யார் பாசிஸ்டுகள்- யார் பயங்கரவாதிகள்:
யார் பாசிஸ்டுகள்- யார் பயங்கரவாதிகள்:
கமாசின் படுகொலைகளும் இஸ்ரேலின் கொலைகளும் ஒன்றுதான், இரண்டும் வன்முறைதான் என்று நிறுவ முயல்வது அரசியல் குருட்டுத்தனம் மட்டுமல்ல உள்ளார்ந்த இருக்கின்ற இஸ்லாமிய வெறுப்புணர்வும்தான்.
முதலாளித்துவ சன நாயக அரசுகள் நேரடியான அடக்குமுறை கருவிகளையும் மறைமுகமான சித்தாந்த வன்முறை கருவிகளையுமே கொண்டு மக்களை ஆளுகின்றன. இஸ்ரேல் அரசின் பயங்கரவாதமும் கமாசின் விடுதலைக்கான பயங்கரவாதமும் ஒன்றல்ல.
இடதுசாரிகள் என்பவர்களால் ஒருவகை விலாங்கு மீன் அரசியல் பேசப்படுகிறது. இவர்களுக்குப் புலம் பெயர் தமிழர்களுக்குத் தலையையும் இங்கிலாந்து மேட்டுக்குடி தொழிலாளர் வர்க்கத்திற்குப் பாலஸ்தீன விவாகரத்தில் வாலையும் காடி பிழைக்க வேண்டிய அரசியல் வறுமை உள்ளது.
இவர்கள் ஹமாசையும் விடுதலைப் புலிகளையும் ஒப்பிட முடியாது என்கின்றனர். எந்த ஒரு அமைப்பையும் இன்னும் ஒரு அமைப்போடு அப்படியே பொருத்தி நிறுத்தி விவாதிப்பது அறிவற்ற செயல். அமைவிடம், உலக பொருளாதார-அரசியல்,வரலாறு,காலம், மையநோக்கு, இலக்கை நோக்கிய பயணம்,மக்களின் விருப்பு வெறுப்பு என்று பலவிடயங்களில் அவை ஒன்றுபட்டும் முரண்பட்டும் இயங்கக் கூடும். ஆனால் விடுதலை நோக்கில் இரண்டும் ஒன்றுதான், இஸ்ரேலும் இலங்கையையும் ஒன்று அல்ல ஆனால் இன அழிப்பிலும் ஆக்கிரமிப்பிலும் வன்முறைகளிலும் ஒன்றுதான். இரண்டுக்கும் குறிப்பானதும் பொதுவானதுமான ஒற்றுமைகள் வேற்றுமைகள் உண்டு.
வன்முறைச் செயற்பாடுகளை வரவேற்க முடியாதே ஒழிய ஆகிரமிப்பாளாரையும் ஒடுக்கப்படுபவர்களின் செயற்பாடுகளையும் ஒரேமாதரியானதாக அணுக முடியாததும் கூட. ஆயுத முனையில் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தையும் செய்யும் போது கண்டு கொள்ளாமல் இருக்கும் போது, ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டவர் எதிர் வினையாற்றுவதை அரசியல் போராட்ட முறையில் உள்ள சிக்கலாகப் பார்த்து விமர்சிக்க முடியுமே ஒழிய அதை வைத்து பயங்கரவாதம் என்று ஒப்பிட்டு முத்திரை குத்த முடியாது.
கமாஸ் இன்னுமொரு நாட்டிற்குள் புகுந்து அங்குக் குண்டு வைத்து மக்களைக் கொல்ல வில்லை. ஆக்கிரமிப்பிற்கும் அதிகாரத்திற்கும் தொடர்பில்லாத மக்களைக் கொள்வதை அவை நோக்காக வைத்திருக்கவும் இல்லை. விமர்சனத்தோடுதான் கமாசை அணுக வேண்டுமே ஒழிய எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே குடுவைக்குள் போட்டு ஒரு குலுக்கு குலுக்கக் கூடாது. வரலாற்று இயக்கத்தை(dialectics) எமது இலகுத் தன்மைக்காக நாம் செய்கின்ற இந்த செயற்பாடுகள் படுமோசமான வரலாற்றுத் தவறுகளை விட்டுச் செல்லும்.
பெரும்பான்மை கருத்தியலில் மயக்கம்:
விடுதலைப் புவிகளை பாசிஸ்ட்டுகள் என்பது எத்தனை பெரிய வரலாற்றுச் சமூக அறிவில் புரிதலற்ற வாதமோ அதே போன்ற ஒன்றுதான் இதுவும். எம்மவருக்குள் வாழும் சுழல் எம் அரசியலை மாற்றி அமைத்து விடுவதைப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. இது மார்க்சியத்தின் 'வாழ் நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது' என்பது போன்ற பொருள் முதல் வாதமல்ல. 'பெரும்பான்மைவாதம்' பற்றியது. நாம் சிங்கள பெரும்பான்மை அரசியல் கருத்தியலுக்கு ஏதோ ஒரு வகையில் பழியாகிப் போய்விடுவது. இது அவர்களுடன் அவர்களுடைய(சிங்கள) தளங்களில் வேலை செய்கிற போது எம்மையும் அறியாமல் எமக்குள் நிகழக் கூடும். அதே போன்று இங்கிலாந்து மேட்டுக் குடி தொழிலாளர்களின்( white aristocratic working class ) அரசியலுக்குள் சோசலிசத்திற்காகவே வேலை செய்தாலும் கூட அத்தகைய பெரும்பான்மை மன நிலைக்கு அடிமையாகிப் போய்விடுகிறோம்.
முழுமையான ஒப்பிடலும்-மறுத்தலும் போன்ற ஒன்றுதான் இதுவும். பொருளாதார வாதிகளுக்கு இவற்றுக்கு மேல் சிக்கலான விடயங்களில் தலை வேலை செய்வதில்லை. 30 வருடங்கள் அசை போட்டதை அப்படியே துப்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
முழுமையான ஒப்பிடலும்-மறுத்தலும் போன்ற ஒன்றுதான் இதுவும். பொருளாதார வாதிகளுக்கு இவற்றுக்கு மேல் சிக்கலான விடயங்களில் தலை வேலை செய்வதில்லை. 30 வருடங்கள் அசை போட்டதை அப்படியே துப்பிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
இன்னும் சில தமிழ்த் தேசிய வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் நிலையோ மதில் மேல் பூனை. கமாசைப் புலிகளோடு ஒப்பிட்டுப் பேசுவதா விடுவதா என்ற குழப்பம். ஒப்பிட்டால் சர்வதேசத்தை 'தமிழ்த் தேசியத்திற்கு' பகையாக்கிவிடுமோ என்ற உலகமகா strategy அவர்களுடையது. இதற்காகக் கமாசைத் தாலிபானுடன் ஒப்பிட்டு 'மத அடிப்படை வாத அமைப்பு' என்று பச்சையாக மடை மாற்றுவார்கள். இவர்களுக்கு அமெரிக்காவின் சன நாயகத்திலும் மனித உரிமை விடயங்கள் மீதும் அப்படியொரு மயக்கம். யூதர்கள் போல் அமெரிக்காவின் வர்த்தகத்திலும் அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தி தமிழ் ஈழம் அமைப்பதுதான் அவர்களின் அதி உயர் ராஜதந்திர அரசியல்.
அமெரிக்காவின் உள்நாட்டு-வெளி விவகார கொள்கை, பற்றிய அறிவை அந்தளவுதான் வளர்த்து வைத்துள்ளனர் அவர்கள்.
போலச் செய்தல்
போலச் செய்தல்
இஸ்லாமியப் போராட்ட அமைப்புகள் என்றாலே அவை இஸ்லாமிய மத அடிப்படை வாத கொள்கையைத்தான் கொண்டன என்ற ஒரு விம்பம் பொதுவாகக் கட்டப்பட்டிருக்கிறது.
மேற்குக் கரையிலும் காஸாவிலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு கமாஸ். இவர்கள் 2006 ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பாலஸ்தீனத்திலும் காஸாவிலும் செல்வாக்கைப் பெற்றனர். அதாவது அங்குள்ள மக்களால் வெற்றி பெறச் செய்யப்பட்டனர்.
இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை தமது தேசத்திலிருந்து அழிப்பது என்பது அதனது தொடக்கச் சாசனத்தில் உள்ளது. ஆனால் இஸ்ரேலை அழிக்க முடியுமா அல்லது இனி அதை அழிப்பது சரிதானா என்ற கேள்வியை அவர்களிடம் முன்வைப்பது முட்டாள்தனம். ஏன் என்றால் நாளாந்தம் அவர்களின் மண்ணையும் மக்களையும் இழந்து கொண்டு நிற்கும் நிலையிலிருந்தே அவர்களின் கொள்கை சாசனம் அமைந்திருக்கிறது. தமிழ்த் தேசியம் சாத்தியமா என்று புலிகளிடம் கேட்டிருந்தால் எப்படி அபத்தமாக இருந்திருக்குமோ அப்படியான ஒரு கேள்விதான் இது. இவர்களின் அந்த வரிகளுக்காக
நீங்கள் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று விழிப்பதைக் கொள்கையாக வைத்திருப்பதுதான் ஆச்சரியம் .
பெரும்பான்மை வாதத்துடன் இழுபட்டுப் போக ''போலச் செய்தல்'' மனோபாவம் இது.
(இப்பதிவை மிக நீண்ட கட்டுரையாக பின் எழுத முயற்ச்சிக்கிறேன். இதை ஒரு முக நூல் பதிவாக எழுதியதால் இப்பபோது தவிர்க்கிறேன்.)
பாரதி சிவராஜா-
கருத்துகள்
கருத்துரையிடுக