வெந்து தணிந்தது காடு- மதி சுதா

 

தி சுதாவுடைய வெந்து தணிந்து காடு 27/06/2023 அன்று லண்டனில் திரையிடப்பட்டது. நாளை 09/07/2023 மீண்டும் திரையிடப்பவிருக்கிறது.


திரைத்துறை தொடர்பில் எனக்கிருந்த இயல்பான ஆர்வம் ஒரு பக்கமிருந்த போதும் படம் தொடர்பில் ஏற்பட்டிருந்திருந்த சர்ச்சை மற்றும் சில சோசியல் ஊடகங்களில் இப்படம் தொடர்பில் பேசப்பட்ட ஆச்சரியப்படத் தக்க கருத்துக்கள் படத்தைப் பார்த்தாக வேண்டும் என்று தூண்டியது. மதிசுதாவுடைய சில குறும்படங்களைப் பார்த்து அவருடன் கருத்து பரிமாறிக் கொண்ட நட்பு போன்றன நானிருக்கும் இடத்திலிருந்து மிகத் தொலைவில் இப்படம் திரையிடப் பட்ட போதும் பார்த்தே ஆக வேண்டும் என்று சென்று பார்த்தேன்.

இங்குத் திரைப்படத்தைத் திரையிட்டவர்கள் அதற்கான திட்டமிடல்களை முன் கூட்டியே ஏற்பாடு செய்யாமை படத்தை ஆர்வத்துடன் பார்க்கச் சென்றவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் படம் பேசப்பட வேண்டிய விரிந்த தளத்தையும் அது மட்டுப்படுத்தியிருக்கக் கூடும்.

படத்திற்குள் வருகிறேன். படம் பார்க்கத் தொடங்கும் ஒரு விநாடிக்கு முன் கூட, நான் எண்ணியிருக்க வில்லை படம் தொடர்பில் கருத்து பகிர்வேன் என்று. படம் ஆரம்ப காட்சியிலேயே முடிவெடுத்து விட்டேன் எழுதித்தான் ஆக வேண்டும் என்பதை. மர இலைகளை ஊடுருவும் சூரிய ஒளிக் கற்றைகளைக் கைப்பேசி கமரா மிக அழகாக அள்ளிக் கொண்டு ஒரு நீண்ட பயணத்தை இடை வெட்டாமல் நகர்த்துகிறது(one shot). மண்,மரம் இடம்பெயர் வாழ்வு, பதட்டம் பழகிக் கழித்த மனிதர்களாய் குடும்ப அங்கத்தினர், அவசரமாக அமைக்கப்பட்ட குடிசைகள் என்று காட்சிகள் கச்சிதமாக நகரும் வினாடிகளில் பாடம் பேசப்பட்டதற்கான கரணம் புரிந்து போகிறது.

போரின் விளைவைச் சுமந்த மேலும் சுமக்க போகின்ற ஒரு குடும்பத்தின் கதை. கதைக்கேற்ற வலியைப் பார்வையாளருக்கு முடிவில் ஏற்படுத்தும் என்ற பாரத்தை முதலிலேயே ஏற்றிக் கொண்டே பார்க்கத் தொடங்கினேன். எம் மீதான போரின் வலி,இழப்பு, துடிப்பு, கசப்பு,வெறுப்பு ,பயம் இயலாமை போன்றவற்றை அம்மக்களின் யதார்த்தமாக எடுக்கும் போதுதான் கதைக் கரு பலம் பெரும். அந்த திசையில்தான் திரைக்கதை நகரும் நகரவும் வேண்டும். இல்லை என்பவர்கள் போரை அனுபவிக்காதவர்கள் மட்டுமல்லாமல் போரின் உயிர்த் துடிப்பை அரசியல் சுய நலத்திற்காக அடைமானம் வைக்கும் பச்சைப் பித்தலாட்ட காரர்கள்.

நீதி நியாயம், போர் அறம், மனித குணம் அற்றவர்களின் வெறியின் உச்சத்தில் சிக்கி உயிரைக் காக்க ஓடிக் கொண்டு இருக்கும் மக்களிடம் நீங்கள் யாராவது ஒலிவாங்கியை, கமராவை நீட்டி கருத்துக் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும் பதிலின் தணல். அந்த வார்த்தைகளுக்கு நீங்கள் ஒரு அரசியலையும் கற்பிக்க முடியாது. அண்ணாமலையைக் கூப்பிட்டு அண்ணம் தண்ணீர் உண்டு 13 ஆவது திருத்த அரசியல் பேசுவது போன்றதல்ல போரின் அவலத்தில் சிக்கிய மக்களின் உணர்வு என்பது.

இப்படத்தின் முக்கியத்துவம் ஒரே இடத்தில் பல விடயங்களைக் காட்சிப்படுத்தி முழுப் படமாகவும் ஆக்கியிருப்பதுதான். ஒரே இடத்துக்குள் கிட்டத்தட்ட 1.20 மணி நேரத்தைக் கைப்பேசி கமராவில் உறைய வைத்ததில்தான் படத்தின் வெற்றி உள்ளது.

சலிப்பை ஏற்படுத்தாத கதை ஒளி- ஒலி-எடிட்டிங்-வசனம்- நடிப்பு என்று எங்கள் உணர்வுகளைத் தூக்கி நிறுத்தி வைத்துக் கொள்கிறது படம். பங்கருக்குள் செல் அடிக்கு தப்ப ஒழிந்திருக்கும் காட்சிகள், செல்லடிக்குப் பயந்து புலிகள் மற்றும் ஆமியுடைய கட்டுப்பாட்டை நோக்கி குடும்பம் பிரியும் போது ஏற்படுகின்ற நோ,பயம் இயல்பாய் எம்மை தொற்றிக் கொள்கிறது.

எந்த நேரமானாலும் குண்டுகள் வந்து வெடிக்கும் என்ற பயத்தை எம்மை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப் பெற்றுள்ளது. ஒரு கதை அது எம் மக்களுக்கு நடந்த கனதியைத் திரைமொழியில் தனக்குக் கிடைத்த வசதிகளைத் திறமையாகப் பயன்படுத்திச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்தினுடைய திரை இயக்க தொழிலைச் செய்யும் ஒருவர் எல்லா வகை அரசியல் அறிவும் தேர்ச்சியும் பெற்றவராக இருந்தாக வேண்டிய அவசியமில்லை. அத்துடன் நாம் நினைக்கின்ற அரசியலைத்தான் பேச வேண்டும் என்ற அவசியமும் இல்லை. திரைப்படத்தில் இருக்கின்ற அரசியலை நாம் எப்படிக் கண்டடைவது என்பது படம் தொடர்பில் பேசப்படுகின்ற விவாதிக்கப்படுகின்ற போது உருப் பெற்று வரும் மக்களரசியலில்தான் புரிந்து கொள்ள முடியும். மறுப்பும் ஏற்பும் கருத்தியல் தொடர்பானதாக நகர்த்திச் செல்லவேண்டிய ஒன்று. எந்த ஒரு பிழையான-சரியானதான கருத்தியலையும் பேசு பொருளாகும் போதுதான் அதன் தாக்கத்தை சமூகம் உள்வாங்கும். தடை என்பதற்குள் சமூக விரோத செயலை மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் சமூக விரோத காட்சிகள் வசனங்கள் திரைப்படங்களில் வரும் போது வாய் பேசாதவர்கள் மாறுபட்ட அரசியல் தொடர்பில் பொங்குவது சமூக மாற்ற அக்கறை அரசியலில் இருந்து இல்லை என்பது மட்டும் புரிகிறது.

படம் பேசப்பட காரணம்:

வெந்து தணிந்தது காடு பேசப் பட்டுக் கொண்டிருப்பதற்காக விடயங்கள் என்று நான் நினைப்பவை. கைப்பேசி கமராவில் படமாக்கப்பட்டிருப்பது. குறைந்த தொழில் நுட்பத்தோடு, வளத்தோடு படத்தை உருவாக்கிய இயக்குநரின் ஆளுமை. நடிகர்களின் நடிப்புத் திறன். கதை- தமிழ் மக்கள் எதிர் கொண்ட, எதிர் கொள்கின்ற இன அழிப்பு மனங்களைக் கருத்தில் எடுத்த கதைக் கரு, எடுபடும் என்ற நாடிப்பிடிப்பு!. எம் அரசியலில் இன அழிப்புக்குப் பின்னாலான சர்ச்சைக்குரிய அரசியல் விவாதப் பொருளை ஆங்காங்கு வசனங்களில் காட்சிகளில் வைத்தமை. ஈழ மக்களுடைய விடுதலைப் போராட்டம், இன அழிப்பு, தேசியப் பிரச்சனை தொடர்பில் இதுவரைக்கும் பார்க்கக் கூடிய பேசக் கூடிய படம் எதுவும் எங்கிருந்துமே இதுவரைக்கும் உருவாகாமை. இவை எதுவுமே போதிய அளவு பேசப்படாமல் நீதி பெறாமல் உலக ஆளும் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகின்ற அவலத்தைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மை கதை சீண்டிப் பார்க்கின்ற உளவியலைச் செய்கின்றமை.

இனி படத்திலுள்ள சிக்கல்களுக்கு வருகிறேன். ஒரு படத்துக்கான கதையைப் பல காரணங்களுக்காகத் தெரிவு செய்யலாம். அதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை இயக்குநரே முடிவுசெய்கிறார். போரால் தீண்டப் பூமியில் போரின் விளைவை- அழிவைப் பேசும் புனைவுகள், திரைப்படங்கள், சிறு கதைகள், ஓவியங்கள், கவிதைகள் என்று அவரவர் வசதிக்கும் வாய்புகும் திறமைக்கும் ஏற்றால் போல் உருவாக்குவது வழமை. ஆனால் எம் மக்களின் இன அழிப்பின் பின் வருகின்ற இத்தகைய விடயங்கள் வெறும் திட்டமிட்ட ஒரு செயற்பாடாக இருப்பதைப் பற்றி எனக்கு சில கருத்துகள் இருக்கச் செய்கிறது. (இதை நான் பொதுவாகத்தான் குறிப்பிடுகிறேன்.)

மற்றது இந்தப் படம் தொடர்பில் வந்த விமர்சனத்தை மதிசுதா எதிர் கொண்ட விதம் எனக்கு மிக ஆச்சரியத்தைத் தந்தது. விமர்சனத்தை எதிர் கொள்ள மதி 'அட்டாங்க நமஸ்காரமாக' விழுந்து படத்தினுடைய காட்சி-வசனங்களை மாற்றியது மட்டுமல்லாமல், அதற்காக சில விளக்கங்களையும் திரைப்பட வெளியீடுகளில் படம் முடிந்த பின் அனுப்பி வாசிக்க வைத்திருந்தார். இது என்ன புதுவகை ஈழ திரைத்துறை கலாச்சாரம் என்று எண்ணிச் சிரித்துக் கொண்டேன். இது யாரோ ஒரு சிலரின் அங்கிகாரத்திற்காக ஈழ கலை இலக்கிய அரசியல் இயங்க வேண்டி நிர்ப்பந்தம் திணிக்கப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?

பாரதியாரின் துணிவைச் சொல்கின்ற பாடல் வரிகளின் ஒரு பகுதியைப் பெயராகச் சுட்டிக் கொண்ட வெந்து தணிந்தது காடு இயக்குநர் இப்படி நடந்து கொள்வதா என்றிருந்தது.

புத்தரின் படம் உள்ள சிறு பதாகை பங்கரில் தொங்க விடப்பட்டிருப்பது பிழையானது. சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாளர்களின் பண்பாட்டு ஆதிக்கத்தைக் கடுமையாக எதிர் கொள்கின்ற இக்காலகட்டத்தில் புத்தரை இயல்பாக ஏற்றுக் கொள்வது போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற வாதம். அந்த படத்தில் இஸ்லாமிய மத அடையாளம் தவிர்ந்து மற்ற மூன்று மத கடவுள்களின் படங்கள் காட்சிகளில் இடம் பெற்றிருந்தது. உயிர் அவலத்தின் போது கடவுள் நம்பிக்கையில் அதிக ஈடுபாடுடைய மனிதர்கள் எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்வது இயல்பான ஒன்று.

சொல்லப்போனால் தூரப் பயணங்களின் போது வீதி ஓரங்களில் உள்ள சூபி முஸ்லிகளுடைய அடக்க தளங்களை வணங்குதல், மாதா கோயில்களை வணங்குதல், மரத்தடி முற்சந்தி கடவுள்களைக் காவல் தெய்வங்களாக எண்ணி வணங்கிச் செல்லுதல் இயல்பு. ஏன் என்றால் பயணங்கள் ஆபத்தானவை. அதே போன்று பேருந்துகளிலும் இதை மிகச் சாதாரணமாக இலங்கையில் பார்க்க முடியும். அந்த அடிப்படையில் புத்தருடைய படம் எனக்கு உறுத்தலை ஏற்படுத்த வில்லை. ஒரு அடையாளப்படுத்தல் என்ற வகையில் தங்களைப்போலவே சிறு பான்மையான சக இனமான முஸ்லிகளை அடையாளப்படுத்தும் படம் தவிர்க்கப்பட்டமை பெரும்பான்மை வாதத்திற்கு விசுவாசத்தைக் காட்டலில் வேண்டும் என்றால் அடக்கி கொள்ளலாம்.

இன்னுமொர சர்ச்சை செல்லடிப்பது பற்றிய உரையாடல். இத்தகைய விடயங்களுக்கு இயக்குநர் கொடுக்கின்ற விளக்கங்களைக் கேட்டுத்தான் படத்தின் இருப்பு நிர்னைக்கப்படும் என்பது படம் தொடர்பில் சமூகத்தில் ஏற்படுத்தக் கூடிய உரையாடலை அடித்து மூடுவதற்கான ஒரு வன்முறை செயற்பாடு. நான் இந்த நோக்கத்திற்காகத்தான் வைத்தேன், அந்த நோக்கத்திற்காகத்தான் வைத்தேன், அவர்கள் இதை அப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது, இவர்கள் இதை இப்படிப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வைத்தேன் -என்ற இயக்குநரின் சுய விளக்கங்கள் ஒரு திரைப்படம் பார்க்கவிருக்கும் பார்வையாளரின் இரசனையையும் அறிவையும் விமர்சன உளத்தையும் குறைத்து எடை போடும் செயற்பாடு.

இப்படி படம் தொடர்பில் வருகின்ற விமர்சனத்திற்கெல்லாம் இயக்குநர் விளக்கம் சொல்லிக் கொண்டே போகிறார். எனக்கு அவற்றை எழுதவே சலிப்பை ஏற்படுத்துகிறது. தன்னை ஒரு 'தூய' தமிழ்த் தேசிய வாதி என்று நிரூபிக்கிறேன் என்று தன் நிலை விளக்கங்களின் மூலம் அடித்து சத்தியம் செய்து கொண்டிருக்கிறார் மதி. அதிலும் குறிப்பாகப் புலம் பெயர்ந்தவர்கள் சிலர் ஈழ மக்களின் கலை இலக்கிய அரசியலில் வன்முறை பாங்கான தலையீட்டைச் செய்வதும், நல்ல பாம்பு போல் படமெடுத்தாடுவதும் என்ன வைகை புலம் பெயர் விமர்சன பண்பு என்று புரியவில்லை.

படத்தில் சில மிகைப்படுத்தல்கள் இருந்தன. வைத்தியராக வரும் மதி சுதா இறுதி காட்சியில் பங்கரிலிருந்து வெளியே சென்று நன்றாக இருந்த தனது சட்டையை மாற்றி செல்லடியில் இறந்து கிடந்த ஒருவரின் உடையை எடுத்து அணிந்து கொண்டு வருவது போன்ற காட்சி-வசனம்.  அப்போசன் ஆன பெண்ணின் கணவன் குழந்தையின் மீதான மிகை உணர்வில் தூண்டப் பெறுவது போன்றதான காட்சி. அப்படி நடைபெறாதவர்களுக்குக் குழந்தைகள் மீது கருணை பிறக்காதா என்ன.? சமூக குற்றவாளின்  பதுங்கு  கூடாராமா ஈழத்து கலை இலக்கியம்!!

இங்கு இன்னும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிலத்தில் உள்ளவர்கள் புலத்தில் வெளிச்சம் கிடைக்கிறது என்பதற்காக வெளிநாடுகளில் சேர கூடாத இடங்கில் சேர்கிறார்கள்.! ஈழத் தமிழ் அறத் தேசியத்தினால் பாலியல் குற்றச் சாட்டுகளுக்காகப் பங்கருக்குள் பச்சமட்டையடி வாங்கியிருக்க வேண்டியவர்களையெல்லாம் வைத்து தங்களது கதைப் புத்தகங்களை, கவிதைப் புத்தங்களைத் திரைப்படங்களை வெளியீடு செய்யவைப்பது அருவெறுக்க தக்கது. இந்தப் பொம்பளை பொறுக்கிகள் பற்றிய தரவுகளை, ஆதாரங்களைக் கொடுத்தும் இவர்களுக்கு வெளிசமும் விளம்பரமும்தான் முக்கியம் என்பதால் அவை தட்டிக் கழிக்கிறார்கள். பின் நாம் ஏன் இவர்களுடைய புத்தகங்களைத் திரைப்படங்களை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவானது.

பாலியல் மோசடி செய்தவர்கள் தமிழ்த் தேசியத்தை, இலக்கியத்தை வைத்து தங்களது தப்புக்களை மறைக்கவும் தப்பவும் இது வசதியாயுள்ளது. இங்குக் கும்பதிற்கு குடுப்பம் அமைப்புகளும் இணைய ரிவி சணல்களும் இருக்கின்றன. அவைகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், விசுவாசிகளுக்கும், தம் ஊராருக்கும், தம் சாதி சனங்களும் தடவி விட்டுக் கொள்கின்ற போக்கில் இயங்கி வருகின்றன. பின் தங்களை சமூகத்திற்கானவர்கள் என்றும் சொல்லியும் கொள்கின்றனர்.

இப்படம் பற்றி நான் இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மதி சுதாவுடைய பல கருத்துகளில் எனக்குப் பலத்த முரண்பாடுகள் இருந்திருக்கிறது. சமூக விடுதலை- முற்போக்கு சிந்தனை அரசியல்களில் கடுமையான விமர்சனம் உள்ளது. ஆனால் இந்த படம் நான் பார்த்த ஈழம் தொடர்பான திரைப்படங்களில் என்னைப் பாதித்த ஒன்று. எம் மீதான இனப்படுகொலை தொடர்பில் ஈழத்தமிழர் ஒருவர்தான் உலகத் தரத்திலான ஒரு படத்தை எடுக்க முடியும் என்ற திடமான எண்ணத்தையும் தந்தது. ஈழமக்கள் தொடர்பில் தமிழ் நாட்டிலிருந்து வந்த எந்த சினிமாவும் தராத பாதிப்பை இப்படம் ஏற்படுத்தியது. மேலும் தமிழ் நாட்டு இயக்குநர்கள் எவராலும் இனிமேலும் சாத்தியமில்லை என்பதையும் சொல்லிச்சென்றது. இது வெறும் மிகைப்படுத்தல் அல்ல என்பதை என்னளவில் நான் நம்புகிறேன்.

மதி சுதா மற்று நடித்த பங்குப் பற்றியவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

               -பாரதி சிவராஜா-

https://blog.ezulal.com/2023/03/blog-post_14.html?m=1

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்ப வேண்டிய அவசியமில்லை...

கர்ணன்

இட ஒதுக்கீட்டுக் கோரிக்கை சமூக நீதிக் கோரிக்கை.