் மோசடிகளைப் பேசுகின்றனர். அப்படியானால் இப்படியான பாலியல் பொறுக்கிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப் பேர்கள் இன்றும் மௌனமாக இருக்கக் கூடும் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.


ஆண்களுக்குக் கற்பு என்ற ஒன்றில்லை என்று சமூகம் எண்ணுவதால் இதே போன்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் இச் சமூகத்தை எதிர் கொள்வதற்கும் ஒரு ஆண் எதிர் கொள்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. இந்த கற்பு என்ற கற்பிதம் ‘பெண் குழந்தைகளையும்’ விடாது துரத்துவதால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பெண் குழந்தையைக் கொன்றும் விடுகின்ற கொடூரம் நிலவுகிறது. எமது கலாச்சார காவலர்கள் அறிவு கொட்டத்தனமாக குத்துவோம் வெட்டுவோம் என்று பொங்குகின்ற போது  விக்டிமை அழித்துவிட்டால்தான் தாம் தப்ப முடியும் என்று குற்றவாளிகள் நம்புகின்றனர். ஆண் குழந்தைகளுக்கு கலாச்சார காவர்களின் ‘கற்பு தொல்லை இல்லை என்பதானால் நல்ல வேளை ஆண் குழந்தைகளுக்கு இந்நிலை வருவதில்லை.

ஆனால் உடல் உள பாதிப்புகள் என்பது ஆண்களுக்கு ஒன்றும் குறைவதல்ல. மாறாக மிக மோசமான சீண்ட குறுகிய கால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய உளவியலோடு தொடர்பான ஒன்றாகவும் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து தமக்கு நடந்த அநீதியைக் கூறும் போது அவர்களையே குற்றவாளியாக்கி குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் அயோக்கியத்தனம் எம் சமூகத்தில் இருப்பதற்குக் காரணம் பாலியல் தொடர்பான உடல் உளவில் கல்விப் புகட்டல் இல்லாமையாக இருக்கிறது. குறிப்பாகத் தடித்த நிலவுடைமை ஆம்பளத்தனத்தோடு பாலியல் தொடர்பான விடயங்களை அணுகுவதாக இருக்கிறது.

அருகில் இருக்கின்ற பாலியல் குற்றவாளிகளைத் தடவி விட்டுக் கொண்டு தொலைவில் இருப்பவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஒரு வகை சந்தர்ப்பவாத தந்திரம். இதை எம் இலக்கிய அரசியல் வட்டங்களில் கண்கூடாகப் பார்க்க முடியும்.

வைரமுத்து மீது பாலியல் குற்றச் சாட்டு வந்த போது காப்பாற்ற வந்த திராவிட குஞ்சுகள்.. மயூரன், நடடேசன் மீது குற்றச் சாட்டுகள் வந்த போது காப்பாற்ற வந்த பெண்ணிய, இலக்கிய,அரசியல் பிரபலங்களையும் நாம் அறிவோம். அந்த பட்டியலில் இப்போது கோணங்கியைக் காப்பாற்ற இலக்கிய ஜாம்பவான் ஜெ.மோ களத்தில் குதித்திருக்கிறார். மஞ்சல் பத்திரிகை எழுத்தாளர் சாரு மீதும் பல குற்றச் சாட்டு இருப்பதையும் இவரைக் கூட காப்பாற்ற, கொண்டாட எமது இலக்கிய குஞ்சுகள் தயங்குவதில்லை. ஆக இத்தகைய கும்பல்கள் எல்லாம் தன் சுகத்திற்கும் புகழுக்கும் பாலியல் அரிப்புக்கும் சமூகத்தையும் எழுத்தையும் ஒரே நேர் கோட்டில் நின்று உருட்டிக் கொண்டிருப்பவர்களாகும். சமூக வலைத்தளங்களும் மீ டு போன்ற விடயங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அரணாக உள்ளது. இதை உடைத்து ஒரு இலக்கிய புனித கிங்டோமை கட்ட விளைகிறார் ஜெ.மோகன். அவர் மட்டுமல்ல மற்றும் பலர் உள்ளனர்.

//இலக்கியவாதியிடம் மிக அரிதாக அதீதப் பிறழ்வுகளும் இருக்கலாம். அதுவும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஒரு பாமரனிடம் அது இருந்தால் அது மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதும்தான். ஏனென்றால் அவன் எதையும் உருவாக்குபவன் அல்ல. இலக்கியவாதியிடம் அவனுடைய படைப்பு சக்தியின் மறுபக்கமாகவே அது உள்ளது. அதன் பொருட்டு அவன் மன்னிக்கப்படவேண்டும், ஏற்கப்படவேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் அதன்பொருட்டு அவன் பாமரர்களால் வேட்டையாடப்படலாகாது. அப்புரிதல் ஒரு சமூகத்தில் சிலரிடமாவது வேண்டும்....//

https://www.jeyamohan.in/180455/

இப்படிச் சொல்கிறார் ஜெ.மோ. அதாவது மிக மோசமான பாலியல் சுரண்டலைக் கூட தான் நியாயப்படுத்தி எழுதி விடுவதால் அதைச் சரி என்று நம்பவும் ஒரு பக்த கூட்டம் இருக்கிறது என்பதுதான் அது. அதாவது கோணங்கியுகி தனது பாலியல் சுரண்டலைச் செய்ய எத்தகைய 'இலக்கிய குரு சிஷ்ய' மன நிலையை உருவாக்கிப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்ப படுகிறதோ அதே போன்ற ஒன்றுதான் மேலே ஜெ.மோகன் நாடிபிடித்து பார்த்திருப்பதும்.

இதைச் சிலர் ஜெ.மோ மொழி கொண்டு நியாயப்படுத்துவதாக நினைக்கின்றனர். சாதாரண மக்களுக்கு பழக்கமில்லா மொழியைக் தேர்ந்தெடுத்து வலிந்து - புகுத்தி வாசகர்களை அதன் மூலம் தன்னை ஆசானாக நிலை நிறுத்துவது அவரது கலை. என்றாலும் இங்கு மொழியைத் தாண்டி பக்கத்தார்களின் விசுவாச மனநிலையை நாடிப் பிடித்து பழகிய தைரியத்தால் இதைச் சொல்வதாகவே படுகிறது. ஜெ.மோகனின் இந்த மொழி பச்சையாக அதிகாரம் அற்ற மக்களை இழித்துரைக்கிறது. சாதராண சமூக புரிதலில் கூட பாமரர் என்பவர் உழைக்கும் வர்க்கமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இவரோ பாமரர்கள் எதையும் உருவாக்குபவர் அல்ல என்கிறார். இப்படியானவர்களின் எழுத்தும் செயற்பாடும் யாருக்கானதாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இலக்கியவாதியின் மறுபக்கமாகப் பிறழ்வு உள்ளது என்கிறார். இது ரேப் பண்ணியவனைக் கல்யாணம் கட்டிக் கொடுக்கச் சொல்லும் பஞ்சாயத்துத் தீர்ப்பு போன்ற்று சமாதானப்படுத்தல் ஆகும். பக்தர்கள் கடவுளிடம் பய பக்தியுடன்தான் நடக்க வேண்டுமே ஒழியக் கடவுளைக் கேள்விகேட்கக் கூடாது என்கிற மனநிலை.

அடுத்து அவர் எழுத்தாளர்-பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச் சாட்டை வம்படித்தலாகப் பார்க்கிறார். இதுவும் அவரின் இலக்கிய அரசியல் நிலைப்பாட்டை விமர்சிப்பவர்களையும் 'வம்படித்தலுக்குள்' கொண்டு வருகிறார்- ஏன் என்றால் அவரும் பிரபலமாக இருக்கிறார். அதே கட்டுரையில் மேலும் இரண்டு பாலியல் குற்றச்சாட்டு உள்ளவர்களை அடையாளப்படுத்துகிறார் அவரே.(ஜெகதீஸ்_மணல்வீடு ஹரிகிருஷ்ணன் ) இவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டை விடுத்து அவர்கள் தமக்கு எதிராகச் செயற்பட்டதால் இலக்கிய இரசனை இல்லாத பல வகை உணர்ச்சிகள் கொண்ட எளிய மனிதர் என்கிறார். ஆக இலக்கிய இரசனை இல்லாத சாதாரணவர்கள்தான் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப் பெற்று பாலியல் அத்து மீறல்களில் ஈட்டுபவர்களா? ஆனால் எமக்குத் தெரிந்த இலக்கிய கள நிலவரம் இதற்கு முரணானது இல்லையா. சாதாரண எளிய மக்கள் இத்தகைய பொறுக்கித்தனங்களில் ஈடு படுவதுமில்லை அதற்கு அவர்களுக்கு நேரமிருப்பதுமில்லை. இருக்கின்ற 10 இலக்கிய மற்றும் பிரபல குஞ்சுகளில் எட்டுப் பேர் இத்தகைய காவலிகளாக இருக்கின்றனர். இந்த உண்மையை மறைப்பதற்குக் காரணம் இலக்கிய 'பூச்சாண்டி' தனத்தில் அடி விழுந்து விடுமோ என்ற உள் பயம்தான்.

கோணங்கியையும் அவருடைய பாலியல் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டும் என்றால் பொது மன்னிப்பு கேட்டால் போதும் என்று விட்டு விடலாம். ஆனால் சங்கம் வைத்து முற்போக்கு வளர்ப்பவர்களாகச் சொல்பவர்கள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், இது போன்ற குற்றாச்சாட்டுகள் எழும் போது பாதிக்கப்பட்டவர்கள். மேலும்   பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதையும் அவர்களது முற்போக்கு எழுத்து செயற்பாடுகளில் மிக முக்கிய ஒன்றாக புரிந்து கொள்ள வேண்ம்.

                                                                                              -பாரதி சிவராஜா-https://www.jaffnafashion.com/2023/03/blog-post.html

https://www.jaffnafashion.com/2023/05/blog-post.html 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.